தேவ ஊழியங்களைச் செய்ய எல்லாருக்கும் ஆர்வம் தான். அதற்கு சிலருக்கு தகுந்த வசதியும் வாய்ப்பும் கிடைக்கிறது. ஆனால் சிலருக்கு கிடைப்பதில்லை. இதனால் தேவனுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்று என் மனதில் இருக்கிறது, செயலில் இல்லை என்று வருத்தப்படுகிறவர்களும் உண்டு.

இந்நிலையில் இன்று தேவ ஊழியங்களில் ஈடுபடுகிறவர்கள் பலரும் வழிவிலகி பின்மாற்றத்தில் போகிறார்கள். இதற்கான காரணங்களைக் குறித்து கேட்டால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை உண்டு. இந்நிலையில் ஒரு காலத்தில் எழும்பி பிரகாசித்த பலரும், பிற்காலத்தில் பின்மாற்றத்தில் போவதற்கான காரணங்களில் முக்கியமான சிலவற்றை இங்கு காண்போம்.

கேட்டது:

சென்னையில் நான் பணியாற்றிய போது, இரட்சிக்கப்பட்ட சில சகோதரர்களுடன் ஒரு அறையில் தங்கியிருந்தேன். அவ்வப்போது ஜெபிப்பது, வேத வசனங்களைக் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்வது என்று எங்கள் எல்லாருடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கும், இந்த சகோதர ஐக்கிய உதவிகரமாக இருந்தது.

ஆனால் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு, ஒவ்வொருவராக பிரிந்து செல்ல வேண்டிய நிலை உருவானது. ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தமான தேவ ஊழியங்களைச் செய்து வந்தோம். சமீபத்தில் என்னோடு அறையில் தங்கியிருந்த ஒரு சகோதரனை சந்திக்க நேர்ந்தது.

நாங்கள் தங்கியிருந்த அறையிலேயே மிகவும் எழும்புதல் கொண்டவராக, எங்களுக்கு அதிக உற்சாகம் ஊட்டக் கூடியவராக இருந்தவர் அவர். ஆனால் இன்று இயேசுவும் வேண்டாம், தேவாலயமும் வேண்டாம் என்று கூறுகிறார். அவரிடம் பேசிய போது, அவரது பின்மாற்றத்திற்கு காரணமாக அமைந்த சில காரணங்களை அறிந்து கொள்ள முடிந்தது. அது எனக்கு மட்டுமின்றி, இன்று பல்வேறு ஊழியங்களில் ஈடுபடும் வாசகர்களுக்கும் உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இயேசு - நமக்கு சிறந்த மாதிரி:

ஒரு காலத்தில் ஜெபக் கூட்டங்களில் அதிக நேரம் செலவிட்ட அவர், தேவாலயத்தில் கண்ட சிலரை, தனக்கு முன்மாதிரியாக வைத்திருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களில் இருந்த சில குறைகளைக் காண நேர்ந்தது. அவர்களின் பேச்சில் இருந்த பரிசுத்தம், வாழ்க்கையில் இல்லையே என்று ஏங்கினார். இதனால் யாரையும் நம்பக் கூடாது என்ற முடிவுக்கு வந்தார். மற்றவர்கள் கூறும் அறிவுரைகளையும் ஏற்க மறுத்து, கொஞ்சம் கொஞ்சமாக பின்மாற்றத்தில் சென்றார். நம் வாழ்க்கையில் மனிதர்களை விட, இயேசுவை முன்மாதிரியாக வைத்திருந்தால் இந்தப் பிரச்சனையை தவிர்க்கலாம்.

தனி ஜெபத்தில் சோர்வுக் கூடாது:

தேவாலயத்தில் பல ஊழியங்களைச் செய்து வந்த அவர், தனி ஜெபத்தில் மிகவும் பின்தங்கியிருந்தார். தனி ஜெபத்தில் மட்டுமே தேவனோடு நெருங்கிய உறவு வைத்திருக்க முடியும். இதனால் தேவனோடு உள்ள ஐக்கியத்தை இழந்த நிலையில், இடறல் அடைந்த போது, யாரிடம் கேட்பது என்ற குழப்பத்தில் தவிர்த்தார். எனவே தனி ஜெபத்தில், எக்காரணம் கொண்டு சோர்ந்து போகக் கூடாது.

மேலும் படிக்க: மற்றவர்கள் விடும் சாபம் நமக்கு பலிக்குமா?

மற்ற சபையினரையும் மதிக்க வேண்டும்:

குறிப்பிட்ட சபையில் அங்கம் வகித்த அவர், மற்ற சபையினரை பெரிய பொருட்டாக நினைக்கமாட்டார். தான் போகும் சபையினர் மட்டும் தான் சரியானவர்கள் என்ற எண்ணம் இருந்தது. இதனால் மற்ற சபையினர் எந்த அறிவுரைக் கூறினாலும், அதை எளிதில் ஏற்கமாட்டார். ஒரு ஆவிக்குரிய சபையில் அங்கமாக இருக்கிறோம் என்பதற்காக, மற்ற சபையினரை நாம் மதிக்காமல் இருப்பது தவறு. ஏனெனில் பரலோகத்தில் எந்தத் தனி சபையினருக்கும், முன்னுரிமை கிடையாது.

மிஞ்சிய காரியங்களில் தலையிடுவதைத் தவிர்க்கலாம்:

அவரது ஆவிக்குரிய நிலவரத்திற்கும் மிஞ்சியதாக அமையும் சில ஊழியங்களில், அவர் கலந்து கொண்டார். எடுத்துக்காட்டாக, பிணியாளிகள், நோயாளிகள், பிசாசு பிடித்தவர்கள் ஆகியோருக்காக, தலையில் கைகளை வைத்து ஜெபித்து வந்தார். தகுந்த ஆவிக்குரிய வல்லமை இல்லாததால், பிசாசின் தாக்குதலில் சிக்கி பின்னடைவை அடைந்தார். நாம் செய்யும் ஊழியங்களுக்கு ஏற்ற ஆவிக்குரிய வல்லமை நமக்கு இருக்க வேண்டும். இல்லாவிட்டால், நாம் சற்று பின்தங்கிய நேரத்தில் பிசாசின் தாக்குதலுக்கு இரையாகி விடுவோம்.

மேலும் படிக்க: ஆவிக்குரிய தோல்விகளின் துவக்கம் இப்படி தான்...

வேத வசனங்களில் தெளிவு தேவை:

தினமும் வேதாகமம் படிக்கும் பழக்கம் கொண்டிருந்த அவருக்கு, வசனங்களை தியானித்து தெளிவு பெறும் பழக்கம் இல்லாமல் இருந்தது. இதனால் சோதனை நேரங்களில், நிலைநிற்பதற்கு அடுத்தவர்களின் உதவி தேவைப்பட்டது. ஒரு கட்டத்தில் தனியே விடப்பட்ட போது, செய்வதறியாமல் திகைத்தார். அந்த சந்தர்ப்பத்தைப் பிசாசு பயன்படுத்தி எளிதாக வீழ்த்திவிட்டான். கிறிஸ்தவர்களான நாம் வேதாகமமத்தைப் படிப்பதோடு, அதை தியானித்து தெளிவு பெற்று கொள்ள வேண்டும். இதன்மூலம் நமது கிறிஸ்தவ வாழ்க்கையை யாராலும் குழப்ப முடியாது.

சுயதிருப்தி அடையக் கூடாது:

பல தேவ ஊழியங்களைச் செய்து வந்த அவருக்கு, தான் செய்த ஊழியங்களில் பெரும் திருப்தி இருந்தது. இதனால் ஒரு கட்டத்தில், அவர் செய்த ஊழியங்களை யாராவது விமர்சித்தால், அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாம் செய்யும் ஊழியங்களில் சந்தோஷப்படலாம். அதில் திருப்தி அடைந்தால், மற்றவர்களின் கருத்துகளை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் ஊழியத்தில் முன்னேற்றமும் இருக்காது.

அந்த சகோதரனிடம் பேசியதில் இருந்து, இன்னும் அநேக காரியங்களை அறிய முடிந்தது என்றாலும், மேற்கூறிய காரியங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்று எனக்கு தெரிந்தது. சில நாட்கள் மீண்டும் அவருடன் தங்கியிருந்து, அவருக்காக ஜெபித்தோம். இப்போது அவரது நடவடிக்கையில் சற்று மாற்றம் தெரிவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம்.

மேலும் படிக்க: தேவாலயத்தில் திருட வந்தவர், இயேசுவிடம் சிக்கினார்!

சிந்தித்தது:

ஒரு காலத்தில் எங்களுக்கு முன்மாதிரியாக இருந்த அவரைப் போன்ற பலரும் விழுந்த போதும், இதுவரை எங்களை விழாமல் தேவன் பாதுகாக்கிறாரே என்று எண்ணி, தேவ சமூகத்தில் கண்ணீரோடு நன்றி செலுத்துகிறோம். அதே நேரத்தில் அவரது வாழ்க்கை எனக்கு மட்டுமின்றி, தேவ ஊழியங்களில் ஈடுபடும் பலருக்கும் ஒரு பாடமாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன்.

மேற்கூறிய காரியங்கள் யாரையும் குற்றப்படுத்தும் எண்ணத்தோடு வெளியிடவில்லை. மாறாக, தேவ ஊழியங்களில் இருப்பவர்கள் யாரும் பின்மாற்றத்தில் போகக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையை அளிக்கவே வெளியிடுகிறோம். எந்த மாதிரியான ஊழியங்களைச் செய்தாலும், மேற்கூறிய காரியங்களில் கவனம் செலுத்தினால், நிச்சயம் தேவனுடைய பாதுகாப்பு நமக்கு இருக்கும் என்று விசுவாசிக்கிறேன்.

- கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்