அதைத் திறந்தபோது பிள்ளையைக் கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று, இது எபிரெயர் பிள்ளைகளில் ஒன்று என்றாள்யாத்திராகமம்:2.6

எகிப்தில் அடிமைத்தனத்தில் இருந்த இஸ்ரவேல் மக்களை விடுவிக்க ஒரு தலைவர் தேவைப்பட்டார். அதற்காக தாயின் கருவிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டவர் மோசே. ஆனால் அந்தத் திட்டத்திற்கு தடையாக, பார்வோனின் சட்டம் வருகிறது. இஸ்ரவேல் ஆண் குழந்தைகள் கொல்லப்பட்ட போது, தேவ திட்டத்தில் எந்தப் பாதிப்பும் உண்டாகவில்லை.

இஸ்ரவேலில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த மோசே பார்ப்பதற்கு அழகாக இருந்தார். ஆனால் அவரை உயிரோடு காப்பாற்றுவதில் பெற்றோர் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. 3 மாதத்திற்கு மேல் அந்தக் குழந்தையை அவர்களால் பாதுகாக்க முடியவில்லை. இதனால் எங்காவது போய் பிழைத்து கொள்ளட்டும் என்று மோசேயின் தாய், அவரை நாணல் பெட்டியில் வைத்து நதியில் விடுகிறார்.

பெற்ற தாய் என்னை மறந்தாலும், கர்த்தர் என்னை சேர்த்து கொள்வார் என்ற வேத வசனத்திற்கு ஏற்ப, இஸ்ரவேலின் மீட்பிற்கு தலைமை வகிக்க வேண்டிய மோசே என்னும் குழந்தையைத் தேவனே மீட்கும் திட்டத்தில் இறங்குகிறார்.

பொதுவாக ராஜக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வெளியிடங்களுக்கு வந்து குளிப்பதில்லை. அதிலும் குறிப்பாக, ராஜக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் அழகைச் சாதாரண ஆட்கள் பார்க்கக் கூடாது என்பதற்காக, அவர்கள் குளிப்பதற்கென்றே தனி குளம் அல்லது குளியலறைகள் இருக்கும்.

டெல்லியில் உள்ள ஆக்ரா கோட்டைக்கு ஒரு முறை சென்ற போது, அங்கு இருந்த குறிப்புகளில் இதைக் காண முடிந்தது. மேலும் சில வரலாற்று ஆசிரியர்களின் குறிப்புகளும் இதை ஊர்ஜிதப்படுத்தின. இந்நிலையில் பெற்ற தாயாரால் வளர்க்க முடியாமல் நதியில் விடப்பட்ட மோசேயை மீட்கும்படி, எகிப்தின் இளவரசிக்கு நதியில் குளிக்க வேண்டும் என்று ஆசையைத் தேவன் மனதில் ஏற்படுத்துகிறார்.

நதியில் குளிக்க தோழிகளுடன் வந்த இளவரசியின் கைகளுக்கு கிடைக்கிறார் மோசே. இதனால் யாரால் கொலைச் செய்யப்படலாம் என்று பெற்றோர் அஞ்சினார்களோ, அவரது வீட்டிலேயே மோசே வளரும் வாய்ப்பு உருவானது. எந்தத் தாயாரால் முடியாது என்று கைவிடப்பட்டதோ, அதே தாயாரால் அவர் வளர்க்கப்பட்டார்.

இதே நிலை நம் வாழ்க்கையிலும் ஏற்படலாம். நாம் நம்பி இருக்கும் சில மனிதர்களால், ஒரு அளவிற்கு மேல் நமக்கு உதவி செய்ய முடியாது. இதனால் வருத்தத்தோடு நம்மிடம் அவர்கள் விடைப் பெறலாம். ஆனால் யாரால் நாம் அழிக்கப்படுவோம் அல்லது யாரிடம் இருந்து நமக்கு மிரட்டல் வந்ததோ, அவரால் வீட்டாரின் மூலமே நாம் செழிக்கும்படியான ஒரு சந்தர்ப்பத்தைத் தேவன் ஏற்படுத்துவார்.

அதற்காக நதியில் குளிக்க தேவையில்லாத அல்லது குளிக்க வாய்ப்பில்லாத இளவரசி குளிக்க வந்தது போல, எந்தத் தேவையில்லாமல் நமக்கு உதவிச் செய்யும் மக்களை நம்மிடத்திற்கு தேவன் கொண்டு வருவார். அவர்களிடம் இருந்து யாரும் எதிர்பார்க்காத ஒரு ஆசீர்வாதமான வாழ்க்கையை நாம் பெற முடியும்.

இதற்கெல்லாம் பின்னால், மோசேயைக் குறித்து தேவனுக்கு ஒரு திட்டம் இருந்தது. அதேபோல நம்மைக் குறித்தும் தேவனுக்கு இருக்கும் மேலான திட்டங்களுக்கு நேராக நம்மை நடத்துவதற்காக, நம் வாழ்க்கையில் இது போன்ற அற்புதங்களையும் அதிசயங்களையும் தேவன் செய்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே நம் வாழ்க்கையில் வரும் அசாதாரண அல்லது எதிர்பாராத கஷ்டங்களை எண்ணி கலங்க வேண்டாம். நமக்கும் நமது உடமைகளுக்கும் எதிராக எழும்பும் எதிர்ப்புகளையும் மிரட்டல்களையும் எண்ணி மனம் தளர வேண்டாம். தேவனுடைய மேலான திட்டத்திற்காக அழைக்கப்பட்ட நம்மை, இந்த உலகின் எந்த வல்லமைகளும் ஒன்றும் செய்ய முடியாது என்பதற்கு மோசேயின் மீட்பு ஒரு அற்புதமான சாட்சி.

ஜெபம்:

எங்களை அளவில்லாமல் நேசிக்கும் அன்புள்ள தெய்வமே, எங்கள் கஷ்ட நேரத்தில் எல்லாராலும் கைவிடப்பட்டதாக உணரும் போதும், நீர் எங்களை எதிர்பாராத வகையில் பாதுகாத்து இரட்சிக்கிற தேவன் என்று எங்களோடு பேசிய உமது வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். எனவே வாழ்க்கையில் வரும் எல்லா நெருக்கடியான சூழ்நிலைகளிலும் உம் முகத்தையே பார்த்து வாழ உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே ஆமென்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்