இந்த உலகில் பிறந்த குழந்தைக்கு தாயின் அன்பு தேவை. பள்ளி செல்லும் முன் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் நட்பு தேவை. வளரும் போது தந்தையின் பாதுகாப்பு தேவை. பள்ளி பருவத்தில் இருந்து நண்பர்களின் நட்பு தேவை.

இப்படி நம்மை சுற்றிலும் உள்ள பலரோடு உள்ள நட்பின் அடிப்படையில் தான், நாம் வாழ்கிறோம். சாகும் வரை ஒரு குறிப்பிட்ட நட்பு வட்டாரம் நம்மை தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் நாம் யாருடன் நட்பு கொள்கிறோமோ, அவருடைய செயல்பாடுகளின் சாயலை நம்மில் காண முடியும். அது வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ நிகழ்கிறது.

கேட்டது:

ஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்ச்சிக்கும், நாம் கொண்டிருக்கும் நட்பு வட்டாரம் பெரும் பங்கு வகிக்கிறது. இது குறித்து கூறும் போது, சமீபத்தில் ஞாயிறு பள்ளி மாணவ, மாணவியருக்கு கூறிய ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது.

அந்தக் கதை இப்படித் தான் துவங்குகிறது... ஒரு காட்டுப் பகுதியில் ஒரு பன்றி வாழ்ந்து வந்தது. அந்த காட்டில் இருந்த நாற்றம் மிகுந்த சாக்கடை நீரில் தினமும் அது குளித்து வந்தது. இதனால் ஏற்கனவே கறுப்பு நிறத்தில் இருந்த பன்றியின் மீது கடும்நாற்றமும் சேர்ந்து கொண்டது. இதன் விளைவாக, பன்றியைக் கண்டாலே மற்ற மிருகங்கள் விலகி ஓடின. நாளடைவில் பன்றியை தனிமை வாட்டியது.

மேலும் படிக்க: இரட்சிக்கப்பட்ட எல்லாரும் இயேசுவின் 2ம் வருகையில் போக முடியுமா?

இந்நிலையில் அந்தக் காட்டிற்கு அருகில் இருந்த குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பொமேரியன் வகையைச் சேர்ந்த நாய் ஒன்று செல்லமாக வளர்க்கப்பட்டு வந்தது. ஒருநாள் வீட்டில் இருந்து வெளியேறிய அந்த நாய், காட்டிற்குள் சென்றது. இதுவரை வீட்டிற்குள்ளேயே இருந்த அந்த நாய்க்கு, காட்டுப் பகுதி பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

சிறிது தூரம் நடந்து சென்ற நாய்க்கு, யாரோ அழும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் வரும் பகுதியை நோக்கி சென்ற நாயின் கண்களில், அழுது கொண்டிருந்த பன்றி சிக்கியது. பன்றியைக் கண்டு மனமிரங்கிய நாய், ஏன் இப்படி அழுகிறாய்? என்று கேட்டது.

அதற்கு பன்றி, இவ்வளவு பெரிய காட்டில் எனக்கென்று நண்பர்கள் யாரும் கிடையாது. எல்லாரும் என்னை விட்டு அகன்று போகிறார்கள் என்றது. இதைக் கேட்டு பன்றி மீது பரிதாபப்பட்ட நாய், இன்று முதல் நான் உனக்கு நண்பனாக இருக்கிறேன். தினமும் நாம் சந்திப்போம் என்றது. அதன்படி, மதிய நேரத்தில் வீட்டு எஜமான் உறங்கும் போது, வீட்டை விட்டு வெளியே வரும் நாய், தினமும் பன்றியை சந்தித்து வந்தது. அது வெயில் காலம் என்பதால், இருவருக்கும் சூடு தாங்க முடியவில்லை.

ஒருநாள் இருவரும் செல்லும் வழியில் ஒரு ஆறு இருப்பதைக் கண்டார்கள். மகிழ்ச்சி அடைந்த நாய், அதில் குளிக்கலாம் என்றது. வழக்கமாக சாக்கடை நீரில் குளித்து பழகிய பன்றிக்கு சங்கடமாக இருந்தது என்றாலும், நட்பிற்கு மரியாதைக் கொடுக்கும் வகையில் சம்மதித்தது. அதுவே தினமும் வாடிக்கையானது.

மேலும் படிக்க: பைபிள் - இவ்வளவு மதிப்பு கொண்டதா?

ஒரு வாரத்தில் பொறுமையிழந்த பன்றி, ஒரே இடத்தில் குளிப்பதைத் தவிர்த்து, வேறொரு பகுதியில் குளிக்கலாம் என்ற யோசனையை தெரிவித்தது. அதற்கு நாய் ஒப்புக் கொண்டது. இதையடுத்து தான் வழக்கமாக குளித்து வந்த சாக்கடை பகுதிக்கு நாயை அழைத்து சென்றது. நாற்றம் மிகுந்த சாக்கடை நீரை சுட்டிக் காட்டி, இங்கே குளிக்கலாம் என்றது பன்றி.

நாற்றத்தைப் பொறுக்க முடியாமல் மூக்கைப் பொத்திக் கொண்டு, இந்த நீரில் யாராவது குளிப்பார்களா? என்றது நாய். இதைச் சற்றும் எதிர்பார்க்காத பன்றி, இந்த நீரில் இதுவரை நீ குளித்தது இல்லை என்பதால் அதன் அருமை உனக்கு தெரியவில்லை என்று நினைக்கிறேன். ஒரு முறை குளித்து பார், என்றது.

நண்பனின் வேண்டுகோளை மறுக்க முடியாத நாய், சாக்கடைக்குள் குதித்தது. வெள்ளை நிறத்தில் இருந்த நாய், சாக்கடை நீரில் மூழ்கி கறுப்பு நிறத்தில் மாறியது. நாற்றத்தைப் பொறுக்க முடியாமல் சாக்கடையில் இருந்து வெளியேறிய நாய், தனது வீட்டிற்கு சென்று குளிக்கலாம் என்ற எண்ணத்தில் நண்பனிடம் விரைவாக விடைப் பெற்றது. உடல் முழுவதும் அசுத்தம் மற்றும் கடும்நாற்றத்தோடு வந்த நாயை, எஜமான் வீட்டிற்கு அனுமதிக்காமல், அடித்து துரத்தினார்.

மேலும் படிக்க: சாப்பிடும் முன் ஜெபிப்பதால் ஏற்படும் பயன்கள்

வேறு வழியில்லாமல் காட்டிற்கு மீண்டும் சென்ற நாய்க்கு ஆறுதல் கூறிய பன்றி, தனது இருப்பிடத்தில் ஓய்வெடுக்குமாறு கூறியது. பன்றி தங்கியிருந்த கடும் நாற்றம் வீச, நாய்க்கு தூக்கம் போனதும் இல்லாமல், தனது நிலைமையை எண்ணி துக்கம் வந்தது.

அதிகாலையில் எழுந்த நாய், ஆற்றில் சென்று குளித்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு, மீண்டும் பன்றியைச் சந்தித்தது. தனது வளர்ப்பு மற்றும் பழக்கவழக்கங்களை வைத்து பார்த்தால், பன்றியோடு இருக்கும் நட்பை இனியும் தொடர முடியாது என்பதால், தன்னை மன்னித்து விடுமாறு கூறிவிட்டு வீடு திரும்பியது. அதன்பிறகு அந்த நாய் காட்டிற்கு மீண்டும் செல்லவே இல்லை.

சிந்தித்தது:

இந்தக் கதையில் வரும் பொமேரியன் நாயைப் போல, மேன்மையான பரலோக ஆசீர்வாதங்களை அனுபவிக்க அழைக்கப்பட்டவர்கள் நாம். ஆனால் சில நேரங்களில், அந்த ஆசீர்வாதங்களைச் சாதாரணமாக எண்ணி, எந்தப் பாதுகாப்பும் இல்லாத காடு போன்ற உலகத்திற்குள் சென்று விடுகிறோம்.

அங்கே பாவத்தில் மூழ்கி இருப்பவர்களோடு நட்புக் கொண்டு, அவர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய முயற்சிக்கும் போது, நமது பரிசுத்தத்தை இழக்க நேரிடுகிறது. அதே நிலவரத்தோடு தேவ சமூகத்திற்கு வர முடியாமல், பின்மாற்றத்திற்குள் செல்கிறோம்.

இந்தச் சூழ்நிலையில் நாம் இழந்துவிட்ட பரிசுத்தமான நிலையை மீண்டும் உணர்ந்தால் மட்டுமே, தேவ சமூகத்தில் தாழ்த்தி மன்னிப்புக் கேட்க முடியும். நமது பின்மாற்றத்தைத் தேவன் மன்னிக்கும் போது, மீண்டும் பரிசுத்தமான வாழ்க்கையைத் தொட முடிகிறது.

எனவே நாம் நட்புக் கொள்ளும் நபர்களைத் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆவிக்குரிய நபர்களோடு நட்பு கொள்ளும் போது, ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர முடியும். ஆனால் பாவ சந்தோஷங்களில் திளைக்கும் நபர்களோடு நட்புக் கொண்டால், ஒரு கட்டத்தில் நாமும் அவர்களை மாறி வேண்டிய நிலை உருவாகிறது.

எனவே எப்படிப்பட்ட நண்பர்களோடு நாம் பழக வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். உலக நண்பர்கள் நமக்கு தேவை தான். ஆனால் அவர்களால் நமக்கு அளிக்கப்பட்ட பரிசுத்த வாழ்க்கைக்கு கேடு வராமல் பார்த்து கொள்ள வேண்டும். அப்போது மட்டுமே நமக்காக வைக்கப்பட்டுள்ள பரலோக ஆசீர்வாதங்களையும், பரலோக வாழ்வையும் நாம் பெற்றுக் கொள்ள முடியும்.

- கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்