5. மலையை விரும்பிய காலேப்:

மோசேயின் கட்டளையை ஏற்று பாலும், தேனும் பாயும் கானான் தேசத்தை வேவுப் பார்க்க சென்ற 12 பேரில், இந்த காலேப்பும் ஒருவர். இவரை குறித்து வேதத்தில் குறைவான காரியங்களையே காண முடிகிறது என்றாலும், இவர் ஒரு மலையை விரும்பி கேட்டதாக படிக்க முடிகிறது.

கானான் தேசத்தை வேவு பார்க்க சென்றவர்களில் யோசுவாவும், மேற்கூறிய காலேப்பும் மட்டுமே நல்ல செய்தி கொண்டு வந்தனர். இது தொடர்பாக, மோசேயினால் காலேப் ஆசீர்வதிக்கப்பட்டதாக (யோசுவா:14.9) காண முடிகிறது. இந்நிலையில் மோசேயின் மரணத்திற்கு பிறகு, இஸ்ரவேல் மக்களுக்கு கானான் நாட்டை பிரித்து கொடுக்கும் பொறுப்பை யோசுவாவிடம் தேவன் அளிக்கிறார். அவரிடம் தான் தனக்கு மலையை தர வேண்டும் என்று காலேப் கேட்கிறார்.

கானான் தேசத்தை குறித்து வேவுப் பார்க்க சென்ற போது, தன்னோடு வந்த நண்பர் என்ற உரிமையை, காலேப் அங்கு காட்டுவதாக தெரியவில்லை. மோசேயின் மீது எவ்வளவு மரியாதை வைத்திருந்தாரோ, அதே மதிப்பும் மரியாதையும் யோசுவாவிற்கும், காலேப் செலுத்துகிறார். இதில் இருந்து தனக்கு மேலே வைத்திருக்கிற அதிகாரியின் வார்த்தைக்கு காலேப் மதிப்பு அளிப்பதை காணலாம்.

இன்று பல கிறிஸ்தவர்களும், தங்களின் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள தேவ ஊழியர்களை மதிப்பதில்லை. இது குறித்து கேட்டால், அவரை பற்றி எனக்கு தெரியாதா? இவரெல்லாம் இரட்சிக்கப்படுவதற்கு முன்னால் எப்படி இருந்தார் என்று எனக்கு தெரியும் என்று தேவையில்லாத காரியங்களை கூறி, மற்றவர்களின் விசுவாசத்தையும், நம்பிக்கையையும் கூட இழக்கும்படி செய்கிறார்கள். இது தேவனுக்கு சித்தமான காரியம் அல்ல. ஏனெனில் எப்படிப்பட்ட பாவிகளையும், தேவன் மன்னிக்கும் போது, நம்மால் ஏன் அவர்களை மன்னிக்க முடிவதில்லை? மன்னிக்க தான் வேண்டும் என்கிறது வேதம்.

அதேபோல நாம் போகும் சபையின் தேவ ஊழியக்காரர்களிடம், தேவனால் நாம் ஒப்படைக்கப்பட்டுள்ளோம். அவர்கள் நம்மை விட வயதிலோ, பணத்திலோ, அறிவிலோ மற்ற எந்த காரியத்திலோ குறைவுள்ளவராக இருக்கலாம். ஆனால் அவர் தேவனால் நியமிக்கப்பட்டவர் என்பதை நாம் மறந்து போக கூடாது.

காலேப்பின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், தனக்கு வாலிப வயதில் இருந்து பெலன் இப்போதும் உண்டு என்று தானாக செயல்பட துவங்கவில்லை. தேவ ஊழியருக்கு அதை தெரிவித்துவிட்டு, அவரது அனுமதியுடன் செயல்படுகிறார். இதனால் அவர் விரும்பிய எபிரோன் மலையை பெற முடிந்தது.

காலேப்பை போல நமக்கும் தேவன் ஆவிக்குரிய பெலத்தையும், வரங்களையும், தாலந்துகளையும் அளித்திருக்கலாம். அதை வைத்து கொண்டு, சொந்தமாக செயல்படக் கூடாது. நாம் செய்ய நினைக்கும் ஊழியங்களை குறித்து, நமக்கு மேலே உள்ள தேவ ஊழியர்களிடம் கூறி அவரது அனுமதியுடனும், ஜெபத்துடன் ஊழியங்களை செய்ய வேண்டும். அப்போது அது நமக்கு ஆசீர்வாதமாக அமையும். ஜெயமும் கிடைக்கும்.

காலேப் கைப்பற்ற நினைத்த மலையின் பெயரான எபிரோன் என்பதற்கு, சகோதர ஐக்கியம் என்று பொருள். இதில் இருந்து ஆவிக்குரிய வாழ்க்கையில் நமக்கு அளிக்கப்பட்டுள்ள சகோதர அன்பின் சிறப்பை நாம் உணர்ந்து கொள்ள முடியும். நம் வாழ்க்கையில் சகோதர அன்பை சம்பாதிக்க, பாதுகாத்து கொள்ள, ஏனாக்கின் ராட்ஷர்களை போன்ற பிசாசின் வல்லமைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதை சாதாரணமான ஒரு கிறிஸ்துவ வாழ்க்கையின் மூலம் பெற முடியாது. காலேப்பை போன்ற ஒரு தீவிரமான விசுவாசம் தேவை.

சகோதர அன்பிற்கு இவ்வளவு பெரிய போராட்டம் இருப்பது குறித்து பெரும்பாலான கிறிஸ்தவர்களுக்கு தெரியாது என்பது தான் வருந்தத்தக்க செய்தி. இது போன்ற சகோதர அன்பை நாம் பாதுகாத்து கொள்ள, கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட போது, நமக்கு இருந்த ஆதி அன்பின் அனுபவத்திற்குள் நாம் வர வேண்டியது அவசியம்.

நமக்குள் இரட்சிக்கப்பட்ட நாட்களில் இருந்த தேவனுக்கான வைராக்கியம், தரிசனம், வாஞ்சை ஆகியவற்றை தினமும் புதுப்பித்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் நாம் பாதுகாக்க வேண்டிய, சகோதர அன்பிற்கு எதிரான வல்லமைகளோடு, நம்மால் போராடி ஜெயிக்க முடியும். இந்த சகோதர அன்பு கொண்டவர்கள் கூடி ஜெபிக்கும் போது, அங்கே ஒருமனம் உண்டாகும். ஒருமனம் இருக்கும் இடத்தில், தேவன் எழுந்தருளுவார். நம் ஜெபங்களுக்கும் எளிதாக பதில் கிடைக்கும்.

ஜெபத்திற்கு அடிப்படையான இந்த சகோதர அன்பு இல்லாமல், பகையையும், விரோதத்தையும் வளர்த்து கொண்டு, சபையில் உள்ள மற்றவர்களிடமும், ஊழியர்களிடமும் கோபத்தை வைத்து கொண்டு, கர்த்தர் என் ஜெபத்தை கேட்பார் என்று காத்திருப்பதில், எந்த பயனும் கிடைக்காது.

எனவே காலேப்பை போல மலையை (ஊழியத்தை) ஆசையோடு கேட்போம் (செய்வோம்). ஆனால் அதை நமக்கு தேவனால் அளிக்கப்பட்டுள்ள ஊழியர்களின் அனுமதியுடன் செய்வோம். தனித்து செயல்படாமல், சகோதர ஐக்கியத்தை கெடுக்கிற காரியங்களை நம் வாழ்க்கையை விட்டு அகற்றுவோம். தேவ அன்பால் சகோதர ஐக்கியத்தில் வளர்ந்து, கூடி ஜெபித்து, தேவ சமூகத்தில் பதிலை பெற்று கொள்வோம். காலேப் போல, தேவனுக்காக நிலைநிற்போம்.

(பாகம் – 6 தொடரும்)

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்