கர்த்தர் யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலர் எல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்.” யோசுவா:3.7

எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து மோசேயின் தலைமையில் விடுவிக்கப்பட்ட இஸ்ரவேல் மக்களை, கானான் நாட்டிற்கு அழைத்து செல்லும் பொறுப்பை யோசுவாவிடம் தேவன் அளித்தார்.

அதுவரை மோசேயின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து செயல்பட்டு வந்த யோசுவா இப்போது, இஸ்ரவேல் மக்களுக்கும் தேவனுக்கும் இடையே ஒரு பாலமாக நிற்க வேண்டிய பொறுப்பிற்கு வந்துள்ளார். இந்த ஊழியம் எந்தளவிற்கு கடினமானது என்பதை, கடந்த 40 ஆண்டுகளாக மோசேயோடு இருந்த யோசுவா நன்கு அறிந்துள்ளார்.

யோசுவா என்பவர் கானான் நாட்டை உளவு பார்க்க சென்ற உளவாளி (எண்ணாகமம்:13.16), கோத்திர பிரபு (எண்ணாகமம்:13.2,8), போர் வீரன் (யாத்திராகமம்:17.13), படைத் தலைவர் (யாத்திராகமம்:17.9), மோசேயின் உதவியாளர் (எண்ணாகமம்:11.28) என்ற கோணங்களில் மட்டுமே இஸ்ரவேல் மக்களுக்குத் தெரியும். யோசுவா உடன் தேவன் பேசுவார் என்பதோ, மோசேயைப் போல எல்லா கஷ்டங்களிலும் தேவனிடம் இருந்து அவர்களுக்கு விடுதலையைப் பெற்று தருவார் என்பதோ, இஸ்ரவேல் மக்களின் மனதில் இருக்கவில்லை.

இந்த நிலையில் இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக யோசுவாவை மேன்மைப்படுத்த, யோர்தான் என்ற ஒரு சோதனை தேவைப்பட்டது. நம் வாழ்க்கையிலும் தேவன் நம்மோடு இருக்கிறார் என்பதை நம்மோடு இருக்கிறவர்களுக்கு காட்ட அல்லது நம்மை மேன்மைப்படுத்த, ஒரு சோதனை தேவைப்படுகிறது.

யோர்தான் என்ற தனது முதல் சோதனையை யோசுவா தைரியமாக எதிர்கொள்கிறார். அதற்கு முன்பாக பின்வாங்காமல், தைரியமாக முன்னேறுகிறார். அப்போது தேவன் மேற்கூறிய வாக்குத்தத்தத்தை அளிக்கிறார். அதேபோல நமக்கு முன்பாக அளிக்கப்படும் சோதனைகளைக் கண்டு நாம் பின்வாங்க கூடாது. தேவனுடைய வாக்குத்தத்தங்களை நம்பி, முன்னேற வேண்டும்.

தங்களுக்கு அளிக்கப்பட்ட தேவ ஊழியங்களை எண்ணி, இன்று பலரும் பயப்படுகிறார்கள். ஆனால் எந்தொரு ஊழியத்தையும் தகுந்த வாக்குத்தத்தம் அளித்த பிறகே, தேவன் நம் கையில் ஒப்புக் கொடுக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

தேவனுக்காக தைரியமாக புறப்பட்ட யோசுவா, தனக்கு முன்பாக ஒரு பெரிய அற்புதத்தைத் தேவன் செய்வார் என்று விசுவாசித்தார். ஏனெனில் யோசுவா.3.4 வசனத்தில், இதுவரை நீங்கள் அந்த வழியாக நடந்து போகவில்லை என்று யோசுவா கூறுகிறார். அந்த விசுவாசத்தைக் கண்ட தேவன், அவருக்கு மேற்கூறிய தைரியமூட்டும் வார்த்தைகளை அளிக்கிறார். தேவனுடைய வார்த்தைகளுக்கு ஏற்ப, யோசுவா கிரியைச் செய்த போது, தனக்கு முன்பாக இருந்த யோர்தான் இரண்டாக பிளந்தது.

அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டு ஓடும் யோர்தான், தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்த ஆசாரியர்களின் கால்கள் பட்டவுடன், குவியலாக நின்றது என்று யோசுவா.3.15 இல் வாசிக்கிறோம். இதேபோல நாமும் தேவன் நடத்திய வழிகளை எண்ணி, அவர் மீது விசுவாசத்தோடு முன்னேறும் போது, தேவனும் நாம் எதிர்பாராத புதிய பாதைகளின் வழியாக நடத்துவார். அது மற்றவர்களுக்கு முன்பாக, நம்மை மேன்மைப்படுத்துவதாக அமையும்.

யோர்தானின் சோதனை வரை, சாதாரண மனிதனாக தெரிந்த யோசுவா, அதன்பிறகு இஸ்ரவேல் மக்களின் கண்களில் தேவ ஊழியராக தெரிந்தார். அதேபோல சோதனைகளைக் கண்டு பயந்து பின்வாங்காமல், தேவனுக்காக தைரியமாக கிரியைச் செய்யும் போது, தேவன் நம்மை உயர்த்துவார்.

ஜெபம்:

எங்களை அளவில்லாமல் அன்புக்கூறும் தேவனே, சோதனைகளைக் கண்டு நாங்கள் பின்வாங்க கூடாது என்றும், அதுவே எங்களை உயர்த்த நீர் வைத்துள்ள ஒரு தருணம் என்றும், யோசுவாவை உதாரணமாக காட்டி, எங்களோடு பேசிய உமது வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். சோதனைகளில் உமக்காக தைரியமாக செயல்பட்டு, எழும்பி பிரகாசிக்க உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

கடந்த வார செய்திகள்