இயேசுவின் படத்தை வைத்து ஜெபிப்பது என்பது இன்றைய கிறிஸ்தவர்கள் இடையே ஒரு சாதாரண நிகழ்வாக மாறி வருகிறது. பாரம்பரிய கிறிஸ்தவர்கள் தான் இப்படி செய்கிறார்கள் என்றால், நவீன கால இரட்சிக்கப்பட்டவர்கள் கூட தங்கள் வீடுகளில் இயேசு நாதரின் படங்களைக் கொண்ட வசனங்கள் இருப்பதைக் காணலாம்.

சிலர் அந்தப் படத்தைப் பார்த்து கொண்டு ஜெபிக்கிறவர்களும் உண்டு. இந்நிலையில் நாம் ஜெபிக்கும் போது, இயேசு நாதர் படத்தை வைத்து ஜெபிக்கலாமா என்ற கேள்விக்கு பரிசுத்த வேதாகமம் அடிப்படையில் பதிலை காண்போம்.

பார்த்தது:

சமீபத்தில் ஒரு கிறிஸ்தவ நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவர் இரட்சிக்கப்பட்ட பெற்றோருக்கு பிறந்தவர். ஆவிக்குரிய சபையில் ஞாயிறு பள்ளி படித்து, ஞானஸ்நானம் எடுத்து தொடர்ந்து ஆலயத்திற்கு செல்பவர். ஆனால் அவரது வீ்ட்டில் நுழைந்த உடன் இயேசு நாதரின் படத்தை வைத்திருந்தார். அதை கண்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

இது குறித்து கேட்ட போது, நாம் ஆராதிக்கும் தேவனை கண்களுக்கு முன்பாக வைத்து ஆராதிக்கும் போது, கவனம் சிதறுவது இல்லை என்று விளக்கம் அளித்தார். அதிலிருந்து அவர் எந்த அளவிற்கு ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ந்து இருக்கிறார் என்பதை அறிய முடிந்தது.

ஆராய்ந்தது:

பரிசுத்த வேதாகமத்தில் மோசேக்கு அளிக்கப்பட்ட 10 கட்டளைகளில் முதல் கட்டளையே, வேற தேவன் வேண்டாம் என்பதாகும். யாத்திராகமம்:20.3-5 வசனங்களை கவனித்து படித்தால், சொரூபத்தையாகிலும் விக்கிரகத்தையாகிலும் உனக்கு உண்டாக்கவும், நமஸ்கரிக்கவும் வேண்டாம் என்று காண்கிறோம்.

இந்த வசனத்தை வாசிக்கும் போது, சிலைகளை வணங்க கூடாது என்று நினைக்கிறோம். ஆனால் சொரூபம் என்பதற்கு நிகரான உருவம் என்று பொருள். எனவே ஒருவருடைய உருவத்தை ஒத்ததாக நினைத்து வரையப்படும் படத்தை கூட நாம் நமஸ்கரிக்க கூடாது. அது தேவனுக்கு விரோதமான பாவம். அதை அவர் அருவருக்கவும் செய்கிறார்.

அதை கூறினால், இயேசு கிறிஸ்துவின் உருவத்தை தானே வணங்குகிறோம். இதில் தவறு இருக்கிறதா? என்ற கேள்வி எழலாம். புதிய ஏற்பாட்டை முழுமையாக படித்தால், இயேசு பரமேறி சென்ற பிறகு எந்த இடத்திலும் அவரது உருவை வைத்து வணங்கியதாக குறிப்பிடவில்லை. மேலும் இந்த உலகில் இயேசு இருந்த போதும், தன்னை படம் வரைந்து கொள்ள அவர் அனுமதிக்கவில்லை.

மரணத்தில் இருந்து உயிர்த்தெழும் வல்லமை கொண்ட இயேசுவிற்கு ஒரு சுய உருவத்தை உருவாக்க முடியாதா என்ன? மனிதனை சொந்த உருவில் உருவாக்கிய தேவனால் அது செய்வது கஷ்டமா என்ன? அதை அவர் செய்யாமல் விட்டதில் இருந்தே, அதை அவர் விரும்பவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.

இப்படியிருக்க, இயேசுவின் உருவத்தை வணங்குவதால் நமக்கு ஏதாவது கெடுதல் வருமா? என்ற சந்தேகம் வருகிறது. உயிருடன் இருக்கும் ஒருவர், நம் பக்கத்தில் இருக்க, அவரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, அவரது உருவம் என்ற பெயரில் இருக்கும் படத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதும் வணங்குவதும் தவறு தானே. அது அவரை அவமானப்படுத்துவதற்கு சமம்.

சிந்தித்தது:

இந்த காலத்தில் இயேசுவின் உருவம் என்ற பெயரில், பலரும் வணங்கும் படத்தில் இருக்கும் நபர், யாராவது ஒரு மனிதரை முன்னிறுத்தி வரையப்பட்ட ஒரு கற்பனை ஓவியம். இதனால் மனிதனை மறைமுகமாக வணங்கவும் நேரிடுகிறது. அது நமக்கு மட்டுமின்றி, நம் பிள்ளைகளுக்கும் ஒரு தவறான கண்ணோட்டத்தை அளிக்கும்.

இயேசுவை விசுவாச கண்களில் காணும் அனுபவத்தை இழந்து, உருவத்தில் காணும் பழக்கத்தை வளர்த்து கொள்வார்கள். எதிர்காலத்தில் அதுவே உருவ வழிபாட்டிற்கு அவர்களை வழிநடத்தும். இயேசு கூறுவது போல காணாமல் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் (யோவான்:20.29). இனியும் நம் வீடுகளில் இயேசு என்ற பெயரில் உள்ள படங்களை வைத்திருக்க வேண்டுமா?

- கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்