அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய், அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார்.” 1 இராஜாக்கள்:17.4

தேவனை விட்டு விலகிப் போன இஸ்ரவேல் மக்களை திருப்பும்படி, தேவனால் அருளப்பட்ட நியாயத்தீர்ப்பின் தீர்க்கத்தரிசன உரைப்பிற்கு பிறகு, எலியாவுக்கு இந்த தேவனுடைய வார்த்தை உண்டாகிறது. ஏனெனில் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் தீவிரத் தன்மையை துவக்கத்தில் அறியாத ஆகாப் ராஜா, தீர்க்கத்தரிசனம் உரைத்த எலியாவை கொலைச் செய்யக் கூடும் என்பதால், எலியாவுக்கு ஒரு தலைமறைவு இடம் தேவைப்பட்டது.

நியாயத்தீர்ப்பின் விளைவாக தேசத்தில் கடும் பஞ்சம் ஏற்படும் என்பதால், பசி நேரத்தில் உணவிற்காக எந்த மனிதனும், எலியாவை காட்டிக் கொடுக்கக் கூடும் என்பதால், மற்ற மனிதர்களிடம் இருந்து உள்ள உதவி, எலியாவிற்கு அளிக்கப்படாமல் இருந்திருக்கலாம். எனவே தனது தீர்க்கத்தரிசியை காகங்களைக் கொண்டு தேவன் போஷிக்கிறார்.

பொதுவாக காகங்கள், மற்றவர்களிடம் இருந்து பிடுங்கி தின்னும் பழக்கம் கொண்டவை. தனது உணவை மற்ற மிருகங்களுக்கோ, பறவைகளுக்கோ பகிர்ந்து கொடுக்காது. அதற்காக கூட்டம் கூடி சண்டை போடும் தன்மைக் கொண்டவை. ஆனால் அந்த காகங்களைக் கொண்டு தான் எலியா போஷிக்கப்படுகிறார்.

இதே சந்தர்ப்பத்தில் நாமும் இருக்கக் கூடும். நாம் வேலைச் செய்யும் இடம், தேவாலயம், குடும்பம், நாம் வசிக்கும் வீதி என்று எல்லா இடங்களிலும் மிகப் பெரிய எழுப்புதலை கொண்டு வர நாம், தேவனால் பயன்படுத்தப்படலாம். ஆனால் அந்த சூழ்நிலையில், நமக்கு உதவிச் செய்ய யாரும் இல்லாமல் கைவிடப்பட்டது போன்ற நிலை ஏற்படலாம்.

ஆனாலும் நம்மை அழைத்த தேவன் உண்மையுள்ளவர் என்பதால், நமது தேவைகளை எதிர்பாராத முறையில் சந்திக்க, அவர் வல்லமையுள்ளவராக இருக்கிறார். காகம் போன்ற யாருக்கும் உதவாத மனிதர்களையும், மற்றவர்களின் நன்மைகளை பிடுங்கி வைத்துக் கொள்ளும் நபர்களையும் கொண்டு, தேவன் நமக்கு சகாயம் கிடைக்கப் பண்ணுவார்.

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு காரியம் என்னவென்றால், தேசத்தில் பஞ்சம் என்பது மனிதருக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுவது இல்லை. மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் அது பாதிக்க கூடியது தான். இந்நிலையில், தன்னால் கொடுக்கப்படும் உணவை காகம், எலியாவிற்கு கொண்டு வந்து கொடுக்கிறது. இது ஒரு வேளை மட்டுமல்ல, காலையும், மாலையும், பல நாட்களாக தொடர்ந்தது என்று வேதம் கூறுகிறது.

நமக்கு உதவி செய்யும் காகம் போன்ற நபர்கள், தங்களுக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தை கொண்டவர்களாக மாற்ற, தேவன் வல்லமையுள்ளவர் என்று விசுவாசிப்போம்.

எனவே தேசத்தில் எழுப்புதலை உண்டாக்கும் தேவனுடைய சுவிசேஷத்தை கூற நாம் பயப்பட தேவையில்லை. தேவனால் உணர்த்தப்படும் போது, அந்த சந்தர்ப்பத்தை உடனடியாக பயன்படுத்துவோம். அப்படி கூறினால் நமக்கு ஆபத்து ஏற்படும் என்று பயப்பட தேவையில்லை. தமது பிள்ளைகளை காப்பாற்றுவதற்கு, தேவனுக்கு தெரியும்.

நமது தேவன், எந்த சந்தர்ப்பத்திலும் நம்மை கைவிடாத தேவன். ஒரு காரியத்தை நம்மை கொண்டு அவர் செய்கிறார் என்றால், அதனால் வரும் பிரச்சனைகளில் இருந்து மீட்கவும் அவருக்கு தெரியும் என்பதை நம்புவோம். சூழ்நிலைகளை கண்டு தளர்ந்துப் போகாமல், உறுதியாக தேவனுக்காக எழும்பி பிரகாசிப்போம்.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற அன்பின் பரலோக பிதாவே, எலியாவின் மூலம் இஸ்ரவேலில் பெரிய எழுப்புதலை கொண்டு வந்தது போல, எங்களை கொண்டு நீர் செய்ய நினைக்கும் காரியங்களை செய்ய எங்களையே உமது கரத்தில் ஒப்புக் கொடுக்கிறோம். சந்தர்ப்பங்களை கண்டு நாங்கள் பயப்படாமல், உமக்காக எழும்பிப் பிரகாசிக்க உதவிச் செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்