பெங்களூரைச் சேர்ந்த ஒரு சகோதரன் கூறுகிறார்...

ஒரு காலத்தில் பாவிகளாகவும் யாருக்கும் பயன்படாதவர்களாகவும் வாழ்ந்து வந்தவர்களில் ஒருவனான என்னையும், தமது மிகுந்த இரக்கத்தில் இரட்சித்து இன்றும் ஜீவ பாதையில் தேவன் வழிநடத்தி வருகிறார். நான் கிறிஸ்துவிற்குள் வந்த பிறகு, பல கஷ்டமான பாதைகளின் வழியாக கடந்து சென்றது உண்டு.

ஆனால் எல்லா கஷ்டங்களிலும் தேவன் என்னோடு இருந்து என்னை வழிநடத்தி உள்ளார். எந்தொரு சந்தர்ப்பத்திலும் அவர் என்னை கைவிட்டது இல்லை என்று தைரியமாக என்னால் சொல்ல முடியும். தேவன் என்னை நடத்திய பாதைகளில், ஒரே ஒரு சாட்சியை மட்டும் இங்கு கூற விரும்புகிறேன்.

பெங்களூரில் வீடுகள் மற்றும் பெரிய தொழிற்சாலைகளில் கிரானைட் போடும் பணியை செய்து வருகிறேன். கடந்த சில நாட்களுக்கு முன், சிலருடன் சேர்ந்து ஒரு பெரிய வீட்டில் கிரானைட் போடும் பணியில் ஈடுபட்டேன். கிரானைட் கற்களைத் தரையில் முதலில் பதித்து விடுவோம். அதன்பிறகு அதில் உள்ள சிமெண்ட் மற்றும் மற்ற மாசுகளை நீக்க, அதை ஆசிட் கொண்டு சுத்தம் செய்வது வழக்கம்.

அதேபோல பதிக்கப்பட்ட கற்களில் ஆசிட் ஊற்றி கழுவும் பணியில் நான் ஈடுபட்டேன். அப்போது தண்ணீர் கலக்காத ஆசிட்டை ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு எடுத்து செல்லும் போது, தவறுதலாக கீழே விழுந்துவிட்டது.

அதில் பாட்டிலில் இருந்த அடர்த்தியான ஆசிட் அறை முழுவதும் தெறித்தது. அப்போது எனது முகத்திலும் சற்று விழுந்தது. இதில் குறிப்பாக எனது கண்களில் சில துளிகள் விழுந்து, இரு கண்களும் திடீரென இருட்டிவிட்டது.

இந்தச் சம்பவத்தை பார்த்த அருகில் இருந்த மற்ற பணியாளர்கள் ஓடி வந்து, என்னை தூக்கி சென்று, முகத்தை நீரினால் கழுவினார்கள். ஆனால் என்னால் எதையும் பார்க்க முடியாமல், எங்கும் இருட்டாக இருந்தது. மேலும் கண்களில் அதிக எரிச்சலும் உணர்ந்தேன்.

இந்த சம்பவம் நிகழும் முன், நாங்கள் பணியாற்றி கொண்டிருந்த வீட்டின் உரிமையாளரிடம் இயேசுவைப் பற்றிய காரியங்களையும் நான் இரட்சிக்கப்பட்ட விதத்தையும் குறித்து பேசி இருந்தேன். இந்நிலையில் நடந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வீட்டு உரிமையாளர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியில், உடனிருப்பவரின் உதவியுடன் நான் செல்லும் சபையின் தேவ ஊழியருக்கு ஃபோன் செய்து, எனக்காக ஜெபிக்குமாறு கூறினேன். எனக்காக ஜெபித்த அவர், விசுவாசமாக இருங்கள். உங்களுக்கு ஒன்றும் ஆகாது என்று தைரியப்படுத்தினார்.

அவசர பிரிவில் சேர்க்கப்பட்ட எனக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டது. கண் மருத்துவ நிபுணர் ஒருவர் வந்து எனது இரண்டு கண்களையும் பரிசோதித்த பிறகு, ஏதோ தண்ணீர் போன்ற ஒரு திரவத்தை ஊற்றி என் கண்களை கழுவினார்கள். அப்போது என்னால் தெளிவில்லாத நிலையில், லேசாக பார்க்க முடிந்தது.

அதன்பிறகு எனது கண்களின் நிலையைக் குறித்து விளக்கிய அந்த டாக்டர், அதிஷ்டவசமாக உங்கள் கண்களின் கருவிழியில் ஆசிட் துளி விழவில்லை. வெள்ளை பகுதியில் மட்டுமே சற்று பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கருவிழியில் விழுந்திருந்தால் உங்கள் பார்வையே பறிபோய் இருக்கும் என்று கூறி டிஸ்சார்ஜ் செய்தார். கொஞ்ச நேரத்தில் எனது பார்வை தெளிவானது.

நான் பணியாற்றிய அந்த வீட்டிற்கு திரும்ப செல்லும் வழியில், என்னிடம் பேசிய அந்த வீட்டு உரிமையாளர், உண்மையாகவே உங்கள் கடவுள் ஆபத்து நேரத்தில் பாதுகாத்தார். இரண்டு கண்களிலும் எந்த பாதிப்பும் இல்லாமல் நீங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளீர்கள் என்றார்.

அதன்பிறகு அவருக்கு தேவனுடைய பாதுகாப்பின் கரத்தைக் குறித்த சில காரியங்களை எடுத்து கூறிவிட்டு வீடு திரும்பினேன். எனக்கு ஏற்பட்ட இந்த விபத்தில் எனது கண்கள் பார்வை இழந்திருந்தால், குடும்பத்தில் வருமானம் பாதிக்கப்பட்டு, பெரிய இழப்பை சந்தித்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

தேவ ஊழியர்களின் ஜெபத்தை கேட்ட தேவன், இரக்கமாக என்னை எல்லா பாதிப்பில் இருந்தும் பாதுகாத்தார். நமக்கு ஏற்படும் ஆபத்தில் மனிதர்களை நம்புவதை பார்க்கிலும் தேவனை நோக்கி கூப்பிடும் போது, அவரது பாதுகாக்கும் கரம் நம்மை இரட்சிக்கிறது என்பதற்கு, என்னை சாட்சியாக நிறுத்திய தேவனுக்கு ஸ்தோத்திரம்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்