இயேசுவின் சிலுவை பாடுகளைக் குறித்து அநேக காரியங்களை நாம் கடந்த சில நாட்களாக, தேவாலயங்களில் கேட்டு வருகிறோம். இந்நிலையில் சிலுவையில் அவர் பட்ட பாடுகள் எல்லாமே ஒரு காலத்தில் பாவிகளாக இருந்த நமக்காகவே என்பது எல்லாரும் அறிந்ததே. ஆயினும் அதில் கவனிக்கத்தக்க சில காரியங்களை இந்த செய்தியில் காண்போம்.

இயேசு சிலுவையில் அறையப்படும் முன் அவரது உடலில் இருந்த எல்லா துணிகளும் நீக்கப்பட்டதாக, அந்த காலத்தில் வாழ்ந்த வரலாற்று ஆசிரியர்களின் குறிப்புகள் கூறுகின்றன. மேலும் சில வேத ஆராய்ச்சியாளர்களும் அதை உறுதி செய்துள்ளனர்.

சிலுவையில் அறையப்படும் முன் அந்த தண்டனைக்கு பாத்திரவானாக உள்ள ஒரு குற்றவாளியின் அனைத்து உடைகள் நீக்கப்படுவது அன்றைய வழக்கம் என்றாலும், இயேசுவிற்கு அப்படி ஏன் செய்யப்பட்டது? என்ற கேள்விக்கு பரிசுத்த வேதாகமம் பதில் அளிக்கிறது.

ஆராய்ந்தது:

நம் வாழ்க்கையில் உள்ள எல்லா குறைகளையும் நிறைவு செய்யும்படி, இயேசு சிலுவையில் மரித்தார். எடுத்துக்காட்டாக, நமக்கு வரும் நோய்கள், வியாதிகளை நீக்கும்படி, அவர் உடலில் பல இடங்களில் காயங்கள் பட்டார். அவரது தழும்புகளால் குணமாகிறோம் என்று வேதம் கூறுகிறது.

இந்நிலையில் மேற்கூறிய கேள்விக்கான பதிலை கண்டறிய, ஆதியாகமம்:3.10-யை படிக்க வேண்டும். இங்கு ஆதி பெற்றோரான ஆதாமும் ஏவாளும் தேவனுக்கு கீழ்படியாமல் பாவம் செய்த பிறகு, நிர்வாணிகளாக மாறினார்கள் என்று காண்கிறோம். ஏனெனில் தேவ மகிமையில் மறைக்கப்பட்டிருந்த அவர்களின் உடல், இப்போது அதை இழந்து நிர்வாணம் வெளியே காணக் கூடியதாக மாறியது.

இதனால் ஆதாமின் வம்சத்தில் வந்த எல்லா மனிதர்களும் தேவ மகிமை இல்லாமல், பாவத்தில் நிர்வாணிகளாக மாறிவிட்டோம். இந்த நிலையை மாற்றும்படி, மகிமையில் நிறைந்த இயேசு மண்ணுலகத்திற்கு வந்தார். எந்த மனிதன் நிர்வாணியாக மாறினானோ, அவனை மீட்கும்படி தனது உடலில் இருந்த உடையை எடுத்துக் கொள்ள தம்மையே ஒப்புக் கொடுத்தார்.

இந்த உடை இல்லாவிட்டால் என்னாகும் என்பதை குறித்து, மேலே வாசித்த அதே வசனத்தில் ஆதாம் கூறுகிறார். தனது நிர்வாணத்தை மறைக்க முடியாமல், பயந்து, ஒளிந்து கொண்டிருந்தான் ஆதாம்.

நாம் வாழ்க்கையில் கூட, நாம் செய்யும் ஒவ்வொரு பாவத்தையும் யாரும் அறியக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறோம். அதையும் கடந்து எதிர்பாராதவிதமாக யாராவது அறிந்துவிட்டால், அதை எண்ணி பயப்படுகிறோம். நமது குறைகள் அல்லது பாவங்களை குறித்து அறிந்தவர்களின் முன்னால் செல்ல வெட்கப்படுகிறோம்.

இந்த நிலையை மாற்ற வந்த இயேசு, தமது உடலை நிர்வாணமாக்கிய போதும், மவுனமாக சகித்தார். அவரது நிர்வாணத்தை பார்த்து சூரியன் கூட சில மணிநேரங்களுக்கு இருண்டு போய்விட்டது.

பிரபலமான மனிதர்களின் மறைமுகமாக எடுக்கப்பட்ட வீடியோக்கள் அல்லது படங்கள் வெளிவரும் போது, அதை குறித்த பெரிய அளவிலான சர்ச்சை ஏற்படுகிறது. தங்களின் மறைவான காரியங்களை குறித்த வீடியோக்கள் இன்டர்நெட்டில் வெளியிடப்பட்டதை கண்டு, இன்று பலரும் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களை குறித்து செய்தித்தாள்களில் வாசிக்கிறோம்.

ஆனால் நமது இரட்சகர் இயேசுவை பாருங்கள். நமக்காக தன் ஜீவனை கொடுத்தது மட்டுமின்றி, சிலுவையில் தமது மானத்தையே விட்டு கொடுத்துள்ளார்.

சாலையோரத்தில் உள்ள ஒரு பிச்சைக்காரனை கண்டு நாம் மனமிரங்கி, கொஞ்சம் பணம் கொடுப்போம். அல்லது உணவு, பழைய உடை என்று ஏதாவது கொடுப்போம். ஆனால் அந்த குறிப்பிட்ட மனிதர், நம்மிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தால், அதை எதிர்த்து போராடுவோம். அதற்கு அனுமதிக்கவும் மாட்டோம்.

ஆனால் இயேசுவோ, பாவத்தில் மூழ்கி கிடந்து, யாருக்கு பயனில்லாமல் இருந்த நம்மை தேடி வந்தார். நாம் அவரை கேலி, கிண்டல், பரிகாசம் செய்து இருக்கிறோம். நமது நண்பர்களின் மத்தியில், அவரை மறுத்தலித்து உள்ளோம். அப்படிப்பட்ட நம்மை இரட்சிக்க, தனது பரலோகத்தில் இருந்த உன்னதமான நிலையை விட்டு இரங்கி வந்து, தனது மானத்தையே இயேசு விட்டு கொடுத்துள்ளார்.

சிந்தித்தது:

இயேசுவின் சிலுவை மரணத்தில் இவ்வளவு மேன்மையான ஒரு காரியத்தை செய்திருக்கிறார். ஆனால் இன்று நம்மில் எவ்வளவு பேர் அவரது தியாகத்தில் பங்கேற்கிறோம். இன்று பல இடங்களில் தேவாலயங்களின் மீதும் கிறிஸ்தவர்களின் மீதும் தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்படுகின்றன. நாளை இதை வாசித்து கொண்டிருக்கும் உங்கள் மீதும் இது போன்ற சம்பவங்கள் நடத்தப்படலாம். இயேசுவிற்காக, இயேசுவை போல உங்களால் அவற்றை சகித்து கொள்ள முடியுமா?

சிலுவையில் இயேசு இறந்தார் என்று வெளியோட்டமாக வாசித்து விட்டு, முகத்தை துக்கமாக வைத்து கொள்வதை விட, இயேசு கடந்து சென்ற அந்த சந்தர்ப்பத்தில் நம்மை வைத்து பார்க்க வேண்டும். அப்போது இயேசுவிற்கு நம் மீது அன்பு ஆழத்தை புரிந்து கொள்ள முடியும். நம்மை பகைக்கிறவர்களையும் ஆசீர்வதிக்க வேண்டும் என்று இயேசு கூறினார். அதேபோல தனது கடைசி நிமிடம் வரை, அதை இயேசு செய்து காட்டினார்.

இதனால் தான் அவருக்கு விரோதிகளாக இருந்த நம்மை அவர் அந்த அளவிற்கு நேசித்தார். அதேபோல, கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக செயல்படும் அல்லது நமக்கு விரோதமாக வரும் நபர்களை நாம் நேசிக்க முடிகிறா? அப்படி நேசிக்க முடிந்தால் மட்டுமே, இயேசுவின் உண்மையான சீடனாக, அவரது மனதின் விருப்பத்தை செய்கிறவர்களாக நாம் மாற முடியும்.

- கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்