அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார் ஆதியாகமம்:15.6

விசுவாசத்தின் பிதா என்று அறியப்படும் ஆபிரகாமிற்கு, ஒரு பிள்ளை கூட இல்லாமல் இருந்த போது, வானத்தின் நட்சத்திரங்களை போலவும், கடற்கரை மணலைப் போலவும் பிள்ளைகளை தருவேன் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்தார். ஆனால் அதை நம்புவதற்கு எந்த சாத்தியக்கூறுகளும் ஆபிரகாமிடமோ, அவரது மனைவி சாராளிடமோ இருக்கவில்லை.

ஆனாலும் தேவன் கூறிய வார்த்தைகளை, ஆபிரகாம் விசுவாசித்த போது, அது தேவனால் நீதியாக எண்ணப்பட்டதாக தியான வசனத்தில் வாசிக்கிறோம். முதிர் வயதை எட்டியிருந்த ஆபிரகாமிற்கு விசுவாசம் இருந்தாலும், சாராளுக்கு அவ்வளவு விசுவாசம் இருக்கவில்லை.

இதனால் தான், ஆகாரை திருமணம் செய்து கொண்டு, அவள் மூலம் பிள்ளைகள் பிறந்தால், தேவ வாக்குத்தத்தம் நிறைவேறலாம் என்று சாராள் குறுக்கு வழியை கூறுகிறார். ஆனால் தேவனுடைய திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்கவில்லை.

ஆபிரகாமிற்கு அளித்த வாக்குத்தத்தம் குறித்து மனித புத்தியில் யோசித்தால், அது நடக்க எந்த வகையிலும் வாய்ப்பில்லை என்றே கூற முடியும். ஆனால் மனிதனால் முடியாது என்ற ஒரு நிலையில் தான் தேவன் கிரியை செய்ய துவங்குகிறார் என்பதை இதன்மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

நீண்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு ஆபிரகாமிற்கான வாக்குத்தத்தம் நிறைவேறியது. ஆனால் அவரது அடுத்த தலைமுறையான ஈசாக்கின் வாழ்க்கையிலும் அந்த வாக்குத்தத்தம் நிறைவேற 20 ஆண்டுகள் ஆனது என்று வேதத்தில் காண்கிறோம். யாக்கோபின் வாழ்க்கையிலும், தான் காதலித்து திருமணம் செய்த மனைவியாகிய ராகேலின் மூலம் குழந்தை பிறப்பதிலும் காலதாமதம் உண்டானது.

அதன்பிறகு கடும்பஞ்சத்தில் அழிய இருந்த இஸ்ரவேலின் மக்கள் எகிப்திற்கு சென்று தப்பினர். ஆனால் மோசேயின் காலத்தில் ஆட்சிக்கு வந்த பார்வோன், இஸ்ரவேல் மக்களை அழிக்க நினைத்தும் தோல்வியை தழுவினான். இன்று வரை இஸ்ரவேலை அழிக்க ஒரு கும்பல் தவம் கிடக்கிறது. ஆனால் அவர்களால் முடியவில்லை. ஏனெனில் தேவன், ஆபிரகாமிற்கு அளித்த வாக்குத்தத்தத்தை இன்றும் நினைவு கூர்ந்து வருகிறார்.

மேற்கூறிய ஆபிரகாமின் சந்ததியின் மூலம் நமக்கு கிடைக்கும் எளிய செய்தி என்னவென்றால், நமக்கு தேவனால் அளிக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தம் குறித்து நம் மனித மூளையை பயன்படுத்தி சிந்தித்தால், அவர் மீதான விசுவாசத்தை இழப்போம். ஆனால் நடக்காது என்று நாம் எண்ணும் காரியங்களை செய்து முடிக்கிற தேவனை தான் நாம் ஆராதிக்கிறோம் என்று விசுவாசித்தால், பல தலைமுறைகளை கடந்தாலும் தேவன் அளித்த வாக்குத்தத்தம் நிறைவேறும்.

எனவே நம் சொந்த முயற்சியிலும், சுய புத்தியையும் பயன்படுத்தி தேவனுடைய செயல்களை மதிப்பிடுவதை தவிர்ப்போம். தேவனையும், அவரது வாக்குத்தத்தங்களையும் முழுமையாக விசுவாசித்து, அவரிடமிருந்து அதிசயங்களையும் அற்புதங்களையும் பெறுவோம். தேவன் நமக்கு உதவி செய்வாராக.

ஜெபம்:

எங்கள் பரலோக பிதாவே, ஆபிரகாமின் சந்ததியை முன்நிறுத்தி நீர் எங்களோடு பேசிய வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். எங்கள் வாழ்க்கையில் அளிக்கப்பட்ட தேவனுடைய வார்த்தைகளையும், வாக்குத்தத்தங்களையும் முழுமையாக விசுவாசித்து, ஆசீர்வாதங்களையும், அற்புதங்களையும் பெற உதவி செய்யும். அவிசுவாசத்தை எங்களில் இருந்து நீக்கும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்