கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சகோதரன் கூறுகிறார்...

இயேசுவைப் யார் என்றே அறியாத ஒரு குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தேன். படிக்காத எனது பெற்றோர், எங்களையும் படிக்க வைக்க அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. இதனால் சிறு வயதிலேயே பள்ளிப் படிப்பை விட்டு விட்டேன்.

நான் வளர்ந்து வரவர மந்திரவாதத்தில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. சிறுசிறு மந்திரங்களைக் கற்றுக் கொண்டு செய்ய ஆரம்பித்தேன். அதில் அதிக வருமானம் கிடைக்க ஆரம்பித்ததால், முழுநேர மந்திரவாதியாக மாறினேன். நாட்கள் செல்லச் செல்ல, ஊரில் உள்ளோருக்கு என் மீது பயம் ஏற்பட ஆரம்பித்தது.

பல்வேறு காரியங்களுக்காக மந்திரம் செய்வது, தாயத்து கொடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தேன். எனக்கு எதிர்த்து நிற்பவர்களை எல்லாம், என்னிடம் இருந்த குட்டிப் பிசாசுகளை ஏவி விட்டு கட்டி விடுவேன் அல்லது தண்டிப்பேன். மந்திரவாதத்தை எந்த அளவிற்கு விரும்பினேனோ, அந்த அளவிற்கு மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களை வெறுத்தேன். இதனால் எனது வீட்டிற்கு வரவே மக்கள் பயப்படுவார்கள்.

இந்நிலையில் எங்கள் ஊருக்கு சுவிசேஷம் கூறும்படி, இரு சகோதரர்கள் வந்திருந்தார்கள். அவர்களின் பேச்சை ஊர்மக்கள் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதைக் கண்டு என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எப்படியாவது அந்தக் கிறிஸ்தவ சகோதரர்களிடம் இருந்து ஊர் மக்கள் பிரிந்து செல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

மற்றொரு சாட்சி: தேவனுக்காக கிரியை செய்பவர்களை அவர் கைவிடுவதில்லை!

இதை வெளிப்படையாக செய்தால், ஏதாவது பிரச்சனை வரலாம் என்பதால், அவர்களைத் தந்திரமாக எனது மந்திரவாதத்தில் கட்டிப் போட முடிவு செய்தேன். அவர்களின் பேச்சை ஆர்வமாக கேட்பது போல நடித்தேன். அதை அப்படியே நம்பிவிட்டார்கள்.

சிறிது நேரத்திற்கு பிறகு, நீண்டநேரமாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள். எங்கள் வீட்டிற்கு வந்து, கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு செல்லுங்கள் என்றேன். அவர்கள் அதையும் நம்பிவிட்டார்கள். எனது வீட்டில் அநேக அந்நிய தெய்வங்களின் படங்கள் இருந்தன. அதைக் கண்ட அவர்கள், பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தேன். இதோ இப்போது வருகிறேன் என்று கூறிவிட்டு, அடுத்த அறையில் தயாராக வைத்திருந்த எனது பூஜையைத் துவங்கினேன். எனக்கு தெரிந்த மந்திர சக்திகளை வரவழைத்து, அவர்களுக்கு எதிராக ஏவிவிட்டேன்.

மற்றொரு சாட்சி: இராபோஜன அப்பம் மூலம் இரட்சிக்கப்பட்ட கிறிஸ்து எதிர்ப்பாளர்

சிறுசிறு அசுத்த ஆவிகளை அழைத்து, அந்த இரு சகோதரர்களின் வாய்களைக் கட்டிப் போடும்படி உத்தரவிட்டேன். ஆனால் அவை என் அறையில் இருந்து வெளியே செல்லவே பயப்பட்டன. அதுவரை அவை பயப்பட்டதை நான் கண்டதே இல்லை.

எனவே சக்தி வாய்ந்த பிசாசுகளை அழைத்து, அவர்களுக்கு எதிராக அனுப்பினேன். அதுவும் திரும்பி வந்தன. என்னுடைய பல முயற்சிகளும், தொடர்ந்து தோல்வி அடைவதைக் கண்டு, என்னிடம் இருப்பதிலேயே சக்தி வாய்ந்த பிசாசை அழைத்து, அவர்களுக்கு விரோதமாக அனுப்பினேன்.

அந்தப் பிசாசை ஏவினால், நாம் கூறும் பணிகளை எந்த தடயமும் இல்லாமல் செய்யும் திறன் கொண்டது. எனது கட்டளையை ஏற்று அறையில் இருந்து புறப்பட்ட அந்தப் பிசாசு, அவர்கள் இருக்கும் அறைக்கு சென்றது. ஆனால் அவர்களை எதுவும் செய்யாமல் திரும்பி வந்துவிட்டது.

எனக்கு ஏற்பட்ட தொடர்ச்சியான தோல்விகளைக் கண்டு தோய்ந்து போன நிலையில், அதற்கான காரணத்தை அறிய விரும்பினேன். தோல்வியோடு என்னிடம் திரும்பிய அந்தப் பிசாசிடம், காரணத்தைக் கேட்டேன். அதற்கு அந்தப் பிசாசு, நீங்கள் தாக்கும்படி கூறும் நபர்களைச் சுற்றிலும் பயங்கரமான அக்னி வளையம் காணப்படுகிறது. அதைக் கடந்து நான் உள்ளே சென்று அவர்களைத் தாக்க முடியாது என்றது.

மற்றொரு சாட்சி: கிறிஸ்துவ நண்பரின் பொறுமையினால் இரட்சிக்கப்பட்டேன்

இவ்வளவு சக்திவாய்ந்த உனக்கு, அந்த தீயை அணைக்க தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பது தெரியாதா? என்று கேட்டேன். அதற்கு அந்தப் பிசாசு, இது சாதாரண தீயல்ல, ஜீவனுள்ள தேவனுடைய தீ. அதை என்னால் அணைக்க முடியாது. சகலத்தையும் கீழ்படுத்தும் வல்லமையுள்ள சக்தி அது, என்றது.

அதுவரை உலகத்திலேயே மந்திரவாதம் தான் சக்தி வாய்ந்தது என்று நினைத்த எனக்கு, அந்த ஜீவனுள்ள தேவனுடைய சக்தியைப் பெற்றுக் கொள்ளும் ஆர்வம் உண்டானது. எனது தோல்வியை ஒப்புக்கொண்டு, அந்த கிறிஸ்தவ சகோதரர்களிடம் மன்னிப்புக் கேட்டேன்.

அதற்காக எனக்கு எந்தத் தண்டனையும் தர முன்வராத அவர்கள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பைக் குறித்தும், அவர் மனிதக் குலத்திற்கு அளித்துள்ள இரட்சிப்பைக் குறித்தும் எடுத்துக் கூறினார்கள். அதுவரை கிறிஸ்தவர்களை கேவலமாக நினைத்த எனக்கு, அப்போது தான் அவர்களுக்குள் இருக்கும் இயேசுவின் வல்லமை குறித்து தெரியவந்தது.

அந்த வல்லமையான தேவனைக் குறித்து அதிகம் தெரிந்து கொள்ள தேவாலயத்திற்கு செல்ல ஆரம்பித்தேன். பரிசுத்த வேதாகமத்தைப் படித்து, பரிசுத்த வாழ்க்கையைக் குறித்து அறிந்து கொண்டேன். எனக்காக தனது ஜீவனையே தந்த தேவனுக்கு ஊழியம் செய்ய விரும்பினேன். இன்று எனது கிராம மக்களுக்கு இடையே, என்னை இரட்சித்த தேவனுக்காக ஊழியம் செய்து வருகிறேன்.

ஒரு காலத்தில் என்னைப் பார்த்து பயந்து நடுங்கிய ஊர் மக்கள், இன்று தேவ அன்பால் நிறைந்து பேசும் போது, மரியாதை அளிக்கிறார்கள். பாவியும், துரோகியுமாக இருந்த என்னை தோற்கடித்து, தேவனுடைய வல்லமையை விளங்க செய்த இயேசுவிற்கு கோடா கோடி ஸ்தோத்திரம் செலுத்துகிறேன்.

இதைப் படித்து கொண்டிருக்கும் அன்பான சகோதரனே, சகோதரியே, நீங்கள் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டால், உலகத்தை ஜெயமெடுத்த இயேசுவின் பிள்ளையாக மாறி விடுகிறீர்கள். அதன்பிறகு அவருடைய வசனத்திற்கு கீழ்படிந்து வாழ்ந்தால், எந்தொரு அசுத்த வல்லமையும் உங்களை ஜெயிக்க முடியாது.

உங்களுக்கு எதிராக யாராவது மந்திரவாதம் செய்தால் கூட, பலிக்காது. ஏனெனில் கர்த்தருடைய அக்னி மதில்களுக்குள் நீங்கள் இருப்பீர்கள். எனவே பில்லிசூனியம், ஏவல், செய்வினை, மந்திரவாதம் ஆகியவற்றைக் கண்டு பயப்படாதீர்கள். கர்த்தருக்கு பயப்படுங்கள், பிசாசு உங்களை விட்டு ஓடிப் போவான். அல்லேலுயா!

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்