தன் ஊழியக்காரனை நோக்கி: நீ போய்ச் சமுத்திர முகமாய் பார் என்றான். அவன் போய்ப் பார்த்து, ஒன்றும் இல்லை என்றான்; நீ இன்னும் ஏழுதரம் போய்ப் பார் என்றான்.1 இராஜாக்கள்:18.43

பரிசுத்த வேதாகத்தில் இயற்கையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தவர்களில், எலியாவும் ஒருவர். எந்த ஒரு முன்னுரையும் இல்லாமல் வேதத்திற்குள் திடீரென நுழையும் எலியா தீர்க்கத்தரிசி, கர்த்தருக்காக அதிக வைராக்கியம் காட்டுகிறார். மழையையும், பனியையும் தனது வார்த்தையினால் நிறுத்தி வைத்து, கர்த்தருடைய ஜீவனை அதற்கு சாட்சியாக வைக்கிறார் இந்த எலியா.

இஸ்ரவேலை கர்த்தரிடத்திற்கு திருப்பிய பிறகு, மீண்டும் நாட்டில் மழையும், பனியும் வர வேண்டும் என்று எலியா ஜெபிக்கும் பகுதியை தான் இன்றைய தியானத்திற்காக எடுத்துள்ளோம். 1இராஜாக்கள்:18.42-45 வசனங்களை வாசிக்கும் போது, எலியாவின் ஜெபமும், அதன் பதிலையும் காண முடிகிறது. எலியாவின் ஜெபத்தில் 3 முக்கிய காரியங்களை காண முடிகிறது.

1. எலியாவின் முதல் நடவடிக்கையாக மலையின் மீது ஏறுகிறார். இது ஒருவரின் ஜெப வாழ்க்கையை குறிக்கிறது. ஏற்கனவே இது குறித்து நம் தேவன் மலைகளின் தேவனா? என்ற வேதப்பாடத்தில் படித்துள்ளோம். அதிலும் முக்கியமாக தனி ஜெபத்தை குறிக்கிறது. மற்றவர்களின் முன் நாம் பல வார்த்தைகளை கூறி, கவர்ச்சிகரமாக ஜெபிக்கலாம். ஆனால் நம்மையும், நம் உள்ளத்தையும் ஆராய்ந்து அறிகிற தேவனுக்கு முன்பாக தனி ஜெபத்தில் மட்டுமே பேச முடியும்.

சிலர் தனி ஜெபத்தில் கூட, தேவனுக்கு முன்பாக சரியாக தங்களை ஒப்புக் கொடுக்காமல், கடமைக்கு ஜெபிப்பார்கள். அது மிகவும் தவறான ஒரு நடவடிக்கையாகும். ஏனெனில் நம்மை முழுவதுமாக அறிகிற ஒரு நபரிடம் நாம் பொய் சொல்ல முடியாது. எனவே தனி ஜெபத்தில் அலங்காரமான வார்த்தைகளை பயன்படுத்துவது, அதன் மதிப்பை இழக்க செய்யும். என்னதான் சபைக் கூட்டங்களுக்கு சென்றாலும், குடும்ப ஜெபம், ஊழியங்கள் என்று எல்லாவற்றையும் கடந்து, நமக்கும் தேவனுக்கு ஒரு தனிப்பட்ட உறவை கொண்டுள்ள தனி ஜெபம் நம் கிறிஸ்துவ வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது ஆகும்.

2. முகம் முழங்காலில் படக்குனிந்து: இது ஒரு தாழ்த்துகிற அனுபவத்தை குறிக்கிறது. நாம் ஜெபிக்கும் போது, நம்மில் உள்ள பெருமையான காரியங்களை எடுத்துக் கூறி, ஆயக்காரனை போல ஜெபிக்கக் கூடாது. அப்படி ஜெபிப்பதால் எந்த பயனும் நமக்கு கிடைப்பதில்லை. அது காற்றில் வீணாக கூறப்பட்ட வார்த்தைகளாகவே இருக்கும். கர்த்தருடைய சமூகத்தில் தாழ்த்தி ஜெபிக்கும் போது, அவர் கிருபை அளிக்கிறார்.

3. விசுவாசம்: கர்த்தருடைய சமூகத்தில் தனித்து சென்று தாழ்த்தி ஜெபிக்க ஆரம்பித்த பிறகு, தனது ஊழியக்காரனை அழைத்து கேட்கிறான். ஆனால் அவனிடம் இருந்து அவிசுவாசமான வார்த்தைகள் மட்டுமே வந்தன. ஆனால் அதை பொருட்படுத்தாத எலியா, நீ ஏழுதரம் சென்று பார் என்று கூறுகிறான். இதில் இருந்து எலியாவின் ஜெபத்தில் ஒரு பூரண விசுவாசம் இருப்பதை காண முடிகிறது.

அந்த விசுவாசத்தை கெடுக்க வந்த அவிசுவாசமான வார்த்தைகளை அவன் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து விசுவாசத்தோடு ஜெபத்தில் உறுதியாக இருந்தான். இதேபோல நாம் ஜெபத்தில் போராடும் போது, பல அவிசுவாச வார்த்தைகள் குறுக்கிடலாம். அவை நாம் பெறப் போகும் பெரிய ஆசீர்வாதத்தை கெடுப்பவை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

எலியாவின் ஜெபத்தில் இருந்த இந்த 3 காரியங்களின் மூலம் 3 ஆண்டுகள் மழையோ, பனியோ பெய்யாமல் இருந்த நாட்டில், மேகம் கறுத்து மழை உண்டானது. அதேபோல நமது ஜெபத்திலும் மேற்கூறிய 3 காரியங்களும் இருந்தால், எலியாவின் எழுப்புதலை இந்த தேசத்தில் கொண்டு வர முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஜெபம்:

எங்களை நேசிக்கும் அன்பான இயேசுவே, எலியாவின் வாழ்க்கையில் இருந்த ஜெபத்தின் தன்மைகளை கொண்டு எங்களோடு பேசியதற்காக ஸ்தோத்திரம். எங்கள் வாழ்க்கையில் ஒரு தனி ஜெபமும், அது தாழ்மையுடனும், இடறல் அடையாத பூரண விசுவாசம் கொண்டதாகவும் இருக்க உதவி செய்யும். அதன்மூலம் இந்த தேசத்தில் அதிசயங்களையும், அற்புதங்களையும் செய்யும் எலியாக்களாக எங்களை மாற்றி உமது நாமத்தை மகிமைப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்