நமக்குப் பாவமில்லை என்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாய் இருப்போம், சத்தியம் நமக்குள் இராது1 யோவான்:1.8

இந்த உலகமே பாவத்தினால் நிறைந்திருக்கும் போது, நாம் எப்படி பாவமில்லாமல் வாழ முடியும் என்று பலரும் கூறுவதை கேட்டிருக்கிறேன். உண்மைத்தான் உலகம் ஒவ்வொரு நாளும் பாவத்தில் பெருகிக் கொண்டே செல்கிறது. தேவனால் பரலோகத்திற்கு நியமிக்கப்பட்ட மனிதனை எப்படியாவது ஏமாற்றி, நரகத்திற்கு தன்னோடு அழைத்து செல்ல வேண்டும் என்பதில் பிசாசு தீவிரமாக செயல்படும் காலம் இது.

இந்நிலையில் அவனது திட்டங்களை முறியடித்து மரணத்தை ஜெயித்த இயேசு, நரகத்திற்கு இழுக்கும் பாவ வல்லமைகளில் இருந்து நம்மை விடுவிக்க விரும்புகிறார். அதற்கு நாம் செய்ய வேண்டிய காரியம் என்னவென்றால், நமக்குள் இருக்கும் பாவத்தை அறிக்கையிட வேண்டும்.

பொதுவாக இன்று பாவத்தை அறிக்கையிடுங்கள் என்றால், பலருக்கும் புரிவதில்லை. நான் யாரையும் கொலை செய்யவில்லை. விபச்சாரம் செய்யவில்லை. ஏமாற்றவில்லை. தினமும் வேதம் படித்து ஜெபிக்கிறேன். காணிக்கை, தசமபாகம் சரியாக கொடுக்கிறேன் என்று கூறுகிறார்கள்.

மேற்கண்ட காரியங்களில் வெளியோட்டமாக நாம் உண்மையாக இருந்தாலும், நமக்குள் பல பாவங்கள் மறைந்துள்ளன. அதை தேவ சமூகத்தில் நாம் ஜெபத்தில் காத்திருப்பதன் மூலமே அறிந்துக் கொள்ள முடியும். ஏனெனில் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் இருக்கும் பாவமும், பரிசுத்தமும் வெளியோட்டமாக தெரியாது. அவனின் கிரியைகளில் தான் அது வெளிப்படும்.

எனவே தேவ சமூகத்தில் ஜெபத்தில் காத்திருக்கும் போது, நமக்குள் இருக்கும் ஒவ்வொரு பாவங்களையும் தேவன் வெளிப்படுத்துவார். அதேபோல தேவ வசனங்களின் மூலம், தேவ செய்திகளின் மூலம் தேவன் உணர்த்துவார். அப்போது அதற்கு கீழ்படிந்து, அறிக்கையிட்டால் அவைகளில் இருந்து விடுதலையை பெற்றுக் கொள்ள முடியும்.

நம் பாவங்களை தேவன் உணர்த்தும் போது, என்னை விட பெரிய பாவிகள் இருக்கும் போது, நான் செய்வதெல்லாம் ஒரு பாவமா ஆண்டவரே என்று கேட்க கூடாது. பாவத்தில் பெரியது, சிறியது என்ற வேறுபாடு கிடையாது. எடுத்துக்காட்டாக, வேத வசனத்தின் மூலம் தேவன் பொய் சொல்லாதே என்று எச்சரிக்கும் போது, அதை ஏற்றுக் கொண்டு, நம் நினைவில் வரும் பொய் சொன்ன சந்தர்ப்பங்களை தேவ சமூகத்தில் அறிக்கையிட வேண்டும். அப்படி செய்யாமல், ஒரு சிறிய பொய் தானே என்று அலட்சியமாக இருக்க கூடாது.

ஏனெனில் அது போன்ற அலட்சியம் தான் நமக்கு பெரிய பாதிப்பை உண்டாக்குகிறது என்று இன்றைய தியான வசனம் நம்மை எச்சரிக்கிறது. நமக்கு உணர்த்தப்படும் பாவத்தை அறிக்கையிடாமல், இதெல்லாம் ஒரு பாவமா என்று கூறினால், நம்மை நாமே ஏமாற்றுகிறோம் என்கிறார் இயேசு சீஷரான யோவான்.

மேலும் சத்தியமாகிய இயேசு கிறிஸ்து, நமக்குள் இருக்கமாட்டார். அப்படியென்றால் வெளிப்புறமாக நாம் ஒரு கிறிஸ்தவன் என்று கூறி எல்லாரையும் நம்ப வைக்க முடியுமே தவிர, உண்மையில் நாம் ஒரு கிறிஸ்துவராக வாழ முடியாது. நமக்குள் இயேசு இல்லாத பட்சத்தில் அந்த இடத்தை பிசாசு பலவந்தமாக பிடித்துக் கொள்கிறான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே ஒவ்வொரு நாளும் தேவனுக்காக காத்திருந்து, நமக்குள் மறைந்திருக்கும் பாவங்களை குறித்து அறிந்து, அவைகளை அறிக்கையிட்டு விட்டுவிடுவோம். அப்போது சத்தியமாகிய இயேசு, நித்திய ஜீவனை நமக்குள் அளித்து, பரலோகத்திற்கு செல்லும் பாதையாக நம்மோடு இருப்பார். பரிசுத்த தேவனை, பரிசுத்தமாக தரிசிப்போம்.

ஜெபம்:

அன்புள்ள இயேசுவே, எங்களில் இருந்த குறைகள், பாவங்களை பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு, அறிக்கையிடாமல் விட்ட சந்தர்ப்பங்களை மன்னியும். இனிவரும் நாட்களில் உம்மை எங்களுக்குள் வைத்துக் கொள்ளும் வகையில், பாவங்களை அறிக்கையிட்டு பரிசுத்தமாக வாழ உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் நல்ல பிதாவே, ஆமென்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்