கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரி கூறுகிறார்...

இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோருக்கு இரண்டாவது மகளாக நான் பிறந்தேன். இதனால் சிறு வயதில் இருந்தே தேவ சமூகத்தை அனுபவித்து வளர்ந்தேன். ஞாயிறு பள்ளி மட்டுமின்றி, தேவாலயத்தில் நடக்கும் பல ஊழியங்களிலும் கலந்து கொள்ள தேவன் உதவி செய்தார்.

எங்கள் பெற்றோருக்கு, தேவனோடு ஒரு நெருங்கிய ஐக்கியம் இருந்ததால், அதே பாதையில் எங்களையும் வளர்த்தார்கள். பள்ளிப் பருவத்திலேயே பரிசுத்தாவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்டேன். இதனால் நான் நடக்க வேண்டிய வழிகளை, தேவன் போதித்து தந்தார். நான் கூப்பிடும் போதெல்லாம், தேவன் பதிலளித்தார்.

என் எதிர்காலத்தைக் குறித்த பல கேள்விகளுக்கும், தேவன் தெளிவான பதிலை தந்தார். இதனால் என் பெற்றோரை விட, தேவனை அதிகமாக நேசிக்க ஆரம்பித்தேன். தேவ சமூகம் எப்போதும் என்னோடு உள்ளதை, அவ்வப்போது உணர்ந்தேன்.

பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரி படிப்பிற்காக வெளியூர் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏற்கனவே எனது மூத்த சகோதரி வெளியூரில் படித்திருந்ததால், நான் படிப்பதற்கு பெற்றோர் தரப்பில் எந்த தடையும் வரவில்லை. அதே நேரத்தில் நான் தேவ சமூகத்தில் விசாரித்த போது, அவரும் அனுமதி அளித்தார்.

கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் ஆயுர்வேத மருத்துவம் தொடர்பான படிப்பில் சேர்ந்தேன். நான் படிக்கும் கல்லூரிக்கு மிக அருகிலேயே, எங்களுக்கு நன்கு பழக்கமுள்ள விசுவாசிகள் வசித்து வந்தனர். இதனால் கல்லூரி விடுதியில் தங்கி படிப்பதைத் தவிர்த்து, அவர்கள் வீட்டில் நான் தங்கினேன்.

கல்லூரி நாட்கள் தொடங்கியதும், முதலாம் ஆண்டு புதிதாக கல்லூரிக்கு வரும் மாணவ, மாணவியருக்கான ரேகிங் எனப்படும் மிரட்டி பணிய வைக்கும் கலாச்சாரம் துவங்கியது. தினமும் காலையில் கல்லூரிக்கு செல்லும் முன், நன்றாக ஜெபித்துவிட்டு சென்றேன். என்னை ரேகிங் செய்ய சீனியர் மாணவர்கள் பல நாட்களாக முயற்சி செய்தார்கள். ஆனால் தேவன் என்னை பாதுகாத்தார்.

ஒருநாள் என்னோடு படிக்கும் மாணவ, மாணவியரோடு சேர்ந்து நடந்து வரும் வழியில், சீனியர்கள் வந்துவிட்டார்கள். என்னை நன்றாக விசாரித்த போது, நான் ஒரு கிறிஸ்தவப் பெண் என்பதை தெரிவித்தேன். நகைகள் அணியாமல் கல்லூரிக்கு வரக்கூடாது என்று கூறினார்கள். அதற்கு நான், முடியாது என்று கூறிவிட்டேன்.

அதில் கோபமடைந்த எனது சீனியர் மாணவிகள், நீ கிறிஸ்தவ பெண் என்றால், நான் இப்போது மனதில் என்ன நினைக்கிறேன் என்று சொல் பார்க்கலாம் என்றனர். அப்போது என்னோடு இருந்த மற்ற மாணவிகள் பயத்தோடு சீனியர்களிடம், இவள் ஜெபித்தால் எல்லாவற்றையும் கூறிவிடுவாள் என்றனர்.

உடனே சீனியர்கள் என்னிடம், அப்படியென்றால் உனக்கு ஜெபிக்க நேரம் தருகிறேன். நான் மனதில் நினைப்பதைச் சொல் பார்ப்போம் என்று கூறிவிட்டு கிண்டல் செய்து சிரித்தார்கள். நெருக்கத்தில் என்னை நோக்கி கூப்பிட்டு, நான் உனக்கு உத்தரவு அருளுவேன் என்ற வசனம், என் நினைவில் வந்தது.

என் மனதில், ஆண்டவரே! உமது நாமம் என்னால் மகிமைப்பட வேண்டுமே அல்லாமல், எந்த வகையிலும் தூஷிக்கப்படக் கூடாது என்று ஜெபித்தேன். உடனே பரிசுத்தாவியின் வல்லமை எனக்குள் வந்ததை உணர்ந்தேன். இருதயங்களை வெளிப்படுத்தும் தீர்க்கத்தரிசன வல்லமைக்கு என்னையே ஒப்புக் கொடுத்தேன்.

அப்போது என்னிடம் சாவல்விட்ட சகோதரியின் மனதில் இருப்பதை அப்படியே தேவன் வெளிப்படுத்தினார். உடனே நான், உங்களோடு படிக்கும் ஒரு மாணவரை நீங்கள் காதலிக்கிறீர்கள். அவன் இப்போது என்ன செய்துக் கொண்டிருப்பான் என்ற சிந்தனையில் இருக்கிறீர்கள் என்றேன். இதைக் கேட்ட அவர் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல் நின்றார்.

உடனே தேவன் மீண்டும் என்னோடு பேசினார். நீங்கள் இப்போது, என் மனதில் இத்தனை நாட்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்தக் காரியம், இவளுக்கு எப்படி தெரிந்தது, என்று யோசிக்கிறீர்கள் என்றேன். உடனே என் கைகளைப் பிடித்தவாறு மன்னிப்புக் கேட்டார். நீ யார் என்பதை அறியாமல், நான் விளையாடி விட்டேன். என்னை மன்னித்துவிடு. மேற்கொண்டு ரேகிங் செய்யும் பகுதிக்கு நீ வரவே வேண்டாம் என்று கூறிவிட்டார்.

அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நான் கல்லூரியில் படிப்பை முடிக்கும் வரை, மற்றவர்களுக்கு என் மீது ஒரு பயம் இருந்தது. உடன் படித்தவர்கள் முதல் கல்லூரி நிர்வாகம் வரை, எனக்கு உதவிகரமாக மட்டுமே இருந்ததே தவிர, யாராலும் எனக்கு எந்தப் பிரச்சனையும் உண்டாகவில்லை.

இதிலிருந்து தம்மை நோக்கி கூப்பிடும் பிள்ளைகளுக்கு தேவன் பதிலளிக்கிறவராகவே இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன். தேவனோடு ஒரு தனிப்பட்ட உறவு நமக்கு இருந்தால் மட்டுமே, அவரது சமூகத்தை நம்மால் எப்போதும் உணர முடியும். மேலும் கஷ்ட நேரத்தில் அவரது கரம் நமக்காக கிரியைச் செய்வதைக் காணலாம். என் வாழ்க்கையில் தேவன் செய்த எல்லா நன்மைகளுக்காக, அவருக்கு கோடாகோடி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறேன்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்