இந்த ஏழை கூப்பிட்டான். கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்.சங்கீதம்.34.6

இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்ட பிறகும், சவுலின் நாட்களில் தப்பி ஓடுகிறார் தாவீது. தன் மீதான தேவ அபிஷேகத்தை எண்ணி பெருமை பாராட்டாமல், எந்த நிலையில் இருந்து தேவன் உயர்த்தினார் என்பதை நினைவு கூர்ந்து மேற்கண்ட வரிகளை பாடுகிறார்.

குடும்பத்தில் கடைசி மகனாக பிறந்த தாவீதின் மீது அன்பு காட்டவோ, அரவணைக்கவோ யாரும் இருக்கவில்லை. தந்தை ஈசாயின் ஆடுகளை மேய்த்துக் கொண்டு அலைந்த தாவீது, தேவனை மட்டுமே சார்ந்திருக்க பழகினான். தனது இன்ப, துன்ப நேரங்களில் தேவனை துதிக்கும் பாடல்களை பாடி மகிழ்ந்தார்.

இதேபோல நம் குடும்பத்தில், சபையில், நாம் வேலை செய்யும் இடத்தில், நம்மை யாரும் கண்டுகொள்ளாமல் இருக்கலாம். அந்த நேரத்தில் நம் மனதில் தேவனுக்கு விரோதமான முறுமுறுப்பு உண்டாகிறதா? அல்லது தாவீதை போல தேவனை துதிக்கும் பாடல்கள் வருகிறதா?

தன்னை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று தாவீதிற்கு கோபம் வந்ததாக நாம் வேதத்தில் வாசிப்பதில்லை. நாம் ஏழ்மையான நிலையில் விடப்படும் போது, எல்லாரிடமும் கோபப்படுகிறோமா? இந்த சூழ்நிலையில் நாம், தேவனை சார்ந்து வாழ்வே அவர் விரும்புகிறார்.

தாவீது தான் ஏழையாக இருந்த அனுபவத்தை, ராஜாவான பிறகும் மறக்கவில்லை. அதனால் தாவீதிற்கு எதிராக பல எதிரிகள் வந்த போதும், தேவன் அவனை விடுவித்தார். அதேபோல நாமும் தேவனுக்கு முன்பாக நாம் ஏழைகள் என்பதை மறந்து போக கூடாது.

ஏனெனில் ஆவியில் ஏழைகளாக இருப்பவர்களின் ஜெபத்தை மட்டுமே தேவன் கேட்கிறார். உலகில் நாம் பெரிய செல்வந்தர்களாக இருந்தாலும், ஆவியில் எப்போது எளிமையாக இருந்தால் மட்டுமே பரலோக ராஜ்ஜியத்திற்குள் செல்ல முடியும் என்று (மத்தேயு:5.3) இயேசு தன் போதனையில் கூறியுள்ளார்.

எனவே பரலோக வாசிகளாக அழைக்கப்பட்டுள்ள நமக்கு, ஆவிக்குரிய எளிமை அவசியமாக உள்ளது. மேலும் தாவீதை தன் எதிரிகளின் கைகளில் இருந்தும், துன்பங்களில் இருந்தும் விடுவித்தது போல, ஆவியில் ஏழ்மையாக இருப்பவர்களையே தேவன் விடுவிக்கிறார்.

நாம் ஆவியில் ஏழைகளாக இருக்கிறோமா? என்று இன்றே பரிசோதிப்போம். அப்படியில்லை எனில் அதற்கு தடையாக இருக்கும், ஆவிக்குரிய பெருமையை நம்மை விட்டு அகற்றிப் போடுவோம். தாழ்மையை தரித்துக் கொள்வோம். ஆவியில் ஏழைகளாக வாழ்ந்து பரலோக ராஜ்ஜியத்தில் சென்று சேர்வோம்.

ஜெபம்:

அன்புள்ள இயேசுவே, உமக்கு முன்பாக நாங்கள் ஏழைகளாக இருக்கிறோம் என்பதை உணர்த்திய உமது வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். எங்களின் கண்களை மறைத்த ஆவிக்குரிய பெருமையை எங்களை விட்டு அகற்றும். கிறிஸ்துவின் தாழ்மையை தரித்து, பரலோக ராஜ்ஜியத்திற்குள் வந்து சேர கிருபை தாரும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்