கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சகோதரி கூறுகிறார்...

ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நான், என் பாவங்களுக்காக இயேசு சிலுவையில் ஜீவன் கொடுத்தார் என்பதை விசுவாசித்து அவரை என் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டேன்.

சிறுவயதில் இருந்தே தேவனால் நடத்தப்பட்ட என் வாழ்க்கையில் பல அற்புதங்களையும் அதிசயங்களையும் தேவன் செய்துள்ளார். என் பள்ளிப் படிப்பை முடித்து, மேற்படிப்பிற்காக பெங்களூருக்கு செல்ல நேர்ந்தது. நர்சிங் படிப்பில் சேர்ந்து படித்த போதும், தேவன் மட்டுமே சுகமாக்கும் உண்மையான வைத்தியர் என்பதை என் மனதில் நம்பி இருந்தேன்.

Thanks: Sister.Neeraja

பெற்றோர், உறவினர்கள் என்ற எனக்கு பழக்கமுள்ள யாரும் இல்லாத ஒரு இடத்தில் நான் படித்த போது, எல்லா தேவைகளுக்கும் தேவனை மட்டுமே சார்ந்து வாழும் ஒரு தன்மையைக் கற்று கொண்டேன். இந்நிலையில் எனது எல்லா தேவைகளையும் தேவன் அறிந்து செயல்படுகிறார் என்பதை நிரூபித்த ஒரு சம்பவத்தை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நர்சிங் படிப்பில் ஒருமுறை செய்முறை தேர்விற்காக தயாராகி கொண்டிருந்தேன். சற்று கடினமான பாடம் என்பதால், அதில் தேர்ச்சி அடைவதில் என் உள்ளத்தில் பயம் காணப்பட்டது. செய்முறை தேர்வு மதியம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், நான் காலையிலேயே கல்லூரிக்கு சென்றுவிட்டேன்.

அங்கு ஒரு இடத்தில் அமர்ந்து படித்து கொண்டிருந்தேன். அப்போது தனியாக இருந்த என்னை அணுகிய 3 பேர், தேர்வு கண்காணிப்பாளர்கள் இருந்த அறைக்குள் வருமாறு அழைத்தனர். அவர்கள் அனைவரும் வேறொரு துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள்.

கண்காணிப்பு அறையில் இருந்தவர்கள், என்னிடம் ரகசியமான குரலில் ‘உன் குரூப்பில் நீ மட்டும் தான் வந்துள்ளாயா? என்று கேட்டார்கள். ஆமாம் என்றேன். அப்போது அவர்கள், உங்கள் செய்முறை தேர்விற்காக தயார் செய்யப்பட்டிருந்த கேள்வித்தாள் தொலைந்து போய்விட்டது. இதனால் தேர்வை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இது யாருக்கும் தெரியாது. எனவே நீ தான் கேள்வித்தாளை தயார் செய்து தர வேண்டும் என்று கேட்டார்கள்.

இந்தச் செய்தியைக் கேட்டு, நான் கனவு ஏதாவது காண்கிறேனா? என்ற சந்தேகம் வந்துவிட்டது. இதுவரை என் வாழ்க்கையில் இது போன்ற ஒரு சம்பவத்தை நான் கேள்விப்பட்டதே இல்லை. அவர்கள் மீண்டும் என்னிடம், நேரம் மிக குறைவாக இருப்பதால், நீ விரைவாக செயல்பட வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

நானும் அவர்கள் கேட்கும் வகையிலான ஒரு கேள்வித்தாளை, அதுவும் எனக்கு நன்கு தெரிந்த கேள்விகளை கொண்ட ஒரு செய்முறைக்கான கேள்வித்தாளை தயார் செய்து கொடுத்தேன். இதேபோல எனது சீனியர்களிடமும் கேள்வித்தாளைக் கேட்டு பெற்று கொண்டார்கள். ஆனால் அது எனக்கு தெரியவில்லை.

தேர்வு நேரம் வந்தது. நான் தேர்வு அறைக்குள் நுழைந்த போது, எனக்குள் இருந்த பயம் மறைந்து பெரிய ஒரு ஆறுதல் உண்டாகி இருந்தது. நாங்கள் கலந்து கொள்ளும் தேர்வில், செய்முறை செய்து காட்டுவதோடு மட்டுமின்றி, அதை விளக்கவும் வேண்டும்.

எல்லாருக்கும் தேர்வுத்தாள் கொடுக்கப்பட்டது. அதை பார்த்த போது, நான் எந்தெந்த கேள்விகளை அளித்திருந்தேனோ, அது மட்டுமே இருந்தன. இந்த மகிழ்ச்சியில் ஜெபித்துவிட்டு, நான் துவங்க போகும் போது, அறையில் இருந்த செய்முறை தேர்வாளர் வந்து என்னிடம், செய்முறை விளக்குமாறு கூறினார்.

நான் இன்னும் எதையும் தேர்வு செய்யவில்லை என்றேன். அதற்கு அவர், உனக்கு எது பிடித்திருக்கிறதோ, அதை செய்து காட்டி விளக்கினால் போதும் என்றார். ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்ற நான், இருப்பதிலேயே எளிதான ஒரு செய்முறையைச் செய்து காட்டி விளக்கினேன். அதில் திருப்தியடைந்த தேர்வாளர், முழு மதிப்பெண்களை அளித்தார்.

என்னை விட நன்றாக படிக்கிற, ஞானமுள்ள, திறமையுள்ளவர்களிடம் முன்பாக, நான் வெட்கப்பட்டு போகாதபடி, தேவன் அதிசயமான காரியங்களை என் வாழ்க்கையில் செய்தார். அதற்காக தேவனுக்கு கோடாகோடி நன்றிகளையும் ஸ்தோத்திரங்களையும் செலுத்துகிறேன்.

இந்தச் சாட்சியைப் படித்து கொண்டிருக்கும் அன்பான சகோதரனே, சகோதரியே, உங்கள் வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்களை எப்படி எதிர்கொள்வது என்ற பாரத்தோடு இருக்கும் போது, தேவனை நோக்கி பாருங்கள். செங்கடல் போன்ற கடக்க முடியாத பெரிய பிரச்சனைகளிலும், நீங்கள் எதிர்பாராத ஒரு வழியை திறப்பவர் நம்மோடு இருக்கிறார்.

அவர் நோக்கி பார்க்கும் யாரும் வெட்கப்பட்டு போவதில்லை என்பதற்கு, என் வாழ்க்கையில் செய்த இந்தச் சாட்சி ஒரு தகுந்த எடுத்துக்காட்டு என்று நம்புகிறேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்