நவீன காலத்தில் பாதுகாப்பு என்ற பெயரில் ஒவ்வொரு மனிதனும், மற்றொரு நபரின் கண்காணிப்பு வளையத்தில் உள்ளான் என்பது மறுக்க முடியாது. இந்த உலகத்தில் வாழ இவ்வளவு பெரிய பாதுகாப்பு வளையம் தேவைப்பட்டால், பரலோகவாசிகளாகிய நாம் எவ்வளவு பெரிய கண்காணிப்பு வளையத்தில் இருப்போம் என்பது யோசிக்கத்தக்கது.

இந்த உலகில் நாம் நடந்து செல்லும் சாலையில் இருந்து கடைகள், அலுவலகங்கள், பூங்காக்கள், பெரிய அளவிலான வீடுகள் என்று பெரும்பாலான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. தவறான நடவடிக்கைகளைக் கண்காணிக்கவே இந்தக் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் இந்தக் கேமராக்களை நம்மில் பெரும்பாலானோர் பெரிய பொருட்டாக நினைப்பதில்லை.

அனுபவித்தது:

இந்நிலையில் சமீபத்தில் எனக்கு ஆச்சரியம் அளித்த ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பெங்களூரு நகரின் சாலைப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன் எனது தந்தை பயன்படுத்தி வந்த இருசக்கர வாகனத்தில் பயணித்து கொண்டிருந்தேன். அப்போது என்னை வழிமறித்த போக்குவரத்து போலீசார், வாகனத்திற்கான ஆவணங்களைக் கேட்டார்கள். வாகனத்தின் ஆவணங்கள் எல்லாவற்றையும் காட்டினேன். சரிபார்த்துவிட்டு, எனது வாகன எண்ணை ஒரு கையடக்கமான எந்திரத்தில் பதிவு செய்து பார்த்தார்கள்.

அதன்பிறகு, எந்தக் காரணமும் கூறாமல் தங்கள் கையில் இருந்த பில் புக்கை எடுத்து ரூ.200 அபராதம் என்று எழுதி என் கையில் கொடுத்தார்கள். இதற்கான காரணத்தைக் கேட்டதற்கு, நான் ஓட்டி வந்த வாகனம் இரண்டு முறை சிக்னலில் சிகப்பு விளக்கு எரிந்த நிலையில் நிறுத்தாமல் சென்றதாக கூறினார்கள்.

கடந்த ஓராண்டாக நான் தான் இந்த வாகனத்தை ஓட்டி வருகிறேன். சாலை விதிகளை நான் சரியாக பின்பற்றியுள்ளேன் என்று கூறினேன். உடனே போலீசார், உங்கள் வாகனம் சாலை விதிகளை மீறியதற்கான ஆதாரம் இருக்கிறது என்று கூறி, எனது இமெயில் ஐடி-யைக் கேட்டனர்.

இமெயில் ஐடியை அளித்த போது, போக்குவரத்து போலீசாரின் அலுவலகத்தில் இருந்து 2 நிமிடத்தில் எனக்கு ஒரு மெயில் வந்தது. அதில் நான் ஓட்டி வந்த வாகனம் சிக்னலில் 2 முறை நிறுத்தாமல் சென்ற வீடியோ இணைக்கப்பட்டிருந்தது. மேலும் அந்தச் சம்பவம் நடந்த தேதி, நேரம் ஆகியவை வீடியோவின் வலது பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதிலிருந்து ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்கு முன் அந்தச் சம்பவம் நடந்துள்ளது என்பதைத் தெரிந்து கொண்டேன்.

வாகனத்தை ஓட்டிய நபர், அவர் அணிந்துள்ள உடையின் நிறம், வாகனத்தின் எண், நிறம் என்று எல்லாமே சரியாக இருந்தது. வாகனத்தை எனது தந்தை ஓட்டியுள்ளார் என்பது தெளிவாக தெரிந்தது. மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல், அபராதத் தொகையைச் செலுத்திவிட்டு கிளம்பினேன்.

சிந்தித்தது:

மேற்கண்ட இந்தச் சம்பவத்தை வீட்டிற்கு வந்த பிறகு சிந்தித்த போது, தேவன் ஒரு காரியத்தை என் மனதில் உணர்த்தினார். இந்த உலகத்தில் நாம் செல்லும் சாலைகள், கடைகள், பெரிய விற்பனையகங்கள், ரயில் மற்றும் பஸ் நிலையங்கள் என்று பல இடங்களில் நமது செயல்பாடுகளைக் கண்காணிக்க, சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.

அந்தக் கேமராக்களின் மூலம் நாம் செய்யும் தவறுகள், மற்றொரு நபரால் கண்டறியப்பட்டு, ஆண்டுகள் கடந்தாலும் வீடியோ ஆதாரத்தோடு சேமித்து வைக்கப்பட்டு, நாம் பிடிக்கப்படும் போது தண்டனை வழங்கப்படுகிறது. அப்படியென்றால், நம்மை உருவாக்கிய தேவனுடைய கண்கள் எவ்வளவு விசேஷமாக இருக்கும்?

2 நாளாகமம்:16.9 இல் வாசிக்கும் போது, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது என்று காண்கிறோம். இந்த உலகில் ஒரு சிசிடிவி கேமராவில் இருந்து தப்புவதே பெரிய விஷயமாக இருக்கும் நிலையில், பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கும் கர்த்தருடைய கண்களுக்கு நாம் எப்படி தப்ப முடியும்?

எதற்காக கர்த்தருடைய கண்கள் பூமியில் உலாவுகிறது என்ற நம் கேள்விக்கு, கர்த்தருடைய கண்கள் பூமியில் உள்ள எல்லா மனுபுத்திரையும் நோக்கிப் பார்த்து, அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது என்று சங்கீதம்:11.4 வசனம் பதிலளிக்கிறது. அதிலும் குறிப்பாக, இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டு நீதிமான்களாக மாற்றப்பட்ட நம் மீது கர்த்தருடைய கண்கள் நோக்கமாயிருக்கிறது என்று சங்கீதம்: 34.15 இல் காண்கிறோம்.

ஒரு சிசிடிவி கேமராவில் படம் பிடிக்க வேண்டுமானால், ஒழுங்கான வெளிச்சமும் தெளிவும் தேவை. ஆனால் கர்த்தருடைய கண்களுக்கு இருளும் மறைவாக இருப்பதில்லை என்று வேதம் (சங்கீதம்:139.12) கூறுகிறது. இப்படியிருக்க, நாம் மற்றவர்களுக்கு தெரியாமல் மறைமுகமாக செய்வதாக நினைத்து செய்யும் தவறுகள், பாவங்கள் ஆகியவை கர்த்தருடைய கண்களுக்கு தெரிகிறது.

அவற்றை எண்ணி அவர் வருத்தப்படுகிறார் என்பதோடு, நம் பாவங்களை அறிக்கையிட்டு விட்டு விடாமல் இருந்தால், அதற்கான தண்டனையும் பெறுவோம் என்கிறது வேதம். எனவே உலகில் நம்மை கண்காணிக்கும் கேமராக்களை விட, பரலோகத்தில் இருந்து நமது ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கும் தேவனுக்கு பயந்து வாழ்வோம். ஏனெனில் நாம் கர்த்தரால் கண்காணிக்கப்படுகிறோம் – ஜாக்கிரதை!

- கர்த்தருக்குள் அன்பான சகோதரி.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்