அச்சிடுக
பிரிவு: படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!
படிப்புகள்: 1081

இயேசு சிலுவையில் செய்த தியாகங்களைக் குறித்து ஒவ்வொன்றாக தினமும் சிந்தித்து வருகிறோம். இந்நிலையில் இயேசு மரிக்கும் முன், தனது ஆவியை பிதாவான தேவனிடம் ஒப்புக் கொடுக்கும் ஒரு வசனம்  காணப்படுகிறது. அதை குறித்து இந்தச் செய்தியில் ஆராய்வோம்.

ஆராய்ந்தது:

இயேசுவின் வாழ்க்கையை குறித்து குறிப்பிடும் 4 சுவிசேஷங்களையும் கவனமாக வாசித்து பார்த்தால், அவரது பிறப்பு முதல் பிதாவான தேவனை “பிதா” என்று தான் அவர் அழைக்கிறார். இயேசுவின் மீது யூதர்கள் கூறிய குற்றச்சாட்டும் அதுவே. இவன் உன்னதமான தேவனை, தனது பிதா என்று கூறுகிறான் என்று அவர்கள் குற்றச்சாட்டுவதை மத்தேயு:26.63-66 வசனங்களில் காணலாம்.

இந்நிலையில் மத்தேயு:27.46-ல் பிதாவை, இயேசு “என் தேவனே என் தேவனே” என்று அழைக்கிறார். இங்கே மட்டும் இயேசு, தேவனே என்று அழைக்க காரணம் என்ன? என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. ஏனெனில் பிதா மற்றும் தேவன் என்ற இரு வார்த்தைகளுக்கும் இடையே பெரியளவிலான வித்தியாசம் உண்டு.

பிதா என்று அழைக்கப்படுபவருக்கு, மகன் இருப்பார். அந்த மகன் மட்டுமே அவரை அப்படி அழைக்க முடியும். பிதாவிற்கு உரியது எல்லாமே மகனுக்கு உரியது. பிதாவிடம் ஒரு மகனுக்கு தைரியமாக சென்று பேச முடியும்.

ஆனால் தேவன் என்பவர் ஒருவரே. வானத்தையும் பூமியையும், நாம் காணும் சகலத்தையும் உருவாக்கியவர். ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம் செய்கிறவர். நாம் எவ்வளவு வேண்டிக் கொண்டாலும், தேவனாக மனமிரங்கினால் மட்டுமே, அது நமக்கு கிடைக்கும்.

இயேசு சிலுவையில் பாடுகளை அனுபவித்த போது, அவரது பிதா, தேவன் என்ற நிலைக்கு தன்னை மாற்றி கொண்டார். அதாவது மனிதனின் பாவங்களை இயேசு சுமந்து தீர்க்க வேண்டும் என்பதற்காக, தனது ஒரே குமாரனையும் தந்தருளிய பிதா, தன்னை தேவனாக காட்டிக் கொண்டார்.

ஏனெனில் தேவன் செய்யும் காரியங்களை எதிர்த்து கேள்வி கேட்க முடியாது. ஆனால் பிதா என்ற நிலையில் இருக்கும் போது, உரிமையோடு கேட்க முடியும். இயேசுவும் அதுவரை பிதாவாக கண்டவரை, தேவனே என்று அழைக்கிறார்.

மனுக்குலத்தின் பாவத்தை நீக்குவதற்காக, இயேசுவை சிலுவையில் ஒப்புக் கொடுத்து, தமது முகத்தை தேவன் மறைத்து கொண்டார் என்று வேதம் கூறுகிறது. இயேசுவும் நாம் செய்த பாவங்களை நீக்க வேண்டும் என்பதற்காக, தனக்கு அன்பாக இருந்த பிதாவையே தியாகம் செய்தார்.

நம் குடும்பத்தையும் பெற்றோரையும் விட்டு பிரிந்தால், நாம் எந்தளவிற்கு துக்கப்படுகிறோம். ஆனால் அவர்களுடன் நாம் அதிகபட்சமாக வாழ்க்கையின் 50% காலக் கட்டத்தை கூட செலவிடுவது இல்லை. ஆனால் பரலோகத்தில் பிதாவோடு இருந்தவர் இயேசு. உலகில் வந்த பிறகும் தான் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பிதாவை நினைவு கூறுவதோடு, தன்னுடன் இருக்கும் மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கிறார். அவ்வளவு நெருக்கமாக இருந்த பிதாவை, இயேசு தியாகம் செய்து நமக்கு இரட்சிப்பை அளித்துள்ளார்.

இயேசு சிலுவையில் இருந்த போது, பிதாவே என்று கூப்பிட்டு இருந்தால், அதற்கு பதிலளித்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் தேவனே என்று கூப்பிட்ட இயேசு, தனது அவலநிலையை கூறுகிறார். அப்படிப்பட்ட இயேசுவிற்காக, நம் பணத்தையும் நேரத்தையும் நாட்களையும் நம்மால் செலவு செய்ய முடிகிறதா? என்பது சிந்திக்க வேண்டியுள்ளது.

தனது பிதாவை இயேசு தியாகம் செய்ததால், நாம் தேவனுடைய பிள்ளைகளாக மாறி இருக்கிறோம். பிறப்பால் நாம் அவருக்கு பிள்ளைகள் அல்ல. ஆனால் பிள்ளைகளாக தத்தெடுக்கப்பட்டு உள்ளோம். இதனால் அப்பா, பிதாவே என்று கூப்பிடும் அதிகாரத்தை பெற்றிருக்கிறோம். ஆனால் தேவனை, தகப்பன் என்று அழைக்க வேண்டுமானால், அவரது பிள்ளையாக இருக்க வேண்டிய தகுதிகளை நாம் வளர்த்து கொள்ள வேண்டும். அதற்கு இயேசுவை பார்த்து கற்று கொள்ளலாம்.

இயேசுவின் சிலுவை பாடுகளில் பிதாவை தியாகம் செய்தாலும், தனது ஆவியை பிதாவிடம் தான் ஒப்புக் கொடுக்கிறார் (லூக்கா:23.46). அதுபோல நம் வாழ்க்கையில் சோதனைகளின் வழியாக கடந்து சென்றாலும், முடிவில் தேவனிடம் சகலத்தையும் ஒப்படைக்க வேண்டும். அப்போது நமது முடிவு சம்பூர்ணமாக இருக்கும்.

சிந்தித்தது:

உலகின் பாவத்தை சுமந்து தீர்க்க பரலோகத்தில் இருந்து இறங்கி வந்த இயேசு, அந்த பணியை முழுமையாக முடிக்க, தன்னை அனுப்பிய பிதாவையே தியாகம் செய்தார். இயேசுவின் தியாகத்தின் பலனாக, இன்று நாம் பிதாவின் தத்து பிள்ளைகளாக உள்ளோம்.

எனவே அந்த பிதாவிற்கு ஏற்ற பிள்ளைகளாக நம்மை மாற்றி கொள்வோம். அவருக்கு விருப்பமில்லாத எந்த காரியத்தையும் இயேசு செய்யவில்லை. அதேபோல தேவ சித்தமில்லாத எல்லா காரியங்களையும் நடக்கைகளையும் நம்மில் வராமல், இயேசுவை போல மாறுவோம். அப்போது நம்மை பாவத்தில் மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக, பல தியாகங்களைச் செய்த இயேசுவின் நோக்கம் நிறைவேறும்.

- கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்