5.

மாற்கு சுவிசேஷத்தில் நாம் தியானித்து வரும் லேகியோன் பிசாசு பிடித்த மனிதனின் மற்றொரு குணத்தை குறித்து, லூக்கா:8.27-ல் வாசிக்கிறோம். அங்கே, அவன் வஸ்திரம் எதுவும் அணியாமல் இருந்தான் என்று காண்கிறோம். இதை மாற்கு சுவிசேஷத்தில் குறிப்பிடவில்லை.

இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்ட நமக்கு, இரட்சிப்பு ஒரு வஸ்திரமாக அளிக்கப்பட்டுள்ளது என்று வேதம் கூறுகிறது. இதை நாம், முடிவு வரை பாதுகாக்க வேண்டியுள்ளது. ஏனெனில் அனுதினமும் கிறிஸ்துவிற்குள் புதுப்பிக்கப்படும் போது, இந்த வஸ்திரமும் புதுப்பிக்கப்படுகிறது.

இரட்சிப்பின் வஸ்திரத்தை இழந்து போனால், நம்மால் பரம ராஜ்ஜியத்திற்குள் செல்ல முடியாது. இயேசு கூறிய ஒரு உவமையில் (மத்தேயு:22.11) கல்யாண வஸ்திரம் அணியாமல் வந்த ஒருவரை கையும், காலும் கட்டி அழுகையும் பற்கடிப்பும் உள்ள புறம்பான இருளில் போடப்பட்டதாக வாசிக்கிறோம். எனவே இந்த இரட்சிப்பின் அனுபவத்தை நாம் காத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் இந்த வஸ்திரத்தை நாம், அழுக்கு இல்லாமல் பாதுகாக்க வேண்டும். அப்படி பாதுகாக்கும் போது நாம், தேவனோடு நடக்க முடியும் என்று வெளிப்படுத்தின விசேஷம்:3.4-ல் காண்கிறோம். அவர்களுக்கு வெண் வஸ்திரம் அளிக்கப்படும் என்று அங்கு காண்கிறோம்.

இந்த வஸ்திரத்தை நாம் இரட்சிக்கப்படும் போது, இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும் என்றாலும், அதை அழுக்கில்லாமல் பாதுகாக்க வேண்டுமானால் கருத்தாக ஜெபிக்க வேண்டியுள்ளது. அப்போது அந்த வஸ்திரம் இயேசுவின் வஸ்திரத்தை போல, பிரகாசிக்கும் (மத்தேயு:17.2).

இதை தவிர, நமது தேவன் மகிமையை வஸ்திரமாக அணிந்துள்ளதாக வேதத்தில் காண்கிறோம். எனவே நாம் பரலோகத்திற்கு செல்லும் போது, அவரை போல மாறுவோம் என்பதால், அவரது மகிமையை உலகில் இருக்கும் போதே பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

மேற்கண்ட இரட்சிப்பின் வஸ்திரம் இல்லாதவனாக லேகியோன் பிசாசு பிடித்த மனிதன், தேவனுடைய சத்தத்தை கேட்டு தோட்டத்தில் ஓடி ஒளிந்து கொண்ட ஆதாம், ஏவாளை ஆகியோரின் நிலையில் இருந்து வந்துள்ளான். இதில் ஆதாம், ஏவாள் ஆகியோருக்கு தங்களின் நிலையை குறித்து தெரிந்து இருந்தது. ஆனால் இந்த மனிதனுக்கோ அது தெரியாமல் இருந்துள்ளது.

இயேசு வந்த பிறகும், தன்னிடம் உள்ள அந்த குறையை அவரிடம் தெரிவித்து இரட்சிப்பின் வஸ்திரத்தை பெற முடியாத வகையில், பிசாசுகள் அவனை முழுமையாக ஆட்கொண்டிருந்தன. இன்று சுவிசேஷத்திற்கும், தேவ பிள்ளைகளுக்கும் விரோதமாக கிரியை செய்யும் பலரின் நிலையும் இந்த நிலையை ஒத்ததாக காணப்படுகிறது.

எனவே, நமக்கு அளிக்கப்பட்ட இந்த விலையேறப்பட்ட இரட்சிப்பின் வஸ்திரத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அப்படி நாம் அதை இழக்கும்பட்சத்தில், ஆவிக்குரிய நிலையில் அந்த லேகியோன் மனிதனை போல நிர்வாணமாக மாறுகிறோம். இவ்வளவு நாட்கள் நம் வாழ்க்கை இந்த நிலையில் இருந்தால் கூட, இப்போது இயேசுவிடம் திரும்பி வந்தால், வெளிப்படுத்தின விசேஷம்:3.18-ல் காண்பது போல, உங்களுக்கு வெண் வஸ்திரத்தை அளிக்க, அவர் காத்திருக்கிறார்.

லேகியோன் பிசாசு பிடித்திருந்த மனிதனை, இயேசு விடுவித்த போது அவன் வஸ்திரம் தரித்து ஆண்டவருடைய பாதம் அருகே அமர்ந்திருந்தான் என்று லூக்கா:8.35-ல் வாசிக்கிறோம். இதுபோல தேவனிடம் நம்மையே ஒப்படைக்கும் போது, நம்மில் உள்ள அந்த இழந்து போன இரட்சிப்பின் வஸ்திரத்தை அவர் திரும்ப அளித்து, நம்மை புத்தி தெளிந்தவனாக மாற்றுகிறார்.

எனவே நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. நாம் இரட்சிக்கப்பட்ட காலத்தில் நமக்குள் இருந்த சந்தோஷம், சமாதானம், அந்த ஆவிக்குரிய எழுப்புதல் ஆகியவை இப்போதும் இருக்கிறதா?

நமக்கு தேவனால் அளிக்கப்பட்ட இரட்சிப்பின் வஸ்திரம் அழுக்கு, கறை எதுவும் இல்லாமல் பரிசுத்தமாக உள்ளதா? இல்லை அதை இழந்திருக்கிறோமா? நம் ஆவிக்குரிய வஸ்திரத்தில் கறை, அழுக்கு இருந்தால், இயேசுவின் இரத்தத்தினால் சுத்திகரிப்பை பெற்றுக் கொள்வோம். வஸ்திரத்தையே இழந்திருந்தால், அவரிடம் மன்னிப்புக் கேட்டு மீண்டும் அதை பெற்றுக் கொண்டு பாதுகாப்போம். அப்போது ஆட்டுக் குட்டியானவராகிய இயேசுவின் கல்யாணத்தில் நாமும் பங்கேற்க முடியும்.

(பாகம்-6 தொடரும்)

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்