நாம் பிறந்த வீட்டிலும், வளர்ந்த சபையிலிருந்து பிரிந்து, புதிய இடங்களுக்கு செல்லும் போது, பல புதிய காரியங்களை நம் வாழ்க்கையில் கற்றுக் கொள்ள முடியும் என்பதற்கு என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை ஆதாரமாக காட்ட முடியும். அதே நேரத்தில் புதிய சூழ்நிலைகளில், பல புதிய சோதனைகளும் வரும் என்பதால், நம் பரிசுத்தத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

இந்நிலையில் என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் மூலம் தேவனிடம் ஒப்புக் கொடுத்தால் எல்லா காரியத்திலும் வெற்றி கிடைக்கிறது . அதேபோல தேவன் நம் சிறிய ஜெபத்தையும் கேட்கிறார் என்பதை அறிய முடிந்தது. அதை இணையதள வாசகர்களான உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

எனக்கு வெளியூரில் வேலை கிடைத்த சந்தர்ப்பத்தில், சில கிறிஸ்தவ நண்பர்களுடன் வீடு எடுத்து தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சம்பளம் குறைவாக இருந்ததால், ஹோட்டலில் சாப்பிட யாருக்கும் விருப்பம் ஏற்படவில்லை. எனவே சமையலில் அவ்வளவு அனுபவம் இல்லாவிட்டாலும், நான் உட்பட 4 நண்பர்களும் சேர்ந்து எங்களுக்கு தெரிந்த உணவுகளை சமைத்து சாப்பிட்டு வந்தோம். பல நாட்கள் ருசியே இல்லாமல் சகித்துக் கொண்டும் சாப்பிட்டிருக்கிறோம்.

இந்நிலையில் எங்களுக்குள் திடீரென சிக்கன் குழம்பு செய்து சாப்பிட வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. நான் எதார்த்தமாக சிக்கன் குழம்பு தானே, ரொம்ப எளிதாக செய்துவிடலாம் என்று கூறிவிட்டேன். இதனால் சிக்கன் சமைக்க வேண்டிய பொறுப்பு என் மேல் விழுந்தது. நண்பர்கள் அதிக ஆர்வத்துடன் கோழி கறியையும், அதற்கு தேவையான பொருட்களையும் வாங்கி வந்து கொடுத்துவிட்டார்கள்.

எனக்கோ என்ன செய்வதென்றே தெரியவில்லை. இப்போது எனக்கு தெரியாது என்றும் கூற முடியாத நிலை. நண்பர்கள் வெளியே ஏதோ வேலைக்காக சென்றிருந்த போது, நான் தேவனிடத்தில் ஜெபிக்க ஆரம்பித்தேன். “ஆண்டவரே, எனக்கு சிக்கன் குழம்பு சமைக்க தெரியாது என்பது, தேவனே உமக்கும், எனக்கும் மட்டுமே தெரியும். வேறு யாருக்கும் தெரியாது. எனவே நான் செய்ய போகும் இந்த குழம்பை ருசியுள்ளதாக மாற்றி, ஆசீர்வதியும். சாப்பிடும் எல்லாருக்கும் அது பிடித்திருக்க வேண்டுமே! என்று ஓரிரு வார்த்தைகளில் ஜெபித்துவிட்டு சமையலை ஆரம்பித்தேன்.

எங்கள் வீட்டில் அம்மா கறி குழம்பு செய்வதை பார்த்திருந்ததை நினைவில் கொண்டு, ஒவ்வொன்றாக செய்தேன். கடைசியில் நான் செய்தது குழம்பு வடிவத்தில் வந்துவிட்டது. கொதிக்க வைத்துவிட்டு, ருசியை பார்த்தேன். உண்மையில் நான் இதுவரை சாப்பிடாத ஒரு ருசியுள்ள சிக்கன் குழம்பு.

நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்ட போது, எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம். இவ்வளவு சிறப்பாக சிக்கன் குழம்பு செய்ய தெரியும் என்பதை நீங்கள் எங்களிடம் கூறவே இல்லையே? என்று கூறினார்கள். அதன்பிறகு எப்போது சமைத்தாலும், தேவ கரங்களில் ஒப்புக் கொடுத்து சமைப்பதை வழக்கமாக மாற்றிக் கொண்டேன்.

இந்த சம்பவம் நடந்து பல நாட்களுக்கு பிறகு, ஒரு முறை எங்கள் ரூமில் நண்பர்கள் கூடி ஜெபிக்கும் போது, அவர்களை ஜெபத்தில் ஊக்கப்படுத்தும் வகையில் மேற்கண்ட சம்பவத்தை கூறினேன். எல்லாரும் தேவனை நன்றியுள்ள இதயத்தோடு துதித்தார்கள். மேலும் இது போன்ற சிறிய காரியங்களுக்கும் நாம், தேவனிடம் ஒப்புக் கொடுத்தால், அதையும் அவர் ஆசீர்வாதமாக மாற்றித் தருகிறார் என்பதை அறிந்து பலருக்கும் சாட்சியாக கூறினார்கள்.

இப்போதும் கூட எனக்கு தெரியாத பல காரியங்களை தேவனிடம் ஒப்புக் கொடுத்து செய்யும் போது, அதை நான் நினைப்பதை காட்டிலும் சிறப்பாக செய்ய தேவன் கிருபை அளிக்கிறார். எனக்கு ஒன்றும் தெரியாது என்பது எனக்கும், தேவனே உமக்கும் மட்டுமே தெரியும், வேறு யாருக்கும் தெரியாது என்று நான் ஒப்புக் கொடுத்து, தாழ்த்தி ஜெபித்த போது, தேவன் எனக்கு எதிர்பாராத வெற்றிகளை அளித்தார். அதேபோல நீங்களும் ஜெபிக்க போகிறீர்களா?

- கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்