நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் அனுபவித்த பாடுகளைக் குறித்து சிந்தித்து வருகிறோம். கடந்த செய்தியில் அவர் நமக்காக மானத்தை இழந்து, நம்முடைய பாவத்தின் நிர்வாணத்தை நீக்கினார் என்று கண்டோம். இன்று மற்றொரு காரியத்தை குறித்து சிந்திப்போம்.

ஆராய்ந்தது:

இயேசுவை சிலுவையில் அறைந்த பிறகு, பலரும் அவரை கேலி, கிண்டல் செய்ததாக வேதம் கூறுகிறது. இதில் முக்கியமாக, அவரை தேவனாக நிரூபிக்கும் வகையில் சிலுவையில் இருந்து இறங்கி வருமாறு கேட்டார்கள். ஆனால் அதற்கு அவர் எதுவும் பதில் கூறவில்லை. இயேசு ஏன் அப்படி செய்யவில்லை? அப்படி செய்திருந்தால், பலரையும் இரட்சித்து இருக்கலாமே! என்ற எண்ணம் நமக்குள் உண்டாகிறது.

இயேசுவின் பிறப்பிற்கு முன்பே, அவரை குறித்த எல்லா காரியங்களும் தீர்க்கத்தரிசனங்களாக உரைக்கப்பட்டிருந்தன. இதில் அவர் சிலுவையில் இருந்த போது மட்டும், 30 தீர்க்கத்தரிசனங்கள் நிறைவேறின என்று வேத வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் அவர் சிலுவையில் இருந்து இறங்கி வந்திருந்தால், அந்த செயல் அவரை குறித்து கூறியிருந்த தீர்க்கத்தரிசனங்களுக்கு விரோதமாக மாறியிருக்கும்.

ஏனெனில் உலகின் பாவங்களை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டியாக இயேசு, உலகிற்கு வந்தார். அதை முழுமைப்படுத்த வேண்டுமானால், அவர் சிலுவையிலேயே மரிக்க வேண்டும். அப்படி மரிக்காமல் இறங்கி வந்திருந்தால், அந்த பணி பாதியில் தடைப்பட்டிருக்கும். எனவே இயேசு சிலுவையில் இருந்து இறங்கி வரவோ, மற்றவர்களின் வார்த்தைகளுக்கு பதில் அளிக்கவோ இல்லை.

இயேசு வாழ்க்கை முழுவதும் வேத வசனங்களுக்கு ஏற்ப வாழ்ந்தார். மேலும் அவர் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்பது தேவ சித்தமாக இருந்தது. அதை நிறைவேற்றும் வகையில், தன்னையே சிலுவையில் இயேசு ஒப்புக் கொடுத்தார். இதனால் தனது பாடுகளை சிலுவையில் சகித்து கொண்டிருக்கும் நேரத்திலும், வேத வசனங்களுக்கு ஏற்ப தனது செய்கை இருக்க வேண்டும் என்பதில் இயேசு உறுதியாக இருந்தார்.

நம் வாழ்க்கையில் கூட இயேசுவிற்காக வாழும் போது, அதற்கு விரோதமாக எத்தனையோ கஷ்டங்கள், துன்பங்கள், பாடுகள் ஆகியவை வருகின்றன. இது போன்ற கஷ்டங்கள் மிகுந்த நேரத்தில் நாம் வேத வசனங்களுக்கு ஏற்றவாறு வாழ்கிறோமா? என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது.

ஆனால் பொதுவாக கஷ்டங்களின் மத்தியில், இயேசுவை போல நாம் வாழ முடிவதில்லை. அந்த நேரத்தில் பதற்றமடைந்து, உலக மக்களிடம் இருந்து உதவியை பெற நாடுகிறோம். சிலுவையில் இருந்த இயேசுவிற்கு, உலக மக்கள் ஆலோசனை கூறியது போல, நமக்கும் சிலர் அறிவுரைகளை கூறுகிறார்கள்.

தன்னை சுற்றிலும் நின்றவர்கள் கூறியது போல, இயேசு சிலுவையில் இருந்து இறங்கி வந்திருந்தால், அவர்களை இரட்சித்து இருக்க முடியும் என்பது உண்மையே. அதேபோல உலக மக்கள் கூறும் ஆலோசனைகளின்படி செய்யும் போது, தேவ நாமம் மகிமைப்படுவது போல தெரியும். ஆனால் அது தேவ வசனத்திற்கு புறமாக இருக்கலாம்.

எனவே கஷ்ட நேரத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களும், தேவ வசனங்களுக்கு ஏற்றவாறு இருக்கிறதா? என்று சோதித்து பார்க்க வேண்டும். வாழ்க்கையின் எல்லா சந்தர்ப்பங்களிலும் வேத வசனங்களுக்கு தகுந்தவாறு வாழ்ந்தால், இயேசுவை போல செய்யாத தவறுகளுக்காக இழப்புகளைச் சந்திக்க நேர்ந்தாலும், அதை மகிமையாக திரும்ப பெற்று கொள்ள முடியும்.

சிந்தித்தது:

இயேசு சிலுவையில் இருந்து இறங்கி வராமல், வேத வசனங்களுக்கு ஏற்ப தமக்கு தேவனால் அளிக்கப்பட்ட பணியை முழுமையாக நிறைவேற்றிய போது, உலகின் இரட்சகராக மாறினார். அதேபோல நாமும் செயல்படும் போது, உலகின் இரட்சிப்பிற்காக நம்மை தேவன் பயன்படுத்துவார்.

இயேசுவின் சிலுவை பாடுகளின் போது கூட, நமக்கு ஒரு சரியான மாதிரியை காட்டி சென்றுள்ளார். இதேபோல நாம் கடந்து செல்லும் கஷ்டங்கள் மற்றும் துன்பங்களின் மத்தியிலும், இயேசுவின் நாமத்தை மகிமைப்படுத்தும் வகையில், வேத வசனங்களுக்கு ஏற்ப நம் வாழ்க்கையை அமைத்து கொள்வோம். அப்போது நாம் எதிர்பாராத மகிமையான காரியங்களுக்காக, நம்மை தேவன் பயன்படுத்தி கொள்வார்.

- கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்