கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒரு சகோதரன் கூறுகிறார்...

பாரம்பரியமான மார்க்கத்தில் இருந்து என்னை இரட்சித்த தேவன், என் வாழ்க்கையில் எண்ணிலடங்க நன்மைகளைச் செய்துள்ளார். அவர் செய்த அற்புதங்களையும் அதிசயங்களையும், கூற வேண்டுமானால் காலமும் நேரமும் போதாது.

இந்நிலையில் எப்போதும் என்னை பாதுகாக்க தேவனுடைய கரம் என்னோடு இருக்கிறது என்பதை நிரூபித்த ஒரு மறக்க முடியாத சம்பவத்தை மட்டும் இங்கு சாட்சியாக கூற ஆசைப்படுகிறேன்.

தேவ கிருபையினால் திருச்சியைச் சேர்ந்த தேவ பக்தியுள்ள ஒரு பெண்ணை வாழ்க்கைத் துணையாகப் பெற்றேன். இந்நிலையில் வெளியூரில் பணியாற்றி வரும் நான், சமீபத்தில் என் மனைவியின் ஊருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதற்காக திருச்சி பஸ் நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து மனைவியின் ஊருக்கு செல்லும் ஒரு பஸ்சில் ஏறி அமர்ந்தேன்.

அதிகாலை நேரம் என்பதால், பஸ்சில் அதிகளவிலான வியாபாரிகளின் கூட்டம் இருந்தது. மேலும் ரயில் நிலையத்தில் இருந்தும் அதிக பயணிகள் வந்திருந்தார்கள். இதனால் பஸ்சின் கடைசி இருக்கையில் தான் எனக்கு இடம் கிடைத்தது.

பஸ் இன்னும் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படாத நிலையில், ஒரு மீன் வியாபாரி தனது மீன் கூடையுடன் பஸ்சில் ஏறினார். நான் அமர்ந்திருந்த இருக்கையின் முன் தனது கூடையை வைத்துவிட்டு நின்றார். அந்த மீன் வாடையை நான் நுகர்ந்த ஓரிரு நிமிடங்களில், குமட்டல் வருவது போன்ற அனுபவம் உண்டானது. பல முறை பஸ்சில் பயணித்துள்ள எனக்கு இதற்கு முன் அது போன்ற ஒரு அனுபவம் ஏற்பட்டதே இல்லை.

இதனால் தயங்கிய நிலையில், பஸ்சில் அமர்ந்திருந்தேன். சிறிது நேரத்தில் பஸ் ஸ்டார்ட் ஆனது. அப்போது என் உள்மனதில் இந்தப் பஸ்சில் இருந்து இறங்கிவிடு என்று யாரோ மீண்டும் மீண்டும் ஒலித்தது. முதலில் அதைப் பொருட்படுத்தாத நான், திரும்ப திரும்ப கேட்கவே, மனதில் ஒரு குழப்பமான நிலையோடு மெதுவாக நகர ஆரம்பித்த பஸ்சில் இருந்து இறங்கிவிட்டேன்.

அதற்கு பின்னால் நின்ற வேறொரு பஸ்சில் ஏறிக் கொண்டேன். சில நிமிடங்களில் பஸ் புறப்பட்டது. நான் செல்ல வேண்டிய ஊருக்கு அருகில் எட்டிய போது, சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. நான் சென்ற பஸ் நீண்டநேரமாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்ததால், பஸ்சில் இருந்து இறங்கி பார்த்தேன்.

அப்போது நான் முதலில் ஏறி பயணிக்க நினைத்த பஸ்சின் பின்புறத்தில், ஒரு லாரி மோதி பெரிய விபத்து ஏற்பட்டிருந்ததைக் கண்டேன். முன்னால் சென்று அந்தப் பஸ்சை உற்று பார்த்த போது, நான் அமர்ந்திருந்த பின் இருக்கை இருந்த பகுதி முழுமையாக நொறுங்கி காணப்பட்டது.

அப்போது திடீரென மீண்டும் ஒரு சத்தம் என் மனதில் கேட்டது. இந்தப் பஸ்சில் நீ பயணித்திருந்தால்... என்று அது கூறியது. அதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த நான், கர்த்தரை நன்றியுள்ள இருதயத்தோடு துதித்தேன்.

அந்தப் பஸ்சில் நான் பயணித்திருந்தால், நிச்சயம் உயிர் பிழைப்பதே சந்தேகம் தான். அந்த அளவிற்கு பின் இருக்கை முழுவதும் பாதிப்பிற்குள்ளாகி இருந்தது. என்னை பாதுகாக்கும் தேவன், தகுந்த நேரத்தில் ஆலோசனை தந்து பஸ்சில் இருந்து இறங்குமாறு செய்தார். இதனால் பெரிய ஆபத்தில் இருந்து நான் காப்பாற்றப்பட்டேன். தேவன் எவ்வளவு உண்மையுள்ளவர் என்று எண்ணி மீண்டும் மீண்டும் கண்ணீரோடு துதித்தேன்.

இதிலிருந்து நாம் எங்கு பயணம் சென்றாலும், ஜெபித்துவிட்டு செல்லும் போது தேவனுடைய பாதுகாப்பின் கரம் நம்மோடு இருக்கும் என்பதோடு, வரும் எல்லா ஆபத்துகள், விபத்துகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் வகையில் ஆலோசனைகளை தேவன் அளிப்பார் என்று அறிந்து கொண்டேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்