என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்;...” சங்கீதம்.23.6

எல்லா கிறிஸ்தவர்களுக்கும் விருப்பமான ஒன்றாக சங்கீதம் 23 அறியப்படுகிறது. இந்த சங்கீதத்தில் உள்ள வசனங்கள் வாக்குத்தத்தமாகவும் துக்கத்தில் ஆறுதல் அளிப்பவை ஆகவும் உள்ளன. மொத்தம் 6 வசனங்களை மட்டுமே கொண்ட இந்த சங்கீதத்தின் கடைசி வசனத்தை இன்று தியானிப்போம்.

நமது வாழ்க்கையில் நன்மையும், தேவனுடைய கிருபையும் தொடரும் என்று வாயால் கூறுவது எளிது என்றாலும், அதைத் தேவனிடம் இருந்து மட்டுமே பெற முடியும். அதற்கு நமக்குள் திடமான நம்பிக்கை தேவைப்படுகிறது.

ஏனெனில் நன்மையான சகல ஈவுகளும் ஜோதிகளின் பிதாவினிடத்தில் இருந்து வருகிறது என்று வேதம் கூறுகிறது. அதேபோல நாம் நிற்பதும் நிர்மூலமாகாது இருப்பது கர்த்தருடைய கிருபையே என்று வேதம் கூறுகிறது. எனவே இவை இரண்டும் மனிதனுடைய சொந்த முயற்சியிலும் உழைப்பிலும் பெற முடியாது என்பது நிரூபணம் ஆகிறது.

எனவே நன்மையும் கிருபையும் நாம் வாழ்க்கையில் வர வேண்டுமானால், விசுவாசத்தின் வார்த்தைகள் நமக்குள் இருந்து வர வேண்டியது அவசியம். ஆனால் இன்று கிறிஸ்தவர்கள் இடையே விசுவாசம் குறைந்து கொண்டே வருகிறது. விசுவாசத்தோடு ஜெபித்து, கர்த்தருக்காக காத்திருப்பது என்பது அறவே குறைந்துவிட்டது.

மாறாக ஜெபிக்கும் போதே, அது கிடைக்குமா என்ற அவிசுவாசம் நம்மை ஆட்கொள்கிறது. விசுவாசத்தோடு ஜெபிப்பதாக கூறிவிட்டு, அது கிடைக்காவிட்டால் குறிப்பிட்ட நபரிடம் செல்லலாம் என்று முதலிலேயே முடிவு செய்து விடுகிறார்கள். எனவே அங்கு விசுவாசத்திற்கு எந்த வாய்ப்பும் இல்லாமல் போகிறது.

தேவைகளின் போது இந்த நிலை என்றால், வாழ்க்கையில் பிரச்சனைகள் போராட்டங்கள் வரும் போது, அவிசுவாசம் தெள்ளத்தெளிவாக வெளிக்காட்டப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, எனக்கு எதிராக மந்திரம், பில்லிசூனியம் வைத்துவிட்டார்கள் இன்று பல கிறிஸ்தவர்களும் சபைகளில் புலம்புகிறார்கள். நாம் உண்மையான கிறிஸ்தவராக இருந்தால், அவை எப்படி நமக்கு எதிராக நிற்க முடியும்? என்று பெரும்பாலானோர் யோசிப்பதில்லை. சாதாரண பிரச்சனைகளுக்கு பிசாசை குற்றம் கூறி, அவனுக்கு நம் வாழ்க்கையில் இடமளிக்கக் கூடாது.

இன்னும் சிலர், எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ரத்தக் கொதிப்பு, சர்க்கரை உள்ளிட்ட நோய்கள் பாரம்பரியமாக வரும் என்று கூறுகிறார்கள். இப்படி கூறுவதும் ஒரு அறிக்கையாக மாறி, அந்த நோயை வரவழைத்து கொள்கிறார்கள். ஏனெனில் ஆசீர்வாதமும் சாபமும் நாவின் அதிகாரத்தில் இருக்கிறது என்று வேதம் கூறுகிறது.

இப்படி பல காரியங்களை தேவையில்லாமல் கூறி அறிக்கையிட்டு, நம் வாழ்க்கையில் வருவித்து கொண்டு, வருத்தப்படுகிறார்கள். இனியும் இந்த நிலையில் தொடராமல், தாவீது கூறுவது போல, என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னை தொடரும் என்ற விசுவாசத்தோடு அறிக்கையிடுவோம். அப்போது அவை உண்மையாகவே தேவ சமூகத்தில் இருந்து நமக்கு கிடைக்கும்.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற அன்புள்ள ஆண்டவரே, எங்கள் வாழ்க்கையில் தேவையில்லாத பல காரியங்களையும் அறிக்கையிட்டு, கஷ்டங்களையும் துன்பங்களையும் பெருக்கி கொள்ளாமல், தாவீதைப் போல வாழ்நாள் முழுவதும் உமது நன்மையினாலும் கிருபையினாலும் செழிப்படைய உதவி செய்யும். விசுவாசத்தோடு அவற்றை பெற்று அனுபவிக்க கிருபைத் தாரும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்