யாபேஸ் தன் சகோதரரைப் பார்க்கிலும் கனம் பெற்றவனாய் இருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி, அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள்.1 நாளாகமம்:4.9

ஒரு குழந்தைக்கு ஜனனம் அளிக்கும் ஒவ்வொரு தாயும் சந்தோஷப்படுவது இயற்கை. ஆனால் யாபேஸின் தாய் அவனை துக்கத்தோடு பெற்றெடுத்தாள் என்று தியான வசனம் கூறுகிறது. ஆனாலும் அவன் சகோதரருக்குள் கனம் பெற்றவனாக இருந்தான் என்றும் கூறுகிறது.

யாபேஸ் பிறந்த போது, அவன் தாய்க்கு இருந்த துக்கத்தை குறித்து வேதம் குறிப்பிடவில்லை. ஆனால் தனது ஆயுட்காலம் முழுவதும் அவனை துக்கத்தின் மகன் என்று எல்லாரும் அழைக்கும் வகையில், அவன் தாய் யாபேஸ் என்று பெயரிட்டுவிட்டாள்.

இதனால் அவன் வளர்ந்து வரும் போது, மனதளவில் சோர்ந்து போயிருக்கலாம். இப்படி ஒரு பரிதாபமான நிலையில் இருந்த யாபேஸ், அடுத்து வரும் வசனத்தில் இஸ்ரவேலின் தேவனிடத்தில் 4 காரியங்களை ஜெபிக்கிறார். அதை ஒவ்வொன்றாக சிந்திப்போம்.

1. என்னை ஆசீர்வதியும்: பரிதாபமான நிலையில் இருந்த யாபேஸின் வாழ்க்கையில் தேவனுடைய ஆசீர்வாதம் தேவைப்பட்டது. இதனால் தன்னை ஆசீர்வதிக்குமாறு மட்டும் ஜெபிக்கிறார். இன்று பலரும் தங்களின் காரியங்களை உண்மையாக தேவனிடம் கூறி, ஜெபிப்பது இல்லை. மாறாக, தங்களின் மனதில் இருக்கும் திட்டங்களைத் தெரிவிக்கிறார்கள். என்னை இந்த மாதிரி அல்லது இவரைப் போல ஆசீர்வதியும் என்று ஜெபிக்கிறார்கள்.

தேவனுடைய ஆசீர்வாதம் என்பது மனித நிர்ணயித்திற்குள் கொண்டுவர முடியாதது. எனவே அவரிடம் ஆசீர்வாதம் கேட்டு பெற்று கொள்வோம். நம்மை படைத்த தேவனுக்கு, நம்மை எப்படி ஆசீர்வதிக்க வேண்டும் என்று ஆலோசனை அளிக்க தேவையில்லையே!

2. எல்லையைப் பெரியதாக்கும்: குழந்தைப் பிறப்பைக் கூட, ஒரு துக்கமான சம்பவமாக ஒரு தாய் கருதுகிறாள் என்றால், யாபேஸ் இருந்த சூழ்நிலை எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என்பதை நம்மால் எளிதாக புரிந்து கொள்ள முடியும். நமது ஆவிக்குரிய மற்றும் உலகத்திற்குரிய எல்லை கூட விரிவடைய வேண்டியுள்ளது. இன்று பலரும் உலக காரியங்களில் வளர்ச்சி அடைய வேண்டும் என்று கடினமாக உழைக்கிறார்கள்.

ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கையில் இரட்சிக்கப்பட்ட காலத்தில் இருந்த அதே நிலையிலேயே தொடர்கிறார்கள். இதனால் தேவாலயத்தை விரிவுப்படுத்த தேவ சமூகத்தில் அமர்ந்து ஜெபிப்பவர்களை விட, யாரை எப்படி அணுகலாம் என்று யோசிப்பவர்களைத் தான் இன்று அதிகம் காண முடிகிறது. இந்த மனநிலை மாறி, நமது எல்லையை தேவன் விரிவுப்படுத்த ஜெபிப்போம். அப்போது அந்தப் பணியில் எந்தத் தடையும் பாதிப்பும் வராது.

3. உமது கரம் என்னோடு இருக்கட்டும்: எல்லா ஆசீர்வாதங்களுக்கும் ஊற்றாக திகழும் தேவனுடைய கரம் தன்னோடு இருக்க வேண்டும் என்று யாபேஸ் ஜெபிக்கிறார். ஏனெனில் தேவ கரம் வல்லமையுள்ளது, பராக்கிரமம் செய்யக் கூடியது, இல்லாத ஒன்றை உருவாக்கக் கூடியது என்று பல காரியங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். எனவே தேவனுடைய கரம் நம்மோடு இருந்து நம்மை வழிநடத்தினால், நமக்கு எதிராக வரும் எந்தத் தீமையும் ஆசீர்வாதமாக மாறிவிடும்.

4. தீங்கிற்கு விலக்கிக் காத்தருளும்: தனது குடும்பத்தில் ஏற்பட்ட சில தீமையான காரியங்களால், துக்கமான சூழ்நிலையில் யாபேஸ் என்ற பெயரை பெற்றதால், எதிர்காலத்தில் இதே நிலை தொடரக் கூடாது என்று அவர் ஜெபிக்கிறார்.

தங்கள் வாழ்க்கையில் பெயர், புகழ், ஆஸ்தி என்று எல்லாவற்றையும் பெற்ற நிலையில், பலரும் நிம்மதியில்லாமல் தற்கொலைச் செய்து கொள்ள முயற்சிக்கிறார்கள். அவர்களைத் தீங்கு தொடர்ந்து வந்து துக்கப்படுத்துவதால், அதிலிருந்து விடுபட தற்கொலையைத் தீர்வாக நினைக்கிறார்கள். தீங்கு என்பது நமக்கு தெரிந்தும் தெரியாமலும் வரக்கூடியது. இப்படிப்பட்ட தீமைகளில் இருந்து காப்பாற்ற தேவனால் மட்டுமே முடியும். எனவே யாபேஸைப் போல தேவனிடம் ஜெபிக்க வேண்டியுள்ளது.

மேற்கூறிய 4 காரியங்களை ஜெபித்த யாபேஸிற்கு தேவன் பதில் அளித்தார். இதனால் ஜனனம் அளித்த தாயே, அவரது பிறப்பை துக்கம் என்று அழைத்த போதும், பின்நாட்களில் தன் சகோதரரைப் பார்க்கிலும் கனம் பெற்ற மனிதனாக யாபேஸ் திகழ்ந்தான் என்று தியான வசனத்தின் முதற்பகுதி கூறுகிறது.

நம்மில் பலரும் யாபேஸை போன்ற சூழ்நிலையில் விடப்பட்டிருக்கலாம். உனக்கு தகுதியில்லை, திறமை இல்லை, பணம் இல்லை என்று பல “இல்லை”களை நம் மீது சுமத்தலாம். அதை குறிக்கும் வகையில் நமக்கு பெயரிடலாம். அவற்றை கண்டு சோர்ந்து போகாமல், யாபேஸைப் போல இஸ்ரவேலின் தேவனை நோக்கி ஜெபிக்கும் போது, நம்மை ஏளனமாக, துச்சமாக பார்த்த கண்களுக்கு முன்பாக, மேன்மையான மனிதர்களாக தேவன் நிறுத்துவார்.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற அன்புள்ள தெய்வமே, யாபேஸைப் போல நாங்களும் பல சந்தர்ப்பங்களில் தள்ளப்பட்டுள்ளோம். துக்கத்தின் மகனாக கருதப்பட்டுள்ளோம். யாருக்கும் தேவையில்லாதவர்களாக பார்க்கப்பட்டுள்ளோம். இந்தச் சூழ்நிலைகளில் உம்மை நோக்கி ஜெபிக்கும் போது, எங்களை கேவலமாக நினைத்த எல்லாருக்கும் முன்பாக மேன்மை அடைய நீர் வல்லமையுள்ளவராக இருக்கிறபடியால் ஸ்தோத்திரம். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்