இயேசுவை காட்டிக் கொடுத்த யூதாஸை குறித்து யாரும் அதிகமாக சிந்திப்பது இல்லை. பொதுவாக, யூதாஸை போல இருக்கக் கூடாது என்று தான் சபைகளில் போதிக்கப்படுகிறது. ஆனால் இயேசுவின் 12 சீடர்களில் ஒருவராக இருந்த யூதாஸைக் குறித்து அறிந்து கொண்டால், அவர் மீதான கிறிஸ்தவர்களின் கோபம் தணிய வாய்ப்புள்ளது.

ஏனெனில் வரலாற்று குறிப்புகளில் மட்டுமின்றி, பரிசுத்த வேதாகமத்தில் கூட யூதாஸ்காரியோத்தை குறித்த பல நல்ல காரியங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே இயேசுவின் சீடராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுள் ஒருவராக இருந்த யூதாஸைக் குறித்து இந்தச் செய்தியில் காண்போம்.

படித்தது:

சமீபத்தில் இயேசுவின் சீடர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த ஒரு புத்தகத்தை படிக்க நேர்ந்தது. அதில் 12 அப்போஸ்தலர்களின் பின்னணி மற்றும் இயேசுவிடம் அவர்கள் பெற்று கொண்ட அனுபவங்கள் ஆகியவற்றை குறித்த பல காரியங்கள் வரலாற்று சான்றுகளுடன் அளிக்கப்பட்டிருந்தது. அதில் இயேசுவை காட்டிக் கொடுத்த யூதாஸை குறித்த காரியங்களும் இடம்பெற்றிருந்தன.

யார் இந்த யூதாஸ்?

இயேசு கிறிஸ்துவிற்கு இருந்த 12 சீடர்களில் மூன்று பேரின் பெயர்களில் இந்த யூதாஸ் என்ற பெயர் இணைந்து இருந்தது. 1. யூதாஸ் தோமா – இந்தியாவிற்கு சுவிஷேசம் அறிவிக்க வந்து, சென்னையில் கொல்லப்பட்ட புனித தோமா. 2. யூதாஸ் ததேயு – இயேசுவின் சகோதரர் என்று அறியப்படும் இவர் யாக்கோபின் யூதாஸ், லெபேயு என்று பல பெயர்களிலும் அறியப்படுகிறார். 3. யூதாஸ் காரியோத்து – இயேசுவை காட்டி கொடுத்தவர். இயேசுவின் நாட்களில் யூதாஸ் என்ற பெயர் மிகவும் பிரபலமாக இருந்ததால், மேலும் அநேகருக்கு இந்த பெயர் சூட்டப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் உள்ளன.

இயேசுவின் சீடராக இருந்த யூதாஸ் காரியோத்து, அலெக்சாந்திரியா பட்டணத்தைச் சேர்ந்தவராக இருந்தார். 4 சுவிசேஷங்களிலும் யூதாஸ் காரியோத்து குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டாலும், அவர் ஏழைகளுக்கு உதவும் மனநிலை மற்றும் எதையும் வீணாக்க கூடாது என்ற நல்ல பண்பையும் கொண்டிருந்தார் என்று வேதம் (மத்தேயு:26.8-9, யோவான்:12.5) கூறுகிறது.

மேலும் இயேசுவின் சீடர்களில் கணக்காளராக யூதாஸ் நியமிக்கப்பட்டிருந்தார். அதில் சில திருட்டு வேலைகளையும் செய்து வந்ததாக, யோவான் சுவிசேஷத்தில் (யோவான்:12.6) குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசுவை காட்டி கொடுக்கும் வரை, 12 சீடர்களில் யூதாஸும் முக்கியமானவராகவே திகழ்ந்தார் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

மேலும் அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும் அதிகாரம் கொடுத்து அனுப்பிய போது, யூதாஸும் இருந்துள்ளார். எனவே இயேசுவின் ஊழியத்தில் எந்தத் தடங்கலையும் குழப்பத்தையும் யூதாஸ் செய்யவில்லை என்பது உறுதியாகிறது.

இயேசுவை காட்டி கொடுக்கும் வரை, இயேசுவை இஸ்ரவேலின் ராஜாவாக யூதாஸ் ஊகித்திருந்தார் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். மேலும் பணத்திற்காக இயேசுவைக் காட்டிக் கொடுத்தாலும், தனது மனதில் குற்ற உணர்வு கொண்டவராக, அந்த வெள்ளிக் காசுகளை திரும்ப கொடுக்க முயற்சித்தாக வேதம் கூறுகிறது.

இயேசுவை பல முறை கொலைச் செய்ய முயற்சிகள் நடந்தும், அவைகளில் இருந்து அவர் தப்பினார் (யோவான்: 8.59) என்பதால், இயேசுவை காட்டி கொடுத்தாலும், அவர் எப்படியாவது தப்பி விடுவார் என்ற எண்ணமும் யூதாஸுக்கு இருந்திருக்கலாம் என்று வேத ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

யூதாஸ் செய்த தவறு:

இயேசுவை காட்டிக் கொடுத்த யூதாஸ், அந்தக் குற்ற உணர்வு வந்த போது, அதற்காக மன்னிப்பு கேட்க தயாராகவில்லை. மாறாக, தன்னையே மாய்த்து கொண்டார். காட்டி கொடுக்க அளிக்கப்பட்ட பணத்தைத் திரும்பக் கொடுத்தாவது தனது தவறை திருத்தி கொள்ளலாம் என்று நினைத்தாரே தவிர, இயேசுவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அது தான் யூதாஸ் செய்த மிகப் பெரிய தவறு எனலாம்.

யூதாஸை விட பேதுரு செய்த தவறு மிகப்பெரியது. ஏனெனில் பேதுரு மூன்று இயேசுவை மறுத்தலித்து கூறியதோடு, தனக்கு தெரியாது என்று சத்தியம் கூட செய்தார். ஆனால் தனது குற்றத்திற்காக மனம் கசந்து அழுத போது, மன்னிப்பை பெற்று கொண்டார்.

யூதாஸின் தற்கொலையில் வேத வசனங்களின் அடிப்படையில் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. மத்தேயு:27.3-10 வசனங்களைப் படிக்கும் போது, இயேசுவை காட்டி கொடுக்க பெற்று கொண்ட வெள்ளிக் காசை ஆசாரியர்களிடம் திரும்ப கொடுத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் காசை வைத்து ஆசாரியர்கள், ஒரு நிலத்தை வாங்கியதாகவும், இது ஒரு தீர்க்கத்தரிசன நிறைவேறுதல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்போஸ்தலர்களின் நடபடிகள்:1.18-19 வசனங்களில், இயேசுவை காட்டி கொடுத்த பணத்தில் யூதாஸ் ஒரு நிலத்தை வாங்கினார். அதன்பிறகு தலைக்கீழாக வீழ்ந்து குடல் சரிந்து இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிந்தித்தது:

இயேசுவிடம் 3 ஆண்டுகளுக்கு மேலாக சீஷராக இருந்த யூதாஸ், அவரிடம் இருந்த மேன்மையான பண்புகளைக் கற்று கொள்ளவில்லை என்பது அவரது முடிவில் இருந்து தெரிய வருகிறது. இயேசுவின் ஊழிய நாட்களில் எத்தனையோ நபர்களை இயேசு மன்னித்ததை நேரடியாக கண்ட யூதாஸுக்கு, அதை தன் வாழ்க்கையில் பயன்பாட்டில் கொண்டு வர முடியவில்லை.

இது போன்ற ஒரு நிலை இன்றைய கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஏற்படக் கூடாது. யூதாஸிடம் இருந்தது போல, நம்மிடம் நிறைய நல்ல பண்புகள் இருக்கலாம். ஆனால் பல வாழ்க்கை சூழ்நிலைகளில் இயேசுவை காட்டி கொடுத்து விடுகிறோம். அதற்காக நம்மை நாமே மன்னிக்க முடியாமல், இயேசுவிடம் மன்னிப்பும் கேட்காமல் பின்மாற்றத்தில் சென்று ஆத்ம இரட்சிப்பை இழந்து போகக் கூடாது.

இயேசுவின் பண்புகளை நாம் சரியாக அறிந்து கொண்டு, நம் குறைகளை கிருபையாக மன்னிக்குமாறு கேட்க தவறக் கூடாது. அப்போது மனந்திரும்பி தன்னிடம் வரும் ஒருவரையும் தள்ளாத நம் ஆத்மநேசர், பேதுருவைப் போல நம்மையும் ஒரு மேன்மையான இடத்திற்கு உயர்த்துவார்.

- கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்