அச்சிடுக
பிரிவு: பொது
படிப்புகள்: 6304

கொடும் பாவியான என்னை, இயேசு மீட்டார்

நாகப்பட்டினத்தில் இருந்து மதியழகன் என்ற சகோதரன் கூறுகிறார்...

எண்ணிக்கையில் அடங்காத தெய்வங்களை வணங்கும் ஒரு மார்க்கத்தில் அதிக நம்பிக்கைக் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்து, வளர்க்கப்பட்டேன். சிறு வயதிலேயே படிப்பில் அதிக ஆர்வம் காட்டாததால், பள்ளிப் படிப்பைக் கூட நான் முடிக்கவில்லை.

இதனால் சிறு வயதில் இருந்தே பல்வேறு வேலைகளுக்கு செல்ல ஆரம்பித்தேன். வாலிப வயதை எட்டிய போது, கட்டிட வேலையில் அதிக ஈடுபாடு கொண்டு, கட்டிட மேஸ்திரியாக மாறினேன். தாய்மொழியான தமிழில் கூட சரியாக எழுதப் படிக்க தெரியாவிட்டாலும், பல ஊர்களுக்கு சென்று கட்டிடப் பணிகளைச் செய்து வந்தேன்.

எனது 5 வயதில் இருந்து புகைப்பிடிப்பது, மது குடிப்பது போன்ற சில தீயப் பழக்கங்களைச் செய்ய துவங்கி, வாலிப வயதை எட்டுவதற்குள், எப்போதும் போதையிலேயே இருக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்குள் சென்றேன். ஒரு கட்டத்தில், வேலைக்காக கோவை மாவட்டத்திற்கு வந்த நான் அங்கே ஒரு வாடகை வீடு எடுத்து தங்கினேன்.

அந்த வீட்டில் நான் தனியாக வசித்து வந்ததால், தினமும் வேலை முடித்துவிட்டு வரும் போது, கிடைக்கும் பணத்திற்கு மது அருந்திவிட்டு வருவேன். மற்ற நேரங்களில் முடிந்த வரை போதையில் இருக்கும் வகையில், பாக்குகளைப் பயன்படுத்தி வந்தேன். இப்படியே என் வாழ்க்கையைத் தொடர்ந்ததால், எப்போதும் பணத்திற்கு பற்றாக்குறை நிலவியது.

மேலும் மனதிலும் சமாதானமற்ற நிலை நீடித்தது. போதையில் இருக்கும் போது கூட, சில நேரங்களில் நான் எதற்காக வாழ்கிறேன் என்று சிந்தித்து அழுதது உண்டு. எனவே நான் நல்லவனாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு, கேரளாவில் உள்ள ஒரு தெய்வத்திற்கு வேண்டுதல் செய்து ஆண்டுதோறும் மாலைப் போட்டுக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தேன்.

இதுபோல பல ஆண்டுகளாக சென்று வந்தேன். மாலைப் போடும் நேரத்தில் மட்டும் ஒழுங்காக இருப்பது போல எனக்கு தோன்றினாலும், அதற்கு பிறகு வழக்கம் போல கொடும் பாவியாக வாழ்ந்து வந்தேன். இதனிடையே அதிக கோபம் கொள்ளும் வழக்கமும் எனக்கு இருந்தது.

இந்நிலையில் நான் தங்கியிருந்த வீட்டின் அருகில், கல்லூரியில் படித்து வந்த ஒரு கிறிஸ்தவ சகோதரி வாடகைக்கு வந்தார். அங்கு தனியாக தங்கியிருந்த அவருக்கு உதவும் வகையில், ஊரிலிருந்து அவரது தாயாரும் வந்தார். அந்த நேரத்தில் எனக்கு கட்டிட வேலை எதுவும் கிடைக்காமல், சில நாட்களாக வீட்டிலேயே நேரத்தைச் செலவிட்டேன். வேலையும் இல்லாமல், கையில் பணமும் இல்லாமல் மிகவும் சோகமாக காணப்பட்டேன்.

ஒருநாள் எதார்த்தமாக அந்த தாயார், என்னைச் சந்தித்து பேசினார். என்னைக் குறித்து விசாரித்த அவர், நான் ஒரு கொடும் பாவி என்பதை தெரிந்து கொண்டார். அதைக் குறித்து என்னை கடிந்து கொள்ளவோ, வெறுத்து தள்ளவோ முயற்சி செய்யாமல், தொடர்ந்து அன்பாக பேசினார். அவரது அன்பான அறிவுரைகளைக் கேட்ட எனக்கு, அவர் மீது மரியாதையை உண்டாக்கியது. மேலும் பல நாட்களாக நான் தேடும் ஒரு மாற்றத்திற்கு, அவரால் தீர்வு அளிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டானது.

எனவே நான் செய்து வந்த எல்லா தீய பழக்கங்களையும் குறித்து அவரிடம் கூறினேன். அதையெல்லாம் கேட்ட அவர், எனக்கு இயேசுவைக் குறித்து அறிமுகம் செய்து, எனது எல்லா பாவங்களையும் இயேசு மன்னிப்பார் என்று கூறினார். இதைக் கேட்ட என்னால், அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஏனெனில் நான் எவ்வளவு பெரிய பாவி என்பது எனக்கு மட்டும் தான் தெரியும்.

கடைசியாக, குடிப்பழக்கம், புகைப்பிடிப்பது, போதைப் பொருட்கள் ஆகியவற்றில் இருந்து என்னை இயேசு விடுவித்தால், அவரை தெய்வமாக ஏற்றுக் கொள்வதாக கூறினேன். அதற்கு உறுதி அளித்த அந்த தாயார், தேவாலயத்திற்கு வருமாறு கூறினார். கோவில்களுக்கு செல்லும் பழக்கம் மட்டுமே இருந்த எனக்கு, தேவாலயத்திற்குள் வித்தியாசமான அனுபவத்தைக் காண முடிந்தது.

மேலும் தேவாலயத்திற்குச் செல்லும் போது, குடித்துவிட்டு தான் சென்றிருந்தேன். ஆனால் உள்ளே சென்ற சிறிது நேரத்தில், எனக்கு இருந்த போதை முழுவதுமாக இறங்கியது. அங்கு நடந்த சம்பவங்கள் எதுவும் எனக்கு புரியவில்லை என்றாலும், வீடு திரும்பிய போது, எனது மனதில் பெரிய சமாதானம் கிடைத்திருப்பதாக உணர்ந்தேன். இரவில் நன்றாக உறங்கினேன். எனக்குள் பல ஆண்டுகளாக நீங்காமல் இருப்பதாக உணரப்பட்ட துக்கம் நீங்கியதாக தெரிந்தது.

எனவே தொடர்ந்து தேவாலயத்திற்கு செல்ல ஆரம்பித்தேன். ஒருசில நாட்களுக்கு பிறகு, மது குடிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னில் இருந்து மறைந்தது. பின்னர் புகைப்பிடிப்பதை கூட விட்டுவிட்டேன். ஒரு ஜெபக்கூட்டத்தைக் கூட விடாமல் போக ஆரம்பித்தேன்.

தேவாலயத்தில் கிடைத்த சில கிறிஸ்தவ நண்பர்களுடன் சேர்ந்து, அவ்வப்போது ஜெபிக்க ஆரம்பித்தேன். எனக்குள் இருந்த பாவம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் முழுமையாக மறைந்து, நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜெபிக்க வேண்டும், தேவ சமூகத்தில் நேரம் செலவிட வேண்டும் என்ற எண்ணம் உண்டானது.

சில நாட்களுக்கு பிறகு எனது பாவங்களை எல்லாம் அறிக்கையிட்டு, ஞானஸ்நானம் எடுத்தேன். அடுத்த நாளே பரிசுத்தாவியின் அபிஷேகத்தையும் பெற்றுக் கொண்டேன். அதற்கு பல தடைகள் வந்த போதும், அதையெல்லாம் ஜெயிக்க முடிந்தது.

ஆனால் அதன்பிறகு எனது வீட்டில் இரவில் ஜெபிக்க அமர்ந்தால், பழைய பாவ எண்ணங்களும், பழைய தெய்வங்களை வழிபட்ட முறைகளும் என் மனதில் அவ்வப்போது குறுக்கிட்டு குழப்ப ஆரம்பித்தது. இதை எப்படி மேற்கொள்வது என்று தெரியாமல் அவதிப்பட்டேன். அப்போது சில கிறிஸ்தவ நண்பர்கள், வீட்டில் உள்ள தேவையற்ற பழைய தெய்வங்களின் படங்களை நீக்குமாறு கூறினர்.

எனக்கும் அது ஒரு சரியான ஆலோசனையாகத் தெரிந்தது. ஒருநாள் ஒரு தேவ ஊழியரின் உதவியுடன், என் வீட்டில் இருந்த எல்லா தெய்வங்களின் படங்களையும் கட்டி, பக்கத்தில் இருந்த ஒரு குளத்தில் எறிந்துவிட்டேன். மிகவும் சந்தோஷமாக வீடு திரும்பிய எனக்கு, பிசாசின் தொல்லைகள் மேலும் அதிகரிக்க துவங்கியது.

வீட்டில் தனியாக தூங்கினால், உடனே பயப்படுத்தும் கனவுகள் வர ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் என் காதுகளில் பல விதமான சத்தங்கள் கேட்க துவங்கியது. “என்னை விட்டுவிட்டு எங்கே போகிறாய்? நான் உன்னை விடமாட்டேன்! உன்னை நிம்மதியாக வாழ விடமாட்டேன் என்றெல்லாம் பல குரல்களை என்னை தொல்லைப்படுத்தின. அப்போது தேவாலயத்தில் இருந்த எனது நண்பர்கள், எனக்காக அதிகமாக ஜெபிக்க ஆரம்பித்தார்கள். மேலும் வாரம் ஒருமுறை நாங்கள் எல்லாரும் சேர்ந்து முழுஇரவும் ஜெபித்தோம்.

கொஞ்சம் கொஞ்சமாக என்னை துரத்தின பிசாசின் வல்லமைகள் பின்வாங்கின. பல ஆண்டுகளாக, மாலை அணிந்து விரதம் எடுத்த போது, எனக்குள் புகுந்த அசுத்த ஆவிகள், என்னை தொல்லைப்படுத்தி வந்தன என்பது பின்நாட்களில் தெரிந்து கொண்டேன்.

தினமும் அதிகாலையிலும், இரவும், என்னை முழுமையாக தேவ கரங்களில் ஒப்புக் கொடுத்து ஜெபித்துவிட்டு படுத்த போது, அந்த அசுத்த வல்லமைகளால், என்னை தொட முடியவில்லை. தேவனுடைய பாதுகாப்பின் வல்லமை, என்னைச் சூழ்ந்து கொண்டது.

மேலும் என்னை அதிகளவில் தேவன் ஆசீர்வதிக்க ஆரம்பித்தார். படிப்பறிவே இல்லாத எனக்கு, அரபு நாட்டில் வேலை கிடைக்க உதவி செய்தார். எனக்கு இருந்த வாழ்க்கையின் குறைவுகள் எல்லாம் நிறைவடைந்தன. இரட்சிக்கப்பட்ட ஒரு பெண் மணந்து கொள்ள தேவன் கிருபைச் செய்தார்.

எந்தத் தகுதியும் இல்லாத பாவியான எனக்கு, விலையேறப்பட்ட இரட்சிப்பை அளித்து, எண்ணிலடங்க நன்மைகளால் நிரப்பிய தேவனை, நன்றியுள்ள இருதயத்தோடு துதிக்கிறேன்.

இந்த சாட்சியைப் படித்துக் கொண்டிருக்கும் நண்பரே, ஏதாவது ஒரு பாவத்தை விட முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? சொந்த முயற்சிகளில் தோல்வி அடைகிறீர்களா? என்னை எல்லா பாவங்களில் இருந்தும் விடுவித்த இயேசு, உங்களையும் விடுவிக்க வல்லமையுள்ளவராக இருக்கிறார். பிசாசின் எல்லா போராட்டங்களில் இருந்தும் ஜெயம் தர, இயேசுவின் நாமத்திற்கு மட்டுமே முடியும் என்பதற்கு நானே சாட்சி. இன்றே இயேசுவிடம் உங்கள் வாழ்க்கையை ஒப்புக் கொடுத்து, நீங்கள் எதிர்பாராத சமாதானத்தையும், சந்தோஷத்தையும் பெறுங்கள். கர்த்தருக்கே ஸ்தோத்திரம்.

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்