நம்மை இரட்சித்த தேவனுக்காக நம்மில் பெரும்பாலானோர் ஏதாவது ஒரு வகையில் ஊழியங்களைச் செய்து வருகிறோம். ஒவ்வொருவரின் அழைப்பிற்கு ஏற்ப, அவர்களுக்கு தேவனால் நியமிக்கப்பட்டுள்ள ஊழியங்களும் அதற்கான காலநேரமும் வேறுபடுகின்றன.

சில ஊழியங்களைக் காலம் அறிந்து செய்ய வேண்டும். காலம் கடந்த பிறகு, அதைச் செய்வதால் தேவனுக்கு எந்தப் பயனும் உண்டாகாது. அந்த ஊழியத்தை எப்படியோ செய்து முடித்தேன் என்ற திருப்தி மட்டுமே நமக்கு ஏற்படும்.

கேட்டது:

இது குறித்து கூறும் போது, சமீபத்தில் தேவனால் உணர்த்தப்பட்ட ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. இயேசுவின் வருகையை எதிர்பார்த்து நிற்கும் காலத்தில் வாழும் நம் வாசகர்களுக்கு பயன்படும் வகையில், அந்தக் கதையை வெளியிட விரும்புகிறேன்.

அந்தக் கதை இப்படித் தான் துவங்குகிறது... ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த தாய்க்கு இரு மகன்கள் இருந்தார்கள். அந்தத் தாய்க்கு வயது சென்ற நிலையில் இரு மகன்களை அழைத்து, இனி தன்னால் விவசாய பணிகளுக்கு செல்ல முடியாது என்று கூறினார். மேலும் இருவருக்கும் விவசாய நிலத்தின் ஒவ்வொரு பகுதியை அளித்து, அதை பராமரித்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

தாயிடம் இருந்து பொறுப்பைப் பெற்ற இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அடுத்த நாள் காலையில் எழுந்த இருவரும், தங்களுக்கு அளிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு சென்றனர். இருவரும் பணிகளைத் துவக்கினர். இதைக் கண்ட தாய் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

நேரம் கடந்தது. மாலை 3 மணி அளவில் இளைய மகன் வீடு திரும்பினார். விவசாய நிலத்தில் இருந்து இவ்வளவு சீக்கிரம் வீடு திரும்பிய அவனை கண்டு பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் கேலி செய்தனர். ஆனால் அவன் அதை பொருட்படுத்தவில்லை. தாயார் எதுவும் கேட்கவில்லை.

இரவு 7 மணி கடந்த நிலையில், மூத்த மகன் வீடு திரும்பினார். அவனைக் கண்ட பக்கத்து வீட்டார், இவன் தான் இந்த வீட்டிற்காக உழைக்கிறான் என்று புகழ்ந்தார்கள். இருவரையும் இரவு உணவு உண்ணும்படி அழைத்தார் தாயார். உணவு உண்ணும் போது, இன்றைய அனுபவங்களைக் குறித்து தாயார் கேட்டார்.

மூத்த மகன் கூறினார்: விவசாய நிலத்தில் நிறைய பணிகள் உள்ளன. ஒருவனாக செய்ய மிக கடினமாக இருந்தது. காலையில் சென்றவுடன் எல்லா பகுதிகளுக்கும் தண்ணீர் பாய்ச்ச ஆரம்பித்தேன். தண்ணீர் பாய்ச்ச ஆரம்பித்த போது, சில இடங்களில் களை எடுக்க வேண்டியிருந்தது தெரிந்தது. இதனால் தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்திவிட்டு, களை எடுக்க துவங்கினேன்.

களை எடுத்து வந்த போது, சில இடங்களில் பூச்சி மருந்து தெளிக்க வேண்டியதை கண்டேன். எனவே பூச்சி மருந்து தெளிக்க சென்றேன். இப்படி ஒவ்வொன்றாக செய்து வருவதற்குள், சூரியனே அஸ்தமித்துவிட்டது. இதனால் நாளை பார்த்து கொள்ளலாம் என்று வீடு திரும்பிவிட்டேன் என்றான்.

இளைய மகன் கூறினார்: காலையில் நிலத்திற்கு சென்றவுடன் அரை மணிநேரத்திற்கு முழுமையாகச் சுற்றிப் பார்த்தேன். இதன்மூலம் இன்று என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொண்டேன். 3 பகுதிக்கு நீர் பாய்ச்ச வேண்டிருந்தது, அதை முதலில் செய்தேன். ஒரு இடத்தில் எலிகள் குழித் தோண்டிருந்தது, அதை மூடினேன்.

இன்றைய பணிகளை முடித்த பிறகு, நாளை செய்ய வேண்டிய பணிகளைக் குறித்து அரைமணி நேரம் ஆராய்ந்து, மனதில் நிர்ணயித்து கொண்டு வீடு திரும்பிவிட்டேன். நாளை சென்றவுடன் அந்தப் பணிகளை முடிக்க வேண்டும் என்று கூறிவிட்டு, தாயாரிடம் எந்தப் பதிலையும் எதிர்பார்க்காமல் எழுந்து சென்றுவிட்டான்.

தனது இரு மகன்களின் பணிகளையும் குறித்து கேட்டறிந்த போது, யார் சிறப்பாக செயல்பட்டார் என்பதை தாயார் விளங்கி கொண்டார். அதாவது மூத்த மகன் காலையில் இருந்து மாலை வரை உழைத்தார், ஆனால் எதையும் முழுமையாக செய்து முடிக்கவில்லை. மேலும் எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வகைப்பிரித்து செயல்படவில்லை. ஆனால் இளைய மகனோ, தனது பணிகளைச் சரியாக ஆராய்ந்து, தேவையையும் காலத்தையும் அறிந்து செயல்பட்டான்.

சிந்தித்தது:

கிறிஸ்தவர்களாகிய நாமும் அந்த இளைய மகனைப் போல, காலத்தையும் தேவையையும் அறிந்து செயல்பட வேண்டியுள்ளது. நானும் ஊழியம் செய்கிறேன் என்று கூறிக் கொண்டு, எதையாவது செய்யக் கூடாது. நாம் செய்யும் ஊழியத்தால் தேவனுக்கும் மற்றவர்களுக்கும் பிரயோஜனம் உண்டாக வேண்டும்.

இதை அறியாத பலரும், இன்று தேவனுக்காக எவ்வளவோ ஊழியத்தைச் செய்து பிரயாசப்பட்டாலும், அதற்கான பலனை அடைய முடியாமல் உள்ளார்கள். எனவே தேவன் தரும் ஊழியங்களைக் காலத்தையும் தேவையையும் அறிந்து சிறப்பாக செய்வோம்.

- கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்