கிறிஸ்தவ வாழ்க்கையில் குடும்ப ஜெபம் என்பது முக்கியமான ஒரு நிகழ்வாக அமைகிறது. தனி ஜெபம் மூலம் தேவனோடு நெருங்கி வாழ முடியும் என்றாலும், ஒருவர் பாரத்தை மற்றொருவர் தாங்கும் வகையில் அமைவது குடும்ப ஜெபம்.

ஆனால் நவீன கிறிஸ்தவர்கள் இடையே குடும்ப ஜெபம் வெகுவாக குறைந்து வருகிறது. இது குறித்து கேட்டால், அதற்கு பல சாக்குபோக்குகளைக் கூறுகிறார்கள். பள்ளிக் குழந்தைகளில் இருந்து வயதான முதியவர்கள் வரை ஒவ்வொருவரும் பல்வேறு பணிகளில் விறுவிறுப்பாக உள்ளனர். இதையெல்லாம் கடந்து குடும்ப ஜெபத்திற்கு மிக குறைந்த நேரம் மட்டுமே ஒதுக்க முடிகிறது. மேலும் குடும்ப ஜெபத்தால் அப்படி என்ன ஆசீர்வாதம் கிடைக்க போகிறது என்ற எண்ணமும், இந்த காலத்தில் மேலோங்கி உள்ளது.

கேட்டது:

இந்நிலையில் குடும்ப ஜெபத்தை தொடர்ந்து செய்து வரும் சிலரிடம் இது குறித்து கேட்டு அறிந்தேன். அவர்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்களை வைத்து பார்த்த போது, குடும்ப ஜெபம் என்பது நம் வாழ்க்கையில் தவிர்க்க கூடாத ஒன்று என்று அறிந்து கொள்ள முடிந்தது. அதை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

குடும்ப ஜெபம் என்றால் என்ன?

குடும்பத்தில் உள்ள எல்லாரும் சேர்ந்து தேவ சமூகத்தில் கூடி வருவதை குடும்ப ஜெபம் என்கிறோம். இதனால் தினமும் குடும்ப ஜெபத்திற்கென ஒரு நேரத்தை ஒதுக்க வேண்டும். காலை மற்றும் மாலை என்று இரு வேளைகளில் குடும்ப ஜெபம் செய்ய வேண்டும்.

காலை ஜெபத்தில் ஒரு நாளுக்கான புதிய தேவ கிருபையை தேவனிடம் இருந்து பெற்று கொள்ள வேண்டும். அன்று நடக்கவிருக்கும் எல்லா காரியங்களையும் தேவ சமூகத்தில் ஒப்புக் கொடுக்க வேண்டும். நம் தேவைகளை தேவனிடம் அறிவிக்க வேண்டும்.

மாலை ஜெபத்தில் அந்த நாளில் கடந்து வந்த பாதைகளையும், தேவன் நடத்திய வழிகளையும் எண்ணி நன்றி செலுத்தி துதிக்க வேண்டும். நம் தேவைகள் சந்திக்கப்பட்டதை எண்ணி துதிக்க வேண்டும். நமக்குள் வந்த குறைகள், குற்றங்கள், வேத வசனத்திற்கு மாறான நடவடிக்கைகள் ஆகியவற்றை தேவ சமூகத்தில் அறிக்கையிட்டு மன்னிப்பை பெற்று கொள்ள வேண்டும்.

குடும்பத்தில் ஏற்படும் நன்மைகள்:

ஒரு குடும்பத்தில் உள்ள எல்லா நபர்களும் குடும்ப ஜெபத்தில் ஒருமனப்பட்டு ஜெபிப்பதால், அது அதிக சக்தி வாய்ந்ததாக உள்ளது. குடும்பத்தில் உள்ள மனவருத்தங்கள், விரோதங்கள், பகை, வைராக்கியம், மனகசப்பு ஆகியவை மறைகிறது. தேவ சமூகத்தில் வைத்து கூறும் போது, அதை தேவனும் கேட்கிறார் என்று மனநிலை எல்லாருக்குள்ளும் உண்டாகிறது.

குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டாலும், மற்றவர்களுக்கு ஏற்ப, தனது நேரத்தை மாற்றியமைத்து ஜெபத்தில் கலந்து கொள்வதால், விட்டு கொடுக்கும் மனப்பான்மை அதிகரிக்கிறது. நவீன காலத்தில் தனிப்பட்ட முறையில் குடும்பத்தோடு நேரத்தை செலவிட முடியாமல் கஷ்டப்படும் பலரும் குடும்ப ஜெபத்தில் ஒருவருக்காக மற்றொருவர் ஜெபிக்க வாய்ப்பு கிடைக்கிறது.

குடும்பத்திலும், குடும்ப நபர்களிடையேயும் நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகள், வேதனைகள், தேவைகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள முடிவதோடு, அவர்களின் வாழ்க்கையில் தேவன் செய்த அதிசயங்கள், அற்புதங்கள் ஆகியவற்றையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

ஆவிக்குரிய நன்மைகள்:

ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் வேறுபட்ட ஆவிக்குரிய நிலையில் இருப்பார்கள். ஏனெனில் ஒவ்வொருவரும் சந்திக்கும் போராட்டங்கள், சூழ்நிலைகள் ஆகியவை வித்தியாசமானது என்பதோடு, அவர்கள் செய்யும் வேலைகள், நேரம், மனநிலை என்று அனைத்தும் வேறுபட்டு உள்ளன.

இந்நிலையில் குடும்ப ஜெபத்தில் அனைவரும் ஒருமனப்பட்டு ஜெபிக்கும் போது, ஆவியில் உற்சாகம் உள்ளவர்களில் இருந்து சோர்ந்து போனவர்களுக்கு புதுபலம் கிடைக்கிறது. அவிசுவாசத்தோடு, தோல்வியோடு ஜெபத்திற்கு வருபவர்களுக்கு, மற்றவர்களின் விசுவாசத்தோடு கூடிய ஜெபம் மற்றும் அவர்களின் அனுபவங்களைக் கேட்கும் போது, பெரிய விசுவாசமும் நம்பிக்கையும் உண்டாகிறது.

ஒருவர் பரிசுத்தாவியில் நிரம்பி ஜெபிக்கும் போது, அந்த ஆவியின் வல்லமை அருகில் உள்ள மற்றவர்களின் மீது பகிர்ந்து அளிக்கப்படுகிறது. பரிசுத்தாவியின் சந்தோஷமும் சமாதானமும் குடும்பத்தில் உள்ள எல்லாருக்கும் கிடைக்கிறது.

வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் புதிதாக இரட்சிக்கப்பட்டவர்களுக்கு, மற்றவர்களின் நடவடிக்கைகளின் மூலம் தேவ சமூகத்தை எப்படி இன்பமாக அனுபவிப்பது என்று அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் தனி மனிதனாக நின்று பிசாசு, மாமிசம், உலகம் ஆகியவற்றிற்கு எதிராக போராடுவதை விட, குடும்பமாகச் சேர்ந்து போராடுவது எளிதாக இருக்கும் அல்லவா?

குடும்ப ஜெபம் என்பது நேரம் போக்கிற்காக நடத்தப்படும் சடங்கு என்று பலரும் கருதும் போது, சில குடும்பங்களில் நடத்தப்பட்ட குடும்ப ஜெபங்களின் மூலம் பலரும் இரட்சிக்கப்பட்டதாக சாட்சிகள் கேட்டிருக்கிறேன். எனவே குடும்ப ஜெபத்தை சாதாரணமாக நினைக்க முடியாது. ஆவிக்குரிய மற்றும் சரீரத்திற்குரிய ஆசீர்வாதங்களுக்கு ஆதாரமாக அமைகிறது எனலாம்.

நாம் சார்ந்திருக்கும் குடும்பத்திற்கு தேவனுடைய பாதுகாப்பையும், அனைவருக்கும் இடையிலான ஐக்கியத்தையும் வளர்க்க உதவும் குடும்ப ஜெபம், இல்லையெனில் நம் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மேற்கூரை இல்லை என்று கூறலாம்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த குடும்ப ஜெபங்கள், நம் குடும்பத்தில் தினமும் காலையும், மாலையும் நடக்கிறதா? இல்லை என்றால் அதற்கு மற்றவர்களை குற்றப்படுத்துவதை விட்டுவிட்டு, அதற்கான முயற்சிகளில் இன்றே நாம் ஈடுபடுவோம். ஏனெனில் தினமும் குடும்ப ஜெபம் நடைபெறும் குடும்ப நபர்களால் மட்டுமே யோசுவா கூறுவது (யோசுவா:24.15) போல, நானும் என் வீட்டாருமோ என்றால், கர்த்தரையே சேவிப்போம் என்று கூற முடியும். உங்களால் அப்படி கூற முடிகிறதா?

- கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்