தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; ...தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக் கொண்டான்” 1சாமுவேல்:30.6

சவுலின் கீழ்படியாமையின் பலனாக, ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த தாவீது இஸ்ரவேலின் ராஜாவாக தேவன் நியமிக்கப்படுகிறார். இந்நிலையில் தான் ராஜாவாக அபிஷேகம் பெற்றிருந்தாலும், தேவனால் அபிஷேகம் செய்யப்பட்ட சவுலை கொன்றுவிட்டு தான் ராஜாவாக விரும்பாத தாவீதை, அந்த சவுல் கொலைச் செய்ய முயற்சிக்கிறார்.

இந்த இக்கட்டான நேரத்தில் தாவீதிற்கு உதவியாக இருந்தவர்களைக் குறித்து, 1 சாமுவேல்:22.2 வசனத்தில் வாசிக்கிறோம். சுருக்கமாக கூறினால், தாவீதிற்கு நம்பிக்கை அளிக்க யாரும் இல்லாத ஒரு சூழ்நிலையில், சவுலின் வேட்டையில் சிக்காமல் உயிருக்கு பயந்து தப்பியோடிக் கொண்டிருக்கிறார்.

ஏறக்குறைய 600 பேருடன் காட்டில் சஞ்சரித்து வந்த தாவீது, எந்தச் சூழ்நிலையிலும் தேவனை மறைக்கவில்லை. இதற்காக தாவீதிற்கு எந்தொரு உடனடி ஆசீர்வாதமும் தேவனிடமிருந்து கிடைக்கவில்லை. மாறாக, பெலிஸ்தருக்கு உதவி செய்ய சென்று திருப்பி அனுப்பப்பட்டு, தங்கி இருந்த சிக்லாகை அடைந்த போது, தனக்கு இருந்த மனைவிகள், பிள்ளைகள், சொத்துக்கள் என்று எல்லாவற்றையும் சத்துருக்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டார்கள்.

நம் வாழ்க்கையிலும் இதுபோல அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்து, நம்மை சோர்ந்து போக செய்யலாம். யாவரோடும் சமாதானமாக இருக்க விரும்பினாலும், அவர்களே நமக்கு விரோதமாக செயல்படலாம். தனது இழப்பை தாங்க முடியாத தாவீது அழுதாலும், அதை தாங்கி கொள்கிறார். ஆனால் உடன் இருந்தவர்கள், தாவீதை கல்லெறிந்து கொலைச் செய்ய திட்டமிடுகிறார்கள்.

இது போன்ற ஒரு சூழ்நிலையில் நாமாக இருந்தால், மேற்கண்ட 600 பேரையும் விட்டு தப்பியோட பார்ப்போம். அல்லது உங்கள் இழப்பிற்கு நான் எதற்கு பொறுப்பேற்க வேண்டும், உங்களோடு சேர்ந்து நானும் தான் இழந்து நிற்கிறேன் என்று கூறி இருப்போம். ஆனால் தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக் கொண்டான்.

ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் எப்படி, தாவீது கர்த்தருக்குள் தன்னை திடப்படுத்தி கொண்டார்? ஆடுகளின் பின்னே ஒரு சாதாரண மேய்ப்பனாக அலைந்து திரிந்த தன்னை ராஜாவாக அபிஷேகம் செய்த தேவனுடைய ஆசீர்வாதங்களை, நெருக்கடியான சூழ்நிலையில் தாவீது நினைவில் கொண்டு வந்திருப்பார்.

அந்த நன்றியுள்ள இருதயம் அவருக்குள் வந்த போது, நெருக்கடியான சூழ்நிலையை கண்டு அழுது புலம்பிய தாவீதின் மனம் திடப்பட்டது. இதுவரை என்னை நடத்திய தேவனால், நான் பயணிக்கும் இந்த நெருக்கடியான பாதையிலும் என்னை நடத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.

நம் வாழ்க்கையில் வரும் நெருக்கடியான சூழ்நிலைகளில், நாம் யார் மீது நம்பிக்கை வைக்கிறோம்? அதற்கு எப்படி தீர்வு காண்கிறோம்? கஷ்ட நேரங்களில் உங்கள் இருதயம் பதறுகிறதா? இந்த நிலைக்கு யார் பொறுப்பு என்று ஒருவருக்கொருவர் சண்டை போட்டு கொள்கிறோமா? சிந்தித்து பாருங்கள். இதில் எதிலும் நமக்கு தீர்வு கிடைக்காது.

கடந்த காலத்தில் தேவன் நடத்தி வந்த அதிசயமான பாதைகளை எண்ணி பாருங்கள். எந்தத் தகுதியும் இல்லாத பல இடங்களில் தேவன் நம்மை உயர்த்தினார்; நினைத்து பார்க்காத பல எண்ணற்ற ஆசீர்வாதங்களால் நிரப்பினார். இதையெல்லாம் நினைக்கும் போது, தற்போது நான் கடந்து செல்லும் சூழ்நிலையிலும் என் தேவனால் நடத்த முடியும் என்ற நம்பிக்கையும் விசுவாசமும் உண்டாகும்.

அப்போது கர்த்தருக்குள் நம்மை திடப்படுத்திக் கொள்ள முடியும். மனதில் உள்ள எல்லா பதற்றமான அனுபவமும் அகற்றப்படும். அதற்கு பிறகு, நம்மை கொள்ளையிட்ட சத்துருவின் வல்லமைகளை தேவ ஆலோசனையின்படி, எளிதாக முறியடிக்க முடியும். இழந்ததாக நாம் கருதும் ஆசீர்வாதங்கள் மட்டுமின்றி, சத்துருவின் கொள்ளையையும் சேர்த்து நாம் பெற்று கொள்ள முடியும்.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற அன்புள்ள ஆண்டவரே, வாழ்க்கையின் நெருக்கடியான சூழ்நிலைகளில் நாங்கள் பதற்றம் அடைந்து, பெலனில்லாமல் போகும் மட்டும் அழுக வேண்டிய நிலைகளை சந்தித்துள்ளோம். நாங்கள் உதவிய, ஆதரித்த பலரும், எங்களுக்கு எதிராக கிரியை செய்கிறார்கள். ஆனாலும் எங்கள் மனதை திடப்படுத்துகிறவர் நீர் என்று பேசின உமது வார்த்தைக்காக நன்றி. இதுவரை எங்கள் வாழ்க்கையில் செய்த எல்லா நன்மைகளை எண்ணி பார்த்து, உமக்குள் எங்களை திடப்படத்திக் கொள்ள உதவிச் செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்