கர்த்தராகிய இயேசுவைச் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு பாவ வாழ்க்கையில் இருந்து இரட்சிக்கப்படும் போது, மற்ற மார்க்கத்தினர் பெயர் மாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று சில ஊழியர்கள் கண்டிப்பாக கூறுகிறார்கள்.

இதனால் பெரும்பாலானோர், தங்களின் பழையப் பெயர்களை மாற்றிக் கொள்கிறார்கள். தங்களின் பழைய பெயர்களோடு, புதிய ஒரு கிறிஸ்தவ பெயரையும் சேர்த்து கொள்பவர்களும் உண்டு.

இந்நிலையில் இரட்சிக்கப்பட்ட ஒவ்வொருவரும் இப்படி பெயர் மாற்றம் செய்து கொள்ள வேண்டுமா? அதுதான் இரட்சிக்கப்பட்டதன் அடையாளமா? என்ற கேள்வி நமக்குள் எழும்புகிறது. அதைக் குறித்து, இந்தச் செய்தியில் ஆராய்வோம்.

கேட்டது:

பாரம்பரியமாக விக்கிரங்களை வணங்கிக் கொண்டிருந்து, இயேசுவைக் குறித்து அறிந்து இரட்சிக்கப்பட்ட ஒரு சகோதரனைச் சந்தித்தேன். அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, தனது பழைய பெயரை மாற்றி, ஒரு கிறிஸ்தவ பெயரை வைத்து கொண்டதாகவும், அதுவே தனது ஞானஸ்நான பெயர் என்றும் கூறினார்.

நீங்கள் எதற்காக பெயரை மாற்றிக் கொண்டீர்கள்? என்று அவரிடம் கேட்டேன். ஆனால் அவரால் அதற்கு தெளிவான பதிலை அளிக்க முடியவில்லை. ஏனெனில் தேவ ஊழியரின் சொற்படி, அவரது பெயர் மாற்றம் நடந்திருந்தது. அவரைப் போல மற்ற மார்க்கங்களில் இருந்து இரட்சிக்கப்பட்டு வரும் பலருக்கும், தங்களின் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமா? என்று தெரிவதில்லை.

மதம் மாற்றம் அல்ல:

இன்று பலரும் பெயரை மாற்றியதோடு, மதம் மாறிவிட்டார்கள் என்று நினைக்கிறார்கள். உண்மையைக் கூறினால், மதம் மாறி எந்த பிரயோஜனமும் இல்லை. மனம் மாறுதலைத் தான் தேவன் விரும்புகிறார். எனவே மேலோட்டமான பெயர் மாற்றத்தோடு நாம் இரட்சிக்கப்பட்ட அனுபவம் நின்றுவிடக் கூடாது.

பெயர் மாற்றம் ஏன்?

இயேசுவைக் குறித்து அறியாத மற்ற மார்க்கத்தினர், தாங்கள் வணங்கும் தெய்வங்களின் பெயர்களைப் பிள்ளைகளுக்கு வைக்கிறார்கள். அதன்மூலம் அந்தப் பெயரை அழைக்கும் போதெல்லாம், தாங்களின் தெய்வத்தை அழைக்கலாம் என்று கருதுகிறார்கள்.

இந்த முறையில் இரட்சிக்கப்பட்ட பிறகு, ஒரு தேவ பிள்ளை மற்ற தெய்வங்களின் பெயர்களில் அழைக்கப்படுவது உகந்ததாக தெரியவதில்லை. ஏனெனில் ஜீவனுள்ள தேவனை வணங்கும் ஒரு நபர், கற்பனையான ஒரு தெய்வத்தை அழைக்க மறைமுகமாக உதவுவது தவறு. எனவே பரிசுத்த வேதாகமத்தில் உள்ள பெயர்களையோ அல்லது புகழ்பெற்ற பரிசுத்தவான்களின் பெயர்களையோ தங்களுக்கு வைத்து கொள்கிறார்கள்.

மேலும் படிக்க: நம் சரீரத்திற்கு நன்மை உண்டாக்கும் ஜெப நிலைகள்

மேலும் இரட்சிக்கப்பட்ட பிறகு, தங்களின் நடத்தை, பழக்கவழக்கங்கள், பேச்சு என்று எல்லாவற்றிலும் ஒரு பரிசுத்தம் காணப்பட வேண்டும். அதன் ஒரு பகுதியாக தான் பெயரையும் மாற்றிக் கொள்கிறார்கள். இதைச் சரியாக புரிந்து கொள்ளாத பலரும், பெயர் மாற்றத்தோடு எல்லாம் முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள்.

அந்த அடிப்படையில் தான், விரும்பியவரை திருமணம் செய்து கொள்ள ஞானஸ்நானம் எடுப்பது, குடும்ப ஆஸ்திக்காக அல்லது அந்தஸ்திற்காக தேவாலய அங்கமாக மாறுவது, பெயர், புகழ், பணம் பெறும் நோக்கில் மற்றும் கிறிஸ்தவர் என்று காட்டிக் கொள்ள இன்று பலரும் பெயரை மாற்றிக் கொள்கிறார்கள்.

உண்மையில் பெயரை மாற்றிக் கொண்டால், அதற்கேற்ற ஆவிக்குரிய மற்றும் சரீரத்திற்குரிய செயல்பாடுகளில் மாற்றம் தேவை. பவுல் என்று பெயரை வைத்து கொண்டு, சுவிசேஷம் கூறுவதில் ஈடுபாடு இல்லாத நபராக இருந்தால் எப்படியிருக்கும்?

மேலும் படிக்க: எந்த சூழ்நிலையிலும் தேவனை துதிக்க முடியும்!

இன்னும் சிலர் பாரம்பரிய கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்துவிட்டு, பெயரளவில் கிறிஸ்தவராக இருக்கிறார்களே தவிர, நடத்தையில் எந்தொரு கிறிஸ்துவின் சான்றும் தெரிவதில்லை. கிறிஸ்துவின் எந்த நன்நடத்தையும் இல்லாத ஒருவர் கிறிஸ்தவ பெயரை மட்டும் வைத்து கொண்டிருந்தால், அதனால் கிறிஸ்துவின் பெயர் தூஷிக்கப்படுமே தவிர, மகிமைப்படாது.

சிந்தித்தது:

எனவே இரட்சிக்கப்பட்ட பிறகு, நமது பெயர் மாற்றத்தின் மூலம் பெரிய வித்தியாசம் ஏற்பட போவதில்லை. ஆனால் நமக்குள் மனமாற்றம் ஏற்பட்டு, எல்லா நடக்கைகளிலும் இயேசுவைக் காட்டினால், அது மிகப்பெரிய வித்தியாசத்தை உண்டாக்கும்.

பாவியான ஒரு மனிதனின் பழைய பெயரை மட்டும் மாற்றுவதைக் காட்டிலும், அவரது செயல்பாடுகளில் பாவ சிந்தனைகள் மறைந்து, கிறிஸ்துவின் பரிசுத்தம் வெளிப்பட்டால், அதைவிட ஒரு பெரிய மாற்றம் எதுவும் இருக்க முடியாது. எனவே பெயரளவில் கிறிஸ்தவர்கள் என்று மற்றவர்களுக்கு காட்டிக் கொள்வதைவிட, கிறிஸ்துவின் உண்மையான ஒரு நிழலாக, நடமாடும் சாட்சியாக மாறுவது சாலச்சிறந்தது.

- கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்