கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சகோதரன் கூறுகிறார்...

ஒரு பாரம்பரிய கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்த நான், சிறு வயது முதலே இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பெற்றோர் மூலம் தேவ பயத்தில் வளர்க்கப்பட்டு, எல்லா ஆசீர்வாதங்களுக்கும் பத்திரவானாக மாற தேவன் உதவி செய்தார்.

ஏற்ற நேரத்தில் என் வாழ்க்கையில் நல்ல துணையைத் தேவன் தந்தார். எங்கள் சந்தோஷமான வாழ்க்கையை மேலும் மகிழ்ச்சிகரமாக மாற்றும் வகையில், இரு பெண் பிள்ளைகளையும் தேவன் கட்டளையிட்டார். தேவ பக்தியில் நான் வளர்க்கப்பட்டது போல, என் பிள்ளைகளையும் வளர்க்க விரும்பினேன்.

இதற்காக வீட்டு ஜெபத்திலும், தேவாலயத்தில் நடத்தப்படும் ஜெபக் கூட்டங்களிலும் அவர்களை ஆர்வத்துடன் கலந்து கொள்ள செய்தேன். வீட்டில் வேதம் வாசிப்பது, வசனங்களை மனப்பாடம் செய்வது, தேவன் செய்த நன்மைகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்வது என்று பிள்ளைகளைத் தேவனிடத்திற்கு திருப்பினேன்.

ஆனால் இதையெல்லாம் தாண்டி, அவர்களுக்குள் தேவன் மீதான விசுவாசத்தை வளர்த்து, அதை நடைமுறை வாழ்க்கையில் கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் என்று கண்டேன். இதற்காக அவர்களுக்கு தேவையான காரியங்களை ஜெபத்தில் தேவனிடம் கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினேன். அவர்களுக்கு எல்லாவற்றையும் நேரடியாக வாங்கி கொடுப்பதைத் தவிர்த்து, ஜெபித்த பிறகு அடுத்த நாள் வாங்கி கொடுத்தேன்.

இதனால் அவர்களுக்குள் விசுவாசம் வளர்ந்து வருவதைக் காண முடிந்தது. இதை நான் உறுதியாக கூறும் வகையில், சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தை உங்களுக்கு சாட்சியாக அறிவிக்க விரும்புகிறேன்.

ஒரு ஹோட்டலில் சமையல்காரனாக பணியாற்றும் நான், வாடகை வீட்டில் குடும்பத்தோடு வசித்து வருகிறேன். இரு பிள்ளைகளும் வளர்ந்து வரும் நிலையில், நாங்கள் தங்கியிருந்த வீடு சற்று நெருக்கடியாக தெரிந்தது. எனவே புதிய வாடகை வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற விருப்பம் உண்டானது. ஆனால் நாங்கள் செலவு மிகுந்த பகுதியில் வசித்து வந்தால், புதிதாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பது என்பது சிரமமாக இருந்தது. 

இதனால் பிள்ளைகளின் ஆசையை நிறைவு செய்வது கடினம் என்று தெரிந்தாலும், விசுவாசத்தோடு நீங்கள் ஜெபித்தால், நாம் புதிய வீட்டிற்கு செல்ல, தேவன் அனுகிரகம் செய்வார் என்றேன். அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த இருவரும், தினமும் ஜெபிக்க ஆரம்பித்தார்கள். குடும்ப ஜெபத்திலும், தேவாலயத்திலும் ஜெபித்தார்கள் என்பதைவிட, இருவரும் தனியே ஜெபிக்க ஆரம்பித்தார்கள்.

எங்கள் குடும்பத்தின் வருமானத்திற்கு 7 ஆயிரம் ரூபாயில் வாடகை வீடு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று பிள்ளைகளிடம் கூறி இருந்தேன். ஆனால் அவ்வளவு குறைவான வாடகைக்கு, எங்கள் பகுதியில் வீடு கிடைப்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. ஆனால் இருவரும் அதற்காக ஜெபித்தார்கள். சில நாட்கள் கடந்தன. ஆனால் பிள்ளைகளின் ஜெபமும் விசுவாசமும் குறையவே இல்லை.

இந்நிலையில் ஒரு நாள் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில், ஒரு வீட்டின் முன் “வீடு வாடகைக்கு” என்று விளம்பர பலகை வைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். வீட்டைப் பார்த்த போது, எப்படியும் 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை வாடகைக் கேட்கலாம் என்று தோன்றியது. ஆனாலும் விளம்பரத்தில் இருந்த நம்பருக்கு கூப்பிட்டேன். நேரில் வந்து பேசுமாறு கூறினார்கள்.

வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகளிடம் கூறிவிட்டு, நேரில் சென்றேன். பேச்சு வார்த்தைக்கு பிறகு, கீழ்தளம் மற்றும் மேல்தளத்தில் உள்ள ஒரு அறையும் துணிகளைக் காயப் போட மாடியில் இடமும் என்று எல்லாம் சேர்த்து, 7 ஆயிரம் ரூபாய் வாடகை என்று வீட்டு உரிமையாளர் கூறினார். எனக்கு அதற்கு மேல் பேச்சே வரவில்லை.

நாங்கள் தங்கியிருந்த வீட்டை விட இரு மடங்கு வசதியான அந்த வீட்டிற்கு இவ்வளவு குறைவான வாடகை என்று கூறியதை என்னால் நம்பவே முடியவில்லை. இதனால் உடனே வீட்டிற்கு உறுதியான முன்பணத்தை அளித்துவிட்டு, பழைய வீட்டிற்கு வந்தேன். வீட்டில் பிள்ளைகளிடம் முதலில் கூறினேன். இருவரும் அப்படியே முழங்காலிட்டு தேவனுக்கு நன்றி கூறினார்கள். அதை கண்ட பெற்றோராகிய எங்களுக்கு, கண்ணீரே வந்துவிட்டது.

சிறு பிள்ளைகளை நடத்த வேண்டிய முறையில் நடத்தினால், முதிர்வயதில் வழிவிலகி போகமாட்டார்கள் என்ற வேதம் வசனம் தான் எனக்கு நினைவிற்கு வந்தது. இதைவிட ஒரு பெரிய பாக்கியம், பெற்றோராகிய எங்களுக்கு என்ன இருக்கப் போகிறது? எல்லா காரியங்களுக்கும் தேவனை மட்டுமே சார்ந்து வாழும் பழக்கத்தைச் சிறு வயதிலேயே என் பிள்ளைகள் கற்றுக் கொண்டதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தேன்.

பல கிறிஸ்தவ வீடுகளிலும், பயபக்தியான பெற்றோருக்கு கீழ்படியாத, அடங்காத பிள்ளைகளை வைத்து கொண்டு கஷ்டப்படும் போது, எங்களை தேவன் மேன்மையாக வழிநடத்துவதை எண்ணி நன்றியுள்ள இருதயத்தோடு துதிக்கிறேன். எங்கள் விருப்பத்தை மனதில் வைப்பதோடு நில்லாமல், அதைச் செயலில் காட்டிய போது, நாங்கள் விரும்பியதைத் தேவன் எங்களுக்கு கட்டளையிட்டார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்