இன்றைய கிறிஸ்தவர்களில் பலருக்கும் சாப்பிடும் முன் ஜெபிப்பது ஏன்? என்று கேட்டால் தெரிவதில்லை. ஊழியர்கள் மற்றும் பெற்றோர் கூறுவதால், ஜெபிப்போம் என்று சிலர் ஜெபித்துவிட்டு சாப்பிடுகிறார்கள். சிலருக்கு, அதற்கெல்லாம் நேரமில்லை. சாப்பாடு கையில் கிடைத்தவுடன் சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் உண்மையில் ஜெபித்துவிட்டு சாப்பிடுவதால் அநேக நன்மைகள் உண்டு.

கேட்டது:

இந்த காரியத்தை குறித்து ஒரு போதகரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் கூறிய ஒரு சம்பவம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. அதை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன். அந்த போதகர் தனது அனுபவத்தை இப்படி தான் கூற ஆரம்பித்தார்...

எனது பெற்றோரின் உறவு முறையில், நாங்கள் மட்டுமே இரட்சிக்கப்பட்டிருந்தோம். மற்றவர்கள் இந்து மார்க்கத்தில் அதிக வைராக்கியம் கொண்டவர்களாக காணப்பட்டனர். எனினும் எனது பள்ளி விடுமுறை நாட்களில் உறவினர்களின் வீடுகளுக்கு செல்ல, பெற்றோர் தடுப்பதில்லை.

இந்நிலையில் ஒரு முறை நான், உறவினர்களின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது குலத்தெய்வத்திற்கு பூஜை செய்த உணவை உண்ண அளித்தார்கள். எனக்கு இது தெரிந்தால், அந்த உணவை நான் சாப்பிடமாட்டேன் என்று நான் கேட்ட போது, பூஜை செய்யாதது என்று பொய் கூறினார்கள்.

வீட்டில் எதை சாப்பிட்டாலும் ஜெபித்துவிட்டு சாப்பிடும் பழக்கம் கொண்ட எனக்கு, சுற்றிலும் உள்ள உறவினர்கள் என்னை கேலி செய்வார்களோ? என்று தயங்கி ஜெபிக்காமல் சாப்பிட்டு விட்டேன். அந்த உணவை சாப்பிட்ட சில மணி நேரங்களில் என் வாய் முழுவதும் கொப்பளம் வர ஆரம்பித்தது. இதனால் என் வீட்டிற்கு கொண்டுச் செல்லப்பட்டேன்.

எந்த மருந்தை சாப்பிட்டும், அது சரியாகவில்லை. இதனால் சந்தேகமடைந்த என் பெற்றோர், நான் சாப்பிட்ட காரியங்களை குறித்து விசாரித்தார்கள். கடைசியாக நீ சாப்பிடும் முன் ஜெபித்தாயா? என்று கேட்டனர். நான் ஜெபிக்காமல் சாப்பிட்டதை ஒப்புக் கொண்டேன். அப்போது தேவனிடம் மன்னிப்புக் கேட்டு ஜெபிக்குமாறு கூறினர். மன்னிப்புக் கேட்டு ஜெபித்த போது, அதிலிருந்து பூரண சுகம் கிடைத்தது.

இந்நிலையில் அடுத்த முறை குலத்தெய்வ பூஜையின் போதும், நான் உறவினர்களின் வீட்டில் இருந்தேன். அப்போதும் அதேபோல பூஜை செய்த உணவை எனக்கு உண்ண தந்தார்கள். இந்த முறை எனக்கு உணவு அளித்தவர்களிடம் விசாரித்த போதும், வழக்கம் போல பொய் சொன்னார்கள். அப்போது நான், நீங்கள் எந்த உணவை தந்தாலும் நான் ஜெபித்துவிட்டு சாப்பிடுவேன். எனவே இது பூஜை செய்த உணவாக இருந்தால், உங்களுக்கு வாய் முழுவதும் கொப்பளம் வரும் என்று எச்சரித்தேன்.

அதை அவர்கள் கண்டுகொள்ளாமல், நான் ஜெபிப்பதை கிண்டல் செய்துக் கொண்டிருந்தார்கள். நான் வீட்டில் செய்வது போல, ஜெபித்துவிட்டு சாப்பிட்டு விட்டேன். இதனால் எனக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. ஆனால் என்னிடம் பொய் கூறி, உணவளித்த எனது உறவினருக்கு, நான் சொன்னது போலவே, வாய் முழுவதும் கொப்பளம் வந்தது.

வலியில் துடித்த அவர்கள், நீ ஜெபித்து எனக்கு சாபம் கொடுத்துவிட்டாய் என்று திட்டினார்கள். அதற்கு நான் “நான் ஏற்கனவே எச்சரித்தேன். நீங்கள் தான் கண்டுகொள்ளவில்லை” என்றேன். சில நாட்கள் கடும் வேதனை அனுபவித்து பிறகு அவர்களுக்கு சுகமானது. அதன்பிறகு நான் எப்போது உறவினர்கள் வீட்டிற்கு சென்றாலும், எனக்கு பூஜைக்கு வைக்காத உணவை மட்டுமே தருவார்கள். நம் தேவன் செய்த கிரியை அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியுமா? என்று தனது அனுபவத்தை கூறி முடித்தார் போதகர்.

சிந்தித்தது:

இந்த சம்பவத்தின் மூலம், உணவை சாப்பிடும் முன் நாம் ஜெபித்துவிட்டு சாப்பிடும் போது, அதில் உள்ள எல்லா கெட்ட வல்லமைகளையும், சாபங்களையும் தேவன் நீக்குகிறார் என்பதை அறிந்துக் கொண்டேன். அதன் பிறகு எங்கே சாப்பிட்டாலும், ஜெபித்துவிட்டு சாப்பிடும் பழக்கத்தை கடைபிடிக்க துவங்கிவிட்டேன். ஜெபிக்க தயக்கம் காட்டுவதில்லை. அப்ப நீங்களும் இனி மேல் ஜெபித்துவிட்டு தானே சாப்பிடுவீங்க?

- கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்