இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்களில் சில பிரிவினர் நகை அணியக் கூடாது என்று கூறுகிறார்கள். மற்றொரு பிரிவினர் நகை அணிவதில் எந்தத் தவறும் இல்லை என்கிறார்கள். தேவ ஊழியர்களிலும் மேற்கண்ட இரு வகையான பிரிவினரை காண முடிகிறது.

மேலும் இருத்தரப்பினரும் தங்களின் கருத்தை நிரூபிக்க பல வேத வசனங்களையும் முன்வைக்கிறார்கள். இதனால் புதிதாக இரட்சிக்கப்படுபவர்களுக்கு நகை அணியும் காரியத்தில் குழப்பம் நீடிக்கிறது. எனவே இரட்சிக்கப்பட்டவர்கள் நகை அணியலாமா? கூடாதா? என்பதை இந்தச் செய்தியில் ஆராய்வோம்.

ஆராய்ந்தது:

முதலில் இரட்சிக்கப்பட்டவர்கள் நகை அணியலாம் என்று கூறுபவர்களின் கூற்றுகளை வேத வசனத்தின் அடிப்படையில் ஆராய்வோம். பரிசுத்த வேதாகமத்தைத் தொடக்கத்தில் இருந்தே ஆராய்ந்து பார்த்தால், பல இடங்களில் நகைகள், அணிகலன்கள் அணியப்பட்டதாக காண முடிகிறது.

விசுவாசத்தின் தகப்பன் என்று அழைக்கப்படும் ஆபிரகாமின் வாழ்க்கையில் பல இடங்களில் பலரால் நகைகள் அணியப்பட்டதாக காண முடிகிறது. எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து கானானுக்கு திரும்பிய இஸ்ரவேல் குடும்பம், மோசேயின் தலைமையில் எகிப்தியரிடம் இருந்து நகைகளை வாங்கியதாக காண முடிகிறது.

சவுல், தாவீது, சாலொமோன் போன்ற இஸ்ரவேல் ராஜாக்களின் காலத்திலும், தங்கம், வெள்ளி நகைகள் அணியப்பட்டதாக வேதத்தில் காண முடிகிறது. இப்படி பழைய ஏற்பாட்டில் பல பரிசுத்தவான்களும் நகைகள் பயன்படுத்தியதாக வேதம் குறிப்பிடுகிறது.

புதிய ஏற்பாட்டில் நகை அணிவது அவ்வளவாக முக்கியத்துவம் பெறவில்லை. ஆனால் இயேசு கூறிய கெட்ட குமாரன் கதையில் கூட, அவன் திரும்பி வரும் போது, அவனுக்கு மோதிரம் அணிவிக்கப்பட்டதாக வருகிறது. எனவே இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் நகைகள் அணிவதில் எந்த தவறும் இல்லை என்கிறார்கள்.

அடுத்தப்படியாக நகை அணியக் கூடாது என்று கூறுபவர்களின் வேதாகம அடிப்படையிலான கூற்றுகளைப் பார்ப்போம். பழைய ஏற்பாட்டு காலத்திலேயே நகை அணிந்த இஸ்ரவேல் மக்களின் பின்மாற்றத்தை நாம் காண முடிகிறது. 10 கட்டளைகளைப் பெற மோசே 40 நாட்கள் மலையில் இருந்த போது, தாங்கள் அணிந்திருந்த நகைகளைக் கழட்டி கொடுத்து, கன்றுக் குட்டியை உண்டாக்கியதாக வேதம் கூறுகிறது. எனவே நகைகள் மூலம் நமக்கு பின்மாற்றம் உண்டாகும்.

புதிய ஏற்பாட்டில் கூட பேதுரு சபைக்கு எழுதும் போது, 1பேதுரு:3.3 வசனத்தில் பொன் ஆபாரணங்கள் உங்களுக்கு அலங்கரிப்பாக இருக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். எனவே புறம்பான அலங்கரிப்பு கிறிஸ்தவர்களுக்கு இருக்கக் கூடாது. எனவே நகைகளை அணியக் கூடாது என்கிறார்கள்.

சிந்தித்தது:

மேற்கூறிய இரு பிரிவினரும் முன்வைத்துள்ள வசனங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, ஒரு காரியத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். அதாவது நகைகள் அணிவதில் தேவனுக்கு எந்த விரோதமும் இல்லை. ஆனால் அது நம் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு தடையாக இருக்கக் கூடாது.

மோசேயின் காலத்தில் நகைகள் பின்மாற்றத்திற்கு ஒரு காரணமாக இருந்தது உண்மை தான். ஆனால் அந்த நகைகளை வாங்கக் கூறியதே தேவன் தான். அவர்களை செல்வச்செழிப்பாக வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தேவன் பொன் ஆபாரணங்களை வாங்க கூறுகிறார். மாறாக, அந்த வசதியை வைத்து கொண்டு, பாவம் செய்ய அல்ல.

புதிய ஏற்பாட்டில் கூட பேதுரு கூறும் போது, பொன் ஆபாரணங்கள் அலங்காரமாக இருக்க வேண்டாம் என்று கூறுகிறாரே தவிர, அதை அணியக் கூடாது என்று கூறவில்லை. ஏனெனில் அவற்றை விட ஆவியின் கனிகளாகிய உள்ளான மனிதனின் அலங்காரம் சிறப்பாக இருக்க வேண்டும். உடலில் விலை உயர்ந்த நகைகளை அணிந்து கொண்டு, நமக்குள் எந்தொரு இயேசுவின் பண்புகளும் வெளிப்படவில்லை எனில், அதில் பலன் இல்லை என்கிறார் பேதுரு.

இதனால் தான் புதிய ஏற்பாட்டு சபையில் இருக்க வேண்டிய ஒழுக்கங்களைக் குறித்து எத்தனையோ காரியங்களை எழுதிய அப்போஸ்தலர் பவுல் கூட, நகைகளை அணிய வேண்டாம் என்று எங்கேயும் குறிப்பிடவில்லை.

எனவே இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் தங்க, வெள்ளி, பிளாட்டினம் என்று எந்த நகைகளை வேண்டுமானாலும் அணிவதில் தவறு இல்லை. அணியாமல் இருப்பதால் சிறப்பும் இல்லை. நாம் பேசும் வார்த்தைகள், செய்யும் காரியங்கள், நடவடிக்கைகள் ஆகியவற்றில் இயேசுவின் மாதிரி வெளிப்பட வேண்டும். அதை தான் தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார். இல்லாவிட்டால், இயேசு கூறியது போல வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைகளாக வெளியே மட்டும் பரிசுத்தவான்களாக காட்டி கொள்ளலாமே தவிர, தேவனுக்கு பிரியமாக இருக்க முடியாது.

- கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்