நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயம் தீர்க்கப்படோம் 1 கொரிந்தியர்: 11.31

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தனது நினைவாக செய்யுமாறு கூறிய ஒரே ஒரு காரியமான இராபோஜன ஊழியத்தில் ஈடுபடும் போது, தேவாலயங்களிலும் வழக்கமாக வாசிக்கும் வசனங்களில் இன்றைய தியான வசனமும் இடம் பெறுகிறது.

இந்நிலையில் இந்த வசனம் குறிப்பிடும் ஒரு காரியத்தை நம்மில் பலரும் செய்கிறோமா? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில் இன்று நம்மில் பலருக்கும் நம்மை நாமே நிதானிப்பது என்றால் என்ன என்றே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும், தேவ சித்தத்திற்கும், வேத வசனத்திற்கும் ஏற்றதாக அமைந்துள்ளதா? என்பதை ஆராய்ந்து பார்ப்பதை தான், நிதானித்து அறிவது என்று வேதம் குறிப்பிடுகிறது.

அப்படி நிதானித்து பார்க்கும் போது, நாம் செய்யும் சிறிய குற்றம், குறைகள், பாவங்கள் ஆகியவற்றை கூட தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. அதை சீர்த்திருத்தும் போது, தேவனுக்கு உகந்த பரிசுத்தவான்களாக மாறுகிறோம். மேலும் தேவனுடைய நியாயத் தீர்ப்பில் இருந்து தப்பித்து கொள்கிறோம்.

ஆனால் நம்மில் பலரும் இந்த வேத வசனத்திற்கு தலைக்கீழாக தான் வாழ்ந்து வருகிறோம். நம்மை நாமே நிதானிப்பதற்கு பதிலாக, மற்றவர்களின் காரியங்களை குறித்து நிதானித்து அறிந்து, அதில் உள்ள குற்றம், குறைகளை கண்டுபிடிப்பதில் மிகவும் உற்சாகம் கொண்டவர்களாக இருக்கிறோம். இன்னும் சிலர், அந்த காரியங்களை மற்றவர்களுக்கு புறங்கூறுவதிலும் அதிக ஆர்வம் கொள்கிறார்கள்.

இப்படி மற்றவர்களை குற்றவாளிகளாக சுட்டிக் காட்டுவதன் மூலம் நம்மை நாமே நீதிமான்களாக காட்டி கொள்ள மறைமுகமாக முயற்சி செய்கிறோம். நம் குற்றங்களை நிதானித்து அறிந்து தேவனுக்கு முன்பாக அறிக்கையிட வெட்கப்படுகிறோம். மேற்கண்ட வேத வசனத்திற்கு நாம் தலைக்கீழாக செயல்படுவதால், தேவனுடைய நியாயத்தீர்ப்பிற்கு எதுவானவர்களாக மாறுகிறோம்.

இதே கருத்தை இயேசுவின் சொற்பொழிவிலும் காண முடிகிறது.  இயேசு கூறும் போது, மற்றவர்களை குற்றவாளிகள் என்று தீர்க்காதிருங்கள், (மத்தேயு:7.1-2) என்கிறார். மற்றவர்களை குற்றவாளிகளாக நாம் தீர்க்கும் போது, நமது குறைகளை மறைக்க முடியும் என்று நாம் எண்ணினாலும், அப்படி நடப்பதில்லை. அதற்கு பதிலாக நாமும் மற்றவர்களின் மூலம் குற்றவாளிகளாக தீர்க்கப்படுகிறோம். ஏனெனில் நாம் அளக்கும் அளவினால் நாமும் அளக்கப்படுகிறோம் என்று வேதம் குறிப்பிடுகிறது.

இது குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகையில் (ரோமர்.14.12,13), மற்றவர்களை நாம் குற்றவாளிகளாக தீர்க்கும் போது, அடுத்தவர்களுக்கு முன்பாக நாம் தடுக்கல்லையும், இடறலையும் போடுகிறவர்களாக மாறுகிறோம் என்கிறார்.

இப்படி மற்றவர்களை குற்றவாளிகளாக தீர்ப்பதால், தேவனுடைய நியாயத்தீர்ப்பில் நாம் அகப்படுகிறோம் என்பதை உறுதியாக வேதம் குறிப்பிடுகிறது. எனவே இன்று முதல் நம்மை நாமே நிதானிப்போம். மற்றவர்களை குறித்து ஆராய்வதை விட்டு, நம் குற்றங்களை கண்டறிந்து களைவோம். தேவனுடைய நியாயத்தீர்ப்பில் தண்டனை பெறுவதை தவிர்த்து, நற்செயல்களுக்கான வெகுமானத்தை தேவனுடைய கரத்தில் இருந்து பெறுவோம்.

Read more: பைபிள் படிக்க, ஜெபிக்க நேரம் இல்லையா? - இதோ ஒரு ஐடியா!

ஜெபம்:

எங்களை நேசிக்கிற அன்புள்ள தேவனே, எங்களோடு பேசிய உமது வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். நாங்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்பிற்கு எதுவானவர்களாக மாறும் வகையில் வாழ்ந்த வாழ்வியல் முறைகளை மன்னியும். இனி வரும் நாட்களில் எங்களையே ஆராய்ந்து அறிந்து குற்றங்களை திருத்தி பரிசுத்தவான்களாக மாறி உம் வருகையில் காணப்பட உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்