கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சகோதரர் கூறுகிறார்...

பாரம்பரிய கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து வளர்ந்த என்னை, ஏற்ற நேரம் வந்த போது சந்தித்த தேவன், தமது விலையேறப்பட்ட இரட்சிப்பை அருளினார். அதிகம் படிக்காத நான், லாரி டிரைவராக பணியாற்றி வருகிறேன். இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சரக்கு லாரிகளில் சென்றுள்ள நான், பல்வேறு ஆபத்துகளை நேரடியாக பார்த்து இருக்கிறேன்.

தேவனுடைய மிகப் பெரிய கிருபையினால், பல ஆபத்துக்களில் இருந்து தப்பித்தும் உள்ளேன். என் வாழ்க்கையில் இதுவரை என்னால் விளங்கி கொள்ள முடியாத ஒரு அபாயகரமான சூழ்நிலையில் இருந்து தேவன் பாதுகாத்த ஒரு சந்தர்ப்பத்தை மட்டும் சாட்சியாக கூற விரும்புகிறேன்.

கோவையில் இருந்து வட இந்தியாவின் பல பகுதிகளுக்கு சரக்குகளை எடுத்து சென்று பழக்கமுள்ள நான், ஒரு முறை நீண்டதூரம் லாரியை ஓட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏறக்குறைய 3 நாட்கள் தொடர்ந்து ஓட்டினால் மட்டுமே அந்த சரக்கை குறிப்பிட்ட பகுதிக்கு கொண்டு செல்ல முடியும் என்பதால், சாப்பாட்டிற்கான நேரத்தை தவிர வேறெங்கும் நிறுத்தாமல் சரக்கு லாரியை தொடர்ந்து ஓட்டினேன்.

என்னோடு இருந்த கிளீனர் அவ்வப்போது லாரியை ஓட்டினாலும், அதிக அனுபவம் இல்லாததால் மிகக் குறைந்த நேரத்திற்கு மட்டுமே அவனுக்கு ஓட்ட கொடுத்தேன். மேலும் அவனிடம் நம்பி லாரியைக் கொடுத்து விட்டு தூங்க முடியாது.

லாரியை ஓட்டும் போது, அவ்வப்போது தேவனை நினைப்பதை தவிர, எப்போது ஜெபித்து விட்டு வண்டி ஓட்டும் பழக்கம் எதுவும் எனக்கு இருந்தது இல்லை. ஆனால் எனது மனைவியும் பிள்ளைகளும் வீட்டில் இருந்தபடி எனக்காக தொடர்ந்து ஜெபிப்பார்கள்.

இந்நிலையில் 3வது நாளாக லாரியைத் தொடர்ந்து ஓட்டி கொண்டிருந்த நாங்கள், ஒரு அடர்ந்த காட்டு பகுதியைக் கடந்து கொண்டிருந்தோம். ஒரு இடத்தில் லாரியை நிறுத்திய நாங்கள், அடர்ந்த காட்டு பகுதி என்பதோடு அதிக வாகனங்களும் சாலையில் இருக்கவில்லை. இதனால் சரக்கு லாரியை ஆள்நடமாட்டம் குறைந்த இடத்தில் அதிக நேரம் நிறுத்துவது பாதுகாப்பானது அல்ல என்று நினைத்து விரைவில் அங்கிருந்து கிளம்பினோம். சற்று நேரத்தில் உடனிருந்த கிளீனரும் படுத்து உறங்கிவிட்டான்.

இரவில் அடர்ந்த காட்டில் தனியாக லாரியை ஓட்டி கொண்டிருந்த எனக்கு, சற்று நேரத்தில் தூக்கம் வர ஆரம்பித்தது. ஆனால் எங்கு நிறுத்தினாலும் நேரம் வீணாகிவிடும் என்பதால், அடுத்த நகர பகுதியை எட்டிய பிறகு நிறுத்தலாம் என்ற எண்ணத்தில் தொடர்ந்து லாரியை ஓட்டி கொண்டிருந்தேன்.

ஆனால் என்னையும் அறியாமல் ஒரு கட்டத்தில் அசந்து தூங்கிவிட்டேன். நான் தூங்குவதற்கு முன் கடைசியாக பார்த்த போது, குறிப்பிட்ட பகுதியை அடைய இன்னும் இவ்வளவு கிலோமீட்டர்கள் என்று சாலையேற மைல்கல்லில் எழுதி இருந்ததை பார்த்து இருந்தேன். இந்நிலையில் நான் தூங்கினாலும், லாரி தொடர்ந்து ஓடி கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் கண்களைத் திறந்து பார்த்த போது, லாரி ஒரு இடத்தில் நின்றிருந்தது. லாரியின் என்ஜின் இயங்கி கொண்டிருந்தாலும், நகராமல் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த நான், கதவை திறந்து வெளியே இறங்கி பார்த்தேன்.

அப்போது நான் ஓட்டி வந்த லாரி, சாலையின் நடுவே உள்ள டிவைடரை நடுவில் விட்டு, வலது பக்கத்தில் இரு சக்கரங்களும், இடது பக்கத்தில் இரு சக்கரங்களும் இருந்தன. இதில் அதிர்ச்சி அடைந்த நான் சாலை ஓரத்தில் இருந்த மைல்கல்லை பார்த்த போது, நான் 5 கி.மீட்டர்கள் லாரியை ஓட்டி இருப்பது தெரியவந்தது.

மேற்கண்ட 5 கி.மீட்டர்களும் நான் அசந்து தூங்கி இருக்கிறேன். ஆனால் தொடர்ந்து லாரி ஓடி இருக்கிறது. அப்போது எந்த சத்தமும் இல்லாமல் டிவைடரை கடந்து சென்றுள்ள வலது சக்கரங்கள், அப்படியே நேராக ஓடியுள்ளன. அப்போது சாலையில் எதிரே வந்த எந்த வாகனமும் நான் ஓட்டிய லாரியின் மீது மோதவில்லை.

சாலையின் நடுவே இருந்த டிவைடரிலும் எந்த தடுப்புகளும் இருக்கவில்லை. லாரி அங்குமிங்குமாக தள்ளாடி, சரக்கு உடன் சேர்ந்து கவிழ்ந்து போகவில்லை. சற்று முன் சென்று பார்த்த போது, மேலும் ஒரு அதிர்ச்சி எனக்கு காத்திருந்தது.

இப்படியே சில அடி தூரம் லாரி தொடர்ந்து ஓடியிருந்தால், டிவைடரில் தூரத்தை குறிப்பிட வைத்திருந்த பெரிய பாறையில் லாரி மோதி இருக்கும். இந்தப் பகுதிக்கு சில அடி தூரம் இருக்கும் நிலையில், லாரி தானாகவே நின்றிருக்கிறது. ஆனால் ஆப் ஆகவில்லை. இப்படி நேரவிருந்த அடுத்தடுத்த பல ஆபத்துக்களில் இருந்து தேவன் என்னை பாதுகாத்த விதத்தை எண்ணி வியந்தேன்.

பல ஆண்டுகளாக லாரி ஓட்டி பழக்கமுள்ள எனக்கு, இது எப்படி நடந்தது என்று இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. இதன்பிறகு பரிசுத்த வேதாகத்தை ஒரு நாள் வாசித்து கொண்டிருக்கும் போது, இஸ்ரவேலை காக்கிறவர் தூங்குவதும் இல்லை, உறங்குவதும் இல்லை என்ற வசனம் (சங்கீதம்:121.4) என் கண்களில் பட்டது.

அப்போது இந்தச் சம்பவத்தை எனக்கு நினைப்பூட்டிய தேவன், தமது பிள்ளைகளைப் பாதுகாக்கும் விதத்தை குறித்து உணர்த்தினார். தேவனுடைய பாதுகாப்பின் கரம் என்பது நமது புத்திக்கு எட்டாத ஒன்று என்று அன்று புரிந்து கொண்டேன். அதுவரை ஒரு சாதாரண கிறிஸ்தவனாக வாழ்ந்து வந்த நான், தேவனுடைய பாதுகாக்கும் கரத்தை கண்டு வியந்தேன்.

நம் வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களில், நாம் தூங்கி விடுகிறோம், உறங்கி விடுகிறோம். ஆனால் நம்மை கைவிடாத தேவன், நமக்கு வரும் எல்லா ஆபத்துக்களில் இருந்தும், நம்மை பாதுகாக்கும் வகையில் உறங்குவதும் இல்லை, தூங்குவதும் இல்லை. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்