8.அபிஷேகம் பெற்றவன்

தாவீது தேவனால் அபிஷேகம் செய்யப்பட்ட நபராக இருந்தது, அவருக்கு இருந்த மற்றொரு சிறப்பு. தாவீது 3 முறை அபிஷேகம் செய்யப்பட்டதாக வேதத்தில் வாசிக்கிறோம். இந்த 3 சந்தர்ப்பங்களும் வித்தியாசமானது என்பது குறிப்பிடத்தக்கது.

தாவீது பெற்ற முதல் அபிஷேகம் அவரது வீட்டிலேயே நிகழ்ந்தது. இந்த வேதப் பாடத்தின் துவக்கத்தில் நாம் பார்த்தது போல, வீட்டாராலும், சகோதரர்களாலும் அற்பமாக எண்ணப்பட்ட தாவீது, அவர்களுக்கு முன்பாக தீர்க்கத்தரிசி சாமுவேல் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டார். இந்த நிகழ்ச்சி, அந்த சந்தர்ப்பத்தில் இருந்த எல்லாருக்கும், அதிர்ச்சியாக இருந்தாலும், தேவனின் முன் தீர்மானமாக இருந்தது.

இதுபோல நம் வாழ்க்கையில் சில நிகழ்ச்சிகள் நமக்கும், நம் குடும்பத்தினருக்கும் அதிர்ச்சியை அளிக்கலாம். ஆனால் அவை அனைத்தும் தேவனுடைய முன் தீர்மானமாக இருக்கும் என்பதை நாம் மறந்துவிட கூடாது.

தேவனுடைய அபிஷேகத்தின் மூலம் தாவீது ராஜாவாக உயர்த்தப்பட்டார். நாமும் தேவ ஆவியினால் அபிஷேகம் செய்யப்படும் போது, ராஜாக்களாகவும், ஆசாரியராகவும் மாற்றப்படுகிறோம். தேவ அபிஷேகம் மூலம் உலகம், பிசாசு, மாம்சம் போன்றவற்றின் மீது நாம் ஆளுகை பெறுகிறோம். எனவே பரிசுத்தாவி அபிஷேகம் பெற்ற தேவனுடைய பிள்ளைகள் எதற்கும் பயப்பட தேவையில்லை. ஆனால் இதை புரிந்து கொள்ளாமல் பல சந்தர்ப்பங்களில், பயந்தவர்களாக தேவனையே கேள்வி கேட்கிறோம்.

தாவீது இரண்டாவது முறையாக எபிரோனில் வைத்து யூதா கோத்திரத்தின் மீது ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டார் என்று 2சாமுவேல்.2:4ல் வாசிக்கிறோம். எபிரோன் என்ற வார்த்தைக்கு சகோதர ஐக்கியம் என்று பொருள். எனவே இதை தேவனுடைய சபையாக வைத்து கொள்ளலாம். குடும்பத்திலேயே மரியாதை குறைவாக நடத்தப்பட்ட தாவீது இப்போது சபையினருக்கு முன்பாக மேன்மையான ராஜாவாக, தேவனால் உயர்த்தப்படுகிறார்.

நம் வாழ்க்கையிலும் தேவன் நம்மை இதுபோல உயர்த்த விரும்புகிறார். நாம் எதுமற்றவர்களாக இருக்க கூடும். குடும்பத்தினாராலும், சபையினாராலும் கைவிடப்பட்டவர்களாக இருக்க கூடும். ஆனால் தாவீதை போல தேவனோடு ஒரு நெருங்கின உறவு இருந்தால் நிச்சயம் தேவன் நம்மை உயர்த்துவதற்கு வல்லவராகவே இருக்கிறார்.

மூன்றாவது முறையாக தாவீது அதே எபிரோனில் வைத்து முழு இஸ்ரவேலுக்கும் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டார். அதுவரை தாவீது குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே ராஜாவாக அறியப்பட்டார். ஆனால் இப்போது 12 கோத்திரங்களையும் உள்ளடக்கிய முழு இஸ்ரவேலுக்கும் ராஜாவாக உயர்த்தப்படுகிறார்.

முழு இஸ்ரவேல் என்பது நம் வாழ்க்கையில், நாம் பழகும் இரட்சிக்கப்பட்ட, இரட்சிக்கப்படாத நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டார் என எல்லாருக்கும் முன்பாக உயர்த்தப்படும் அனுபவத்தை குறிக்கிறது.

தாவீதை திடீரென ஒரு நாள் முழு இஸ்ரவேலுக்கு ராஜாவாக தேவன் அபிஷேகம் செய்யவில்லை. படிபடியாக உயர்த்தி வந்தார். அதுபோல நம்மையும் தேவன் படிபடியாக உயர்த்தவே விரும்புகிறார். இல்லாவிட்டால் நன்மைகளுக்கு பின்னால் நாம் சென்றுவிட கூடும் என்பது தேவனுக்கு நன்றாகவே தெரியும். எனவே தேவன் நம்மை உயர்த்தும் வரை அவருடைய பலமுள்ள கைகளின் கீழே அடங்கி இருக்க வேண்டியுள்ளது.

நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலும் தேவன் நம்மை உயர்த்தும் போது, பரிசுத்தாவின் அபிஷேகம் அதிகம் தேவைப்படுகிறது. இரட்சிக்கப்பட்ட காலத்தில் பெற்ற அபிஷேகத்தை வைத்து கொண்டு வாழ்க்கை முழுவதும் ஓட்ட நினைக்க கூடாது. தினமும் கர்த்தருக்கு காத்திருந்து புதிய அபிஷேகத்தை பெற்று நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை புதுப்பித்து கொள்ள வேண்டும்.

தாவீதை போல நம் வாழ்க்கையில் தேவன் படிபடியாக உயர்த்தும்படி, பரிசுத்த ஆவியானவருக்கு இடம் கொடுப்போம். பழைய அனுபவங்களையே வைத்துக் கொண்டு காலத்தை ஓட்டாமல், ஆவியில் புதுபுது அனுபவங்களையும், வளர்ச்சியையும் பெறுவோம்.

(கடைசி பாகம் – தொடரும்)

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்