அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி:1சாமுவேல்:1.10

தேவைகளே இல்லாத மனிதர்கள் என, இந்த உலகத்தில் யாரும் கிடையாது. ஆனால் ஒவ்வொருவருக்கும் இருக்கும் தேவைகளின் அளவும், தன்மையும் வேறுபடுகிறது என்பதில் சந்தேகமே இல்லை.

இந்நிலையில் பைபிளில் குழந்தைப் பாக்கியம் கிடைக்காமல் தவித்தவர்களில் அன்னாளும் ஒருவர். கணவன் எல்கானா மூலம் அதிகமாக நேசிக்கப்பட்டவள் (1சாமுவேல்:1.5) என்றாலும், குழந்தையில்லாத துயரத்தை, அவனால் கூட தீர்க்க முடியவில்லை. அவன் கூறிய ஆறுதலின் வார்த்தைகள் (1சாமுவேல்:1.8), அவளுக்கு மனபாரத்தை நீக்கவில்லை என்று காண்கிறோம். எல்கானாவின் மற்றொரு மனைவியிடம் இருந்து கேலி பேச்சுக்கு, அன்னாள் இரையாக மாறினாள்.

இதேபோல நம் வாழ்க்கையில் வரும் பல குறைகளும், மற்றவர்களின் கேலி, கிண்டலுக்கு ஏதுவாக அமையலாம். சில நேரங்களில் நம்மை நேசிக்கும் மனிதர்களால் கூட, அதற்கு தகுந்த ஆறுதலைக் கூற முடியாமல் போகலாம். ஆனால் தேவனை நோக்கி பார்க்கும் போது, நமக்கு மன ஆறுதலும், பதிலும் கிடைக்கிறது.

தேவ சமூகத்தில் நம் இருதயத்தின் விருப்பங்களைக் கூற வேண்டும். அப்போது நன்மையான காரியங்களைத் தகுந்த நேரத்தில் பெற முடியும். ஏனெனில் எல்லாவற்றிற்கு ஒரே தீர்வாக அமைவது நம் தேவன் மட்டுமே.

இதைப் புரிந்து கொள்ளாத அல்லது ஏற்க முடியாத பலரும், உலக மக்களின் ஆறுதல் வார்த்தைகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். சிலர் தேவனைக் காட்டிலும், தாங்கள் நம்பி இருக்கிற மனிதர்களிடம் இருந்து சகாயம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். முடிவில், தாங்கள் எதிர்பார்த்த நன்மைக்கு பதிலாக, சில நேரங்களில் பிரச்சனைகள் அதிகரிக்கிறது.

அன்னாளுக்கு இருந்த துக்கத்தின் மிகுதியால், அவள் பேசிய வார்த்தைகள் வெளியே கேட்கவில்லை. இருதயம் தேவ சமூகத்தில் பேசியது, வெளியே வாய் அசைவு மட்டுமே இருந்தது. அதைத் தான் தியான வசனத்தில் காண்கிறோம். இதைக் கண்ட ஆசாரியன் ஏலி கூட, அன்னாளை தவறாக நினைத்து விடுகிறார்.

Read More: நம் வாழ்க்கையில் பைபிள் வாக்குறுதிகள் நிறைவேறாதது ஏன்?

சில நேரங்களில் துக்கத்தின் மிகுதியில் நாம் ஜெபிக்கும் ஜெபங்கள், நம்மை சுற்றிலும் இருப்பவர்களுக்கோ அல்லது தேவ ஊழியர்களுக்கோ கூட புரியாது. ஆனால் ஒரு மனிதனின் இருதய ஆழங்களையும் அறிய வல்ல தேவனுக்கு, அது எளிதாக புரியும். அன்னாளின் ஜெபத்தில் இருந்த தீர்மானத்தைக் கணப்படுத்திய தேவன், அவளது இருதய பாரத்தை நீக்குகிறார். அதன்பிறகு அவளுக்கு துக்க முகம் இருக்கவில்லை என்று வேதம் கூறுகிறது.

அதேபோல உண்மையாக நாம் ஏறெடுக்கும் ஜெபங்கள் தேவ சமூகத்தில் எட்டி சேர்ந்து, நமது இருதயத்தில் உள்ள எல்லா பாரங்களையும் தீர்க்கும். பெரிய ஒரு தேவ சமாதானம், நமக்குள் உண்டாகும். நம்மில் பலரும் துன்பங்களின் மத்தியில் ஜெபிக்கும் போது, நமக்குள் இருக்கும் துக்கம் குறைவதில்லை. இதற்கு காரணம், நம் ஜெபம் தேவ சமூகத்தில் எட்டவில்லை என்பதாகும்.

Read more: நம்மில் பலரும் வழக்கமாக, தவறாக கூறும் வேத வசனங்கள்!

எனவே நமது தேவைகளைத் தேவ சமூகத்தில் கூறும் போது, முழு மனதோடு, அவரால் மட்டுமே நமக்கு உதவ முடியும் என்ற விசுவாசத்தோடு கூறுவோம். நாம் ஜெபத்தை துவங்கும் முன், தேவனுக்கும் நமக்கும் இடையே நிற்கும் பாவங்களை அறிக்கையிட்டு, ஒரு தெளிவான தீர்மானத்தை எடுத்து தேவனோடு பேச ஆரம்பிப்போம். அப்போது நமக்கு இருக்கும் இருதய பாரம் நீங்குவதோடு, தேவ சமாதானத்தோடு கூடிய ஆசீர்வாதங்களைப் பெற முடியும்.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற அன்புள்ள பரலோக பிதாவே, ஜெபத்தில் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக செயல்பட்ட அன்னாளை முன்னிறுத்தி, எங்களோடு பேசிய உமது வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். எங்கள் தேவைகளை முழு மனத்தோடு, விசுவாசத்தோடு தேவ சமூகத்தில் செலுத்தி, உம்மிடம் இருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ள உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்