தீர்க்கத்தரிசனம் இல்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப் போவார்கள்;...நீதிமொழிகள்:29.18

வருங்காலத்தில் நடைபெறும் காரியங்களை முன்கூட்டியே அறிந்து கொள்வதை தான் தீர்க்கத்தரிசனம் என்பது நாம் அறிந்ததே. இந்த தீர்க்கத்தரிசனம் இல்லாவிட்டால், ஏன் சீர்கெட்டு போவார்கள் என்பதை குறித்து இந்த செய்தியில் சிந்திப்போம்.

தாயின் கருவில் உருவாகும் முன்னரே நம்மை குறித்த தேவ திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று வேதம் கூறுகிறது. எனவே ஒவ்வொரு தேவ பிள்ளைக்கும், அவர்களின் அழைப்பை குறித்த ஒரு தரிசனம் தேவை. இந்த தரிசனம் இல்லாத பலரும், தங்கள் விரும்பும் வகையில் வாழ்கிறார்கள். இதில் பல தோல்விகளையும் சந்தித்து, முடிவில் தேவனை விட்டே பின்வாங்கி போகிறார்கள்.

இந்த நிலை ஏற்படாமல் இருக்க தரிசனத்தைப் பெற என்ன செய்யலாம்? இதற்கு தீர்வாக பலரும், தீர்க்கத்தரிசிகளைத் தேடி போகிறார்கள். அவர்கள் கூறும் காரியங்களை மையமாக வைத்து, தங்களின் தரிசனத்தை ஊகித்து கொள்கிறார்கள்.

இது குறித்து அறிமுகமான ஒருவர் கூறுகையில், நம் வாழ்க்கையில் பல குறைகள், குற்றங்கள் உண்டு. மேலும் தேவ சமூகத்தில் அவரது சத்தத்தை கேட்பதிலும் நமக்கு பழக்கம் இல்லை. இதனால் தேவனே பேசினால் கூட நமக்கு தெரியாது. எனவே யாராவது ஒருவர், நமக்காக விசாரித்து கூறினால் நன்றாக இருக்கும் அல்லவா? அதனால் தேவனிடம் நன்கு விசாரித்து பழக்கமுள்ள தீர்க்கத்தரிசன வரம் கொண்ட ஊழியர்களை நாடி போகிறோம் என்றார்.

இதை கேட்டு ஆச்சரியமடைந்த நான், அவரது கூற்றை வேத வசனத்தின் முன் வைத்து ஆராய்ந்து பார்த்தேன். தேவன் நம்மை போதித்து நடத்துபவர் (சங்கீதம்:32.8), ஆபத்தில் கூப்பிடும் போது விடுவிப்பவர் (சங்கீதம்:50.15), நமக்கு செவிக் கொடுக்கும் தேவன் (சங்கீதம்:3.4) இப்படி சொல்லி கொண்டே போகலாம். மேற்கூறிய வசனங்களில் தேவனை, நாம் தனிப்பட்ட முறையில் நோக்கி கூப்பிட்டால் நமக்கு பதில் கிடைக்கும் என்று தெரிகிறது.

அப்படியிருக்க, நம்மை தேவன் அழைத்த அழைப்பின் பின்னணியில் உள்ள தரிசனத்தை பெற, தீர்க்கத்தரிசிகளை நாடி செல்ல தேவையில்லை. அதற்கு பதிலாக நம்முடைய காரியங்களை குறித்து தேவனிடம் ஜெபத்தில் விசாரித்தாலே, அதற்கு அவர் பதிலளிக்க தயாராக இருக்கும் போதும் என்பதை அறியலாம்.

அப்படியென்றால் இன்று ஏன் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தீர்க்கத்தரிசிகளை நோக்கி ஓடுகிறார்கள்? அல்லது அந்த பழக்கம் எப்படி வந்தது என்ற சந்தேகம் வரலாம். இதற்கு நம்மிடம் உள்ள சோம்பேறித்தனமும் அவசர புத்தியும் தான் முக்கிய காரணங்களாக உள்ளன. இன்று பலருக்கும் தேவ சமூகத்தில் காத்திருந்து, தேவனுடைய வார்த்தைகளைக் கேட்க விருப்பமில்லை. அதையும் தாண்டி ஜெபத்தில் தேவனிடம் கேட்க சென்றால், தேவ சத்தத்தை கேட்க தடையாக இருக்கும் நம் பாவ பழக்கங்களை விட்டு விலக வேண்டியுள்ளது.

இவ்வளவு கஷ்டப்பட்டு தேவனிடம் இருந்து பதிலை பெறுவதற்கு பதிலாக, தீர்க்கத்தரிசிகளாக அறியப்படும் தேவ ஊழியர்களிடம் சென்றால், நமது வாழ்க்கையில் உள்ள எந்தக் குறையைக் குறித்தும் சிந்திக்க தேவையில்லை. மேலும் உடனடியாக நமக்கு தேவைப்படும் பதிலும் கிடைத்து விடுகிறது.

கிறிஸ்தவர்கள் இடையே இப்படிப்பட்ட மனநிலையில் உள்ளதால், தேவனால் வல்லமையாக பயன்படுத்தப்பட்டு வரும் பல தேவ ஊழியர்களும், தங்களுக்கு மனதில் தோன்றும் காரியங்களை, தேவன் கூறியதாக அறிவிக்கிறார்கள். இதன் விளைவாக, புத்தாண்டு தீர்க்கத்தரிசனம், மாத தீர்க்கத்தரிசனம், நாட்டிற்கான தீர்க்கத்தரிசனம், தனிப்பட்ட சபை அல்லது நபருக்கான தீர்க்கத்தரிசனம் என்று பல வகையில் தீர்க்கத்தரிசனங்கள் உரைக்கப்படுகின்றது. இன்னும் சிலருக்கு, நமக்காக ஜெபிக்க ஆரம்பித்தவுடனே தீர்க்கத்தரிசனம் வந்துவிடுகிறது.

இதிலும் சில ஊழியர்கள், தீர்க்கத்தரிசனம் கேட்க வந்துள்ள நபருக்கு ஏற்றது போல அதை கூறுகிறவர்களும் உண்டு. இப்படிப்பட்ட தேவ ஊழியர்களுக்கு தான் அதிக மவுசு என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் தீர்க்கத்தரிசன வரத்தை மட்டுமே வைத்து கொண்டு, பல நாடுகளுக்கு சென்று ஊழியம் செய்யும் தேவ ஊழியர்களும் இருக்கிறார்கள்.

இதில் என்ன தப்பு இருக்கிறது? என்று உங்களுக்கு தோன்றலாம். இதற்கான பதிலைத் தான் தியான வசனம் கூறுகிறது. தீர்க்கத்தரிசனத்தை பெற ஜெபித்து நாம் காத்திருக்கும் போது, அதற்கு தடையாக இருக்கும் பல குறைகளையும் பாவங்களையும் தேவன் நமக்கு உணர்த்துகிறார். எனவே அவற்றை அறிக்கையிட்டு, இயேசுவின் இரத்தத்தால் பரிசுத்தம் பெறுகிறோம்.

இதனால் தேவனோடு இன்னும் கிட்டி சேரும் வாய்ப்பு உருவாகிறது. ஒவ்வொரு காரியத்திற்கும் தேவனையே சார்ந்து வாழும் நிலையும் உருவாகி, பரிசுத்த தேவனின் சாயலை கொஞ்சம் கொஞ்சமாக அடைகிறோம். இந்த அனுபவம் நம்மிடம் இல்லாமல், தீர்க்கத்தரிசிகளைத் தேடி செல்லும் போது, பரிசுத்தத்திற்கு பதிலாக உலகின் அசுத்தத்திலேயே தொடர நேரிடும். இது நம்மை சீர்கெட்டு போகச் செய்கிறது.

எனவே நமது வருங்கால காரியங்களை குறித்து அறிய விரும்பி, தீர்க்கத்தரிசனம் கூறுபவர்களை தேடி செல்வதை தவிர்ப்போம். அதற்கு பதிலாக, நாமே தேவனிடம் நேரடியாக ஜெபத்தில் கேட்போம். கேட்கிற எவனும் பெற்றுக் கொள்கிறான் என்று வாக்குத்தத்தம் அளித்துள்ள நம் தேவன், நமக்கு நிச்சயம் பதிலளிப்பார். மேலும் தேவனோடு உள்ள ஐக்கியத்தை பெற்று, இந்த உலக காரியங்களில் சீர்கெட்டு போகாமல் தேவனால் காக்கப்படுவோம்.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற அன்புள்ள தெய்வமே, எங்களோடு பேசி உமது வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். எங்கள் வாழ்க்கையில் உமது சித்தத்தை அறிந்து கொள்ள தீர்க்கத்தரிசனம் எவ்வளவு முக்கியமானது என்று பேசினீர். அதற்காக மற்றவர்களை சார்ந்து வாழாமல், உம்மை நோக்கி பார்த்து பதிலை பெற்று கொள்ள கிருபை தாரும். தீர்க்கத்தரிசனத்தை பெற்று கொண்டு, உமது சாயலை அடைய உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்