பரலோகத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இப்படியிருக்க பரலோகத்தில் எந்த மாதிரியான வரவேற்பு நமக்கு கிடைக்கும் என்று சிந்தித்து இருக்கிறீர்களா? கடந்த சில நாட்களுக்கு முன் எனக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தின் போது, தேவன் இந்த காரியத்தை உணர்த்தினார். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அனுபவித்தது:

கடந்த சில நாட்களுக்கு முன், வெளியூர் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த ஊர் எனக்கு நன்கு பழக்கமான ஊர் என்பதால், என்னை அழைத்து செல்ல ரயில் நிலையத்திற்கு யாரும் வரவில்லை.

பொதுவாக நான் வெளியூர் செல்லும் போது, கையில் ஒரு பையை மட்டுமே எடுத்து செல்வேன் என்பதோடு, சாதாரணமான ஆடைகளையே உடுத்துவேன். ஆனால் என்னோடு அந்த ரயில் நிலையத்தில் இறங்கிய பலரும், சிறப்பான ஆடைகளை உடுத்தி, கம்பீரமாக காட்சி அளித்தார்கள். மேலும் 3 அல்லது அதற்கு மேற்பட்ட பைகளை தூக்கி கொண்டு வந்தார்கள்.

அதிக பைகளை தூக்கி வரும் பயணிகளுக்கு உதவி செய்யும் வகையில், காத்திருந்த பல சுமை தூக்கும் தொழிலாளர்களும் ஓடி வந்து, அவர்களிடம் கட்டணம் பேச ஆரம்பித்தார்கள். என்னை கடந்து சென்ற ஒரு தொழிலாளர் கூட, நான் இருப்பதாக கண்டு கொள்ளவில்லை. ஒரு வேளை என்னிடம் சுமை இல்லாததால், யாரும் வந்திருக்கமாட்டார்கள் என்று நினைத்தேன்.

ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்த போது, என்னோடு திரளான மக்கள் வெளியேறினார்கள். அப்போது ரயில் நிலையத்தின் முன்பகுதியில் பயணிகளை அழைத்து செல்வதற்காக, ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்கள் அநேகர் நின்றிருந்தார்கள்.

அங்கேயும் என்னை பார்த்த எந்தொரு டாக்ஸி டிரைவரும் கண்டு கொள்ளவே இல்லை. எனக்கு முன்னால் மற்றும் பின்னால் வந்த பலரையும் அணுகிய ஆட்டோ டிரைவர்கள், தங்கள் ஆட்டோவில் வரும்படி வருந்தி கேட்டு கொண்டார்கள். அதை கண்ட எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.

நான் வந்த அதே ரயிலில் தான் இவர்களும் வந்தார்கள். ஆனால் என்னிடம் இல்லாத ஏதோ ஒன்று அவர்களை மேன்மையான மனிதர்களாக காட்டுகிறது. என்னை பார்த்த போதே, இவன் ஆட்டோ அல்லது டாக்ஸியில் பயணிக்கமாட்டான் என்ற முடிவிற்கு டிரைவர்கள் வந்துவிட்டார்கள். இந்த காரியத்தை கண்டு நான் சற்று வருந்தினாலும், தேவன் ஒரு காரியத்தை எனக்கு உணர்த்தினார்.

ஒவ்வொரு இடத்திலும் குறிப்பிட்ட காரியங்களை வைத்து தான் மதிப்பு அளிக்கிறார்கள். இதனால் நாம் எங்கு சென்றாலும், அந்த இடத்திற்கு உரிய தன்மையோடு சென்றால் மட்டுமே மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் என்பதை புரிந்து கொண்டேன்.

சிந்தித்தது:

அழிந்து போகக் கூடிய இந்த உலகத்தில் வாழவும், மரியாதை பெறவும் நம்மையே மாற்ற வேண்டியிருந்தால், அழியாத நித்திய பரலோகத்திற்கு செல்ல வேண்டுமானால் நாம் எந்த அளவிற்கு மாற வேண்டும். இந்த உலகத்தில் ஒரு இடத்தில் நமக்கு மரியாதை கிடைக்க வேண்டுமானால், அந்த இடத்தில் உள்ள மக்களுக்கு ஏற்ப நாம் மாற வேண்டும்.

அதேபோல பரலோகத்திற்கு செல்ல வேண்டுமானால், பரலோகத்தில் வசிக்கும் இயேசுவின் சுபாவங்கள் நமக்குள் இருக்க வேண்டும். மேலும் எந்த அளவிற்கு தேவனுக்காக கிரியை செய்து, அவருடைய நாமத்திற்காக பாடுகளை சகிக்கிறோமோ, அந்த அளவிற்கு நமக்கு மகிமையான கிரீடங்கள் பரலோகத்தில் கிடைக்கும் என்று வேதம் கூறுகிறது.

இதனால் தான் இயேசு கூறுகையில், உங்கள் பொக்கிஷங்களை பரலோகத்தில் சேர்த்து வையுங்கள் என்கிறார். பரலோகத்தில் சேர்த்து வைப்பதற்கு, தேவ ஊழியத்திற்கும் ஊழியக்காரர்களுக்கும், பணமும் காணிக்கையும் மட்டும் கொடுத்தால் போதாது. நாமும் தனிப்பட்ட முறையில் தேவனுடைய நாமத்தின் மகிமைக்காக பணியாற்ற வேண்டும்.

தேவனுக்காக நாம் செய்யும் பல காரியங்களை, இந்த உலகத்தில் உள்ள மக்கள் ஏற்று கொள்ள மறுக்கலாம். ஆனால் நமது செயல்கள் வேத வசனங்களின் அடிப்படையிலும் தேவனுடைய நாமத்தை மட்டுமே மகிமைப்படுத்தும் வகையிலும் இருந்தால், பரலோகத்தில் உள்ள நமது கணக்கில் அது வரவு வைக்கப்படும் என்பது உறுதி.

உலகில் ஒரு இடத்தில் நமக்கு தகுந்த மரியாதை கிடைக்கவில்லை என்றால், அதை நாம் அடுத்த முறை செல்லும் போது சரிசெய்து கொள்ளலாம். ஆனால் நித்தியமாக வாழ போகும் பரலோகத்தில் நமக்கு மகிமையான கிரீடம் கிடைக்கவில்லை என்றால், அதை திருத்தி மீண்டும் பெறவே முடியாது. எனவே உலகில் கிடைக்கும் மதிப்பு, மரியாதையை விட, பரலோகத்தில் கிடைக்க வேண்டியவற்றிற்காக அதிகமாக கிரியை செய்வோம்.

- கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்