கர்த்தர் தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; ...நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்.” உபாகமம்:31.8

எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து தேவனால் விடுவிக்கப்பட்ட இஸ்ரவேல் மக்களை மோசே வழிநடத்தினார். மோசேக்கு பிறகு இந்தத் தலைமைப் பொறுப்பை ஏற்ற யோசுவாவின் மனதில் பெரியளவிலான பயம் இருந்தது. ஏனெனில் கடந்த 40 ஆண்டுகளாக, மோசேயோடு இருந்த யோசுவாவிற்கு, இஸ்ரவேல் மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது நன்றாக தெரியும்.

பூமியிலேயே சாந்தமான மனிதன் என்று தேவனிடமிருந்து சாட்சியைப் பெற்ற மோசேக்கே கோபம் வரும்படி நடந்து கொண்டவர்கள் என்பதை யோசுவா கண்கூடாக கண்டவர். வனாந்தரத்தில் 40 ஆண்டுகளில் அப்படிப்பட்ட மக்களின் சாவு எப்படியிருந்தது என்பதையும் கண்டவர். இந்நிலையில் அவர்களை தனியாக வழிநடத்துவதில் யோசுவாவிற்கு பயம் ஏற்பட்டதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.

மோசே இருந்த வரை, அவரது வார்த்தைகளுக்கு கீழ்படிந்தால் போதும் என்ற தைரியத்தோடு யோசுவா காணப்பட்டார். ஏனெனில் தேவனுடைய மனிதனாகிய மோசே, தேவனோடு நேரடியாக பேசுகிறவராக இருந்தார். ஆனால் அவர் இல்லாத ஒரு சூழ்நிலையைக் கண்டு, யோசுவாவிற்கு மனதில் பயம் ஏற்படுகிறது.

இதை அறிந்த தேவன், மோசேயின் மூலமாக மேற்கூறிய தைரியப்படுத்தும் வார்த்தைகளைக் கூறுகிறார். மோசேயின் மரணத்திற்கு பிறகு, இதே வார்த்தைகளை யோசுவாவிற்கு தேவன் மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறார் என்பதை யோசுவாவின் புத்தகத்தில் காண முடிகிறது.

நம் வாழ்க்கையில் கூட மேற்கூறியது போன்ற சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். நமக்கு நன்கு பழக்கமுள்ள ஒரு சோதனை மிகுந்த பகுதியில் அல்லது சூழ்நிலையில் நாம் தேவனுக்காக சாட்சியாக நிற்க வேண்டிய நிலை ஏற்படலாம். அங்கு ஆபத்து இருக்கிறது என்பதை நாம் தெளிவாக அறிந்திருக்கலாம். ஆனாலும் நம்மை அழைத்த தேவன், நம்மோடு இருக்கிறார் என்பதை விசுவாசிக்க வேண்டும்.

சூழ்நிலைகளைக் கண்டு யோசுவா பின்வாங்காமல், தேவனுடைய வார்த்தைகளை அப்படி பின்பற்றினார். அப்போது தனக்கு முன்பாக பொங்கி வழிந்து ஓடிய யோர்தான் நதியின் நடுவே ஒரு காய்ந்த வழி திறந்தது.

இதேபோல தேவன் நடத்தும் பாதைகளில் தைரியத்தோடு முன்னோறுவோம். நமது தைரியத்தைத் தளர்த்தும் யோசனைகள், சிந்தைகள் வரலாம். பழைய அனுபவங்கள் நமக்கு பயத்தை உண்டாக்கலாம். ஆனால் தேவனுடைய வார்த்தைகளையும் வாக்குத்தத்தங்களையும் உறுதியாக பிடித்து கொண்டு செல்லும் போது, நாம் எதிர்பார்க்காத ஒரு பெரிய வெற்றியைத் தேவன் கட்டளையிடுவார் என்பது நிச்சயம்.

பயத்தோடும் திகைப்போடும் காலத்தைக் கழித்து கொண்டிருக்கும் மனதை மாற்றி, கர்த்தர் நமக்கு முன்பாக செல்கிறார் என்ற விசுவாசத்தைக் கட்டியெழுப்புவோம். அவர் நம்மோடு இருக்கும் போது, நமக்கு எதிராக எதுவும் நிற்க முடியாது.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற அன்பு தெய்வமே, நாங்கள் கடந்து செல்லும் சில சூழ்நிலைகளைக் கண்டு செய்வது அறியாமல் நிற்கும் எங்களோடு இன்று யோசுவாவை முன்நிறுத்தி நீர் பேசிய உமது வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். தேவரீர் எங்களுக்கு முன்பாக சென்று, எல்லா தடைகளையும் பிரச்சனைகளையும் நீக்கி, நாங்கள் எதிர்பாராத புதிய வழிகளைத் திறக்கிறவராக இருப்பதற்காக உம்மை துதிக்கிறோம். உமது வார்த்தைகளில் விசுவாசித்து, பெரியளவிலான வெற்றிகளைப் பெற்றுக் கொள்ள உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்