இயேசு எங்கே பிறந்தார்? என்று கேட்டால், அவர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் என்று ஒரு சின்னக் குழந்தை கூட எளிதாக கூறிவிடும். சிலர் பெத்லகேம் ஊரில் பிறந்தார் என்று கூறுவார்கள். ஆனால் இயேசுவின் பிறப்பில் ஒரு மர்மம் நீடிக்கத் தான் செய்கிறது.

பொதுவாக ஒவ்வொரு கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனைகளிலும், நாம் கேட்கும் தேவ செய்தியில், இயேசு ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் என்ற காரியம் தவறாமல் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் தான் நம்மில் பலரும் மேற்கூறிய பதிலை கூறி வருகிறோம். ஆனால் இயேசுவின் பிறப்பில் நாம் கவனிக்காமல் விட்ட ஒரு மறைந்திருக்கும் உண்மை உள்ளது. அதைக் குறித்து இந்தச் செய்தி காண்போம்.

ஆராய்ந்தது:

இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நான்கு சுவிசேஷங்கள் இருந்தாலும், அதில் இயேசுவின் பிறப்பைக் குறித்து மத்தேயு மற்றும் லூக்கா சுவிசேஷங்கள் மட்டுமே குறிப்பிட்டுள்ளனர். மாற்கு மற்றும் யோவானில் இயேசுவின் வளர்ந்த பிறகு நடந்த சம்பவங்களில் இருந்தே துவங்குகிறது என்பதை நாம் வேதத்தை ஆராய்ந்து பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

இயேசுவின் பிறப்பு என்பது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பல தீர்க்கத்தரிசிகளால் உரைக்கப்பட்ட ஒரு சம்பவம் ஆகும். எனவே பரிசுத்த வேதாகமத்தின் மிகப்பெரிய தீர்க்கத்தரிசனமான இயேசுவின் பிறப்பை குறித்து குறிப்பிடும் மத்தேயு, இஸ்ரவேல் மக்களுக்கு தெரிவாக புரியும் வகையில், இயேசுவின் வம்ச வரலாற்றை தெளிவாக கூறி சுவிசேஷத்தை ஆரம்பிக்கிறார். மத்தேயு:1.17 வசனம் வரை வம்ச வரலாற்றை கூறி, அடுத்த வசனத்திலேயே, மரியாளுக்குள் இயேசு பரிசுத்தாவினால் உருவானார் என்கிறார்.

அதன்பிறகு இயேசுவின் வளர்ப்பு பெற்றோராகிய யோசேப்பிற்கும் மரியாளுக்கும், காபிரியேல் தூதன் மூலம் வேத வார்த்தைகள் அருளப்படுகிறது. மத்தேயு:1.25, அதாவது அதிகாரத்தின் கடைசி வசனத்தில் இயேசு பிறந்தார் என்று மத்தேயு குறிப்பிடுகிறார். ஆனால் எங்கே பிறந்தார் என்ற தகவல் அளிக்கப்படவில்லை. இன்னும் தெளிவாக கூறினால், மாட்டுத் தொழுவம் என்ற வார்த்தையே அவர் பயன்படுத்தவில்லை.

மத்தேயு:2.11 வசனத்தைப் படித்தால், வானத்தில் தோன்றிய நட்சத்திரத்தின் உதவியுடன் இயேசு பிறந்த வீட்டை மூன்று சாஸ்திரிகள் அடைந்தார்கள் என்று காண்கிறோம். அங்கு, “அவர்கள் அந்த வீட்டிற்குள் பிரவேசித்து” என்றே மத்தேயு எழுதுகிறார்.

அடுத்தப்படியாக லூக்கா சுவிசேஷத்தைப் புரட்டுவோம். தனக்கு வசனத்தைப் போதித்தவர்கள் கூறிய தகவல்கள் அடிப்படையில், அவற்றை நன்றாக விசாரித்து அறிந்து சுவிசேஷத்தை எழுதுவதாக லூக்கா தொடங்குகிறார். லூக்கா:1.26 மரியாளை சந்திக்கிறார் தூதன் காபிரியேல்.

லூக்கா:2.5-6 வசனத்தில் குடிமதிப்பு எழுத தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு மனைவி மரியாளுடன் பெத்லகேமிற்கு வருகிறார். அங்கு மரியாளுக்கு பிரசவ வலி உண்டாகிறது. லூக்கா:2.7 இல் தனது முதற்பேரான குமாரனைப் பெற்றாள் என்று வாசிக்கிறோம்.

அதன்பிறகு சத்திரத்தில் இடம் கிடைக்காமல் போக, இயேசு குழந்தையை துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள் என்கிறார் லூக்கா. எனவே இங்கேயும் மாட்டுத் தொழுவத்தில் இயேசு பிறந்ததாக குறிப்பிடப்படவில்லை.

இயேசுவின் பிறப்பில் இஸ்ரவேல் நாட்டின் நிலையை மத்தேயு அதிகமாக குறிப்பிடுகிறார். அதே நேரத்தில் அவரது பிறப்பில் பாமர மக்களின் நிலையைக் குறித்து லூக்கா கூறுகிறார். இப்படி இரு வேறு கோணங்களில் இருந்து இயேசுவின் பிறப்பைப் பார்த்து எழுதியுள்ள மத்தேயுவும் லூக்காவும், மாட்டுத் தொழுவத்தைப் பற்றி குறிப்பிடவே இல்லை.

அப்படியென்றால் இன்று உலகமெங்கும் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்காக வைக்கப்படும் மாட்டுத் தொழுவம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி உண்டாகிறது. மேலும் வேதத்தில் இல்லாத ஒரு காரியத்தைக் குறித்து நாம் பல ஆண்டுகளாக நம்பியும், பேசியும் வந்துள்ளோம். மற்றவர்களுக்கு அறிவித்தும் உள்ளோம். இயேசுவின் பிறப்பில் எவ்வளவு பெரிய உண்மை மறைக்கப்பட்டுள்ளது பாருங்கள்.

இவ்விரு சுவிசேஷங்களின் சம்பவங்களை வைத்து பார்க்கும் இயேசு நிச்சயமாக, மாட்டுத் தொழுவத்திற்கு போகவே இல்லை என்பது உறுதியாகிறது. அப்படியென்றால், மத்தேயு கூறுவது போல ஏதாவது வீட்டில் வைத்து பிறந்திருப்பாரா? என்று கேட்டால், அது லூக்காவின் கோணத்தில் வைத்து பார்க்கும் போது தவறாகிவிடும். எனவே இரண்டு சுவிசேஷத்திற்கும் லூக்காவின் கூற்று மட்டுமே ஒத்துப் போகிறது.

அதாவது, பெத்லகேமில் உள்ள ஏதோ ஒரு சாலையில் வைத்து, இயேசுவின் பிறப்பு நிகழ்ந்துள்ளது. அதன்பிறகு மருத்துவ உதவிக்காக, சத்திரத்தைத் தேடியுள்ளார் யோசேப்பு. ஏனெனில் நல்ல சமாரியன் கதையில் வரும் சத்திரத்தில் மருத்துவ உதவி அளிக்கப்படுவதாக இயேசு கூறுகிறார். அதுவும் கிடைக்காமல் போகவே, ஏதோ ஒரு வீட்டில் அடைக்கலம் கிடைத்துள்ளது.

சிந்தித்தது:

தமது வார்த்தையினால் நாம் இன்று காணும் சகலத்தையும் சிருஷ்டித்தவரும், அவற்றை நடத்துகிறவருமான ஒரு தேவனுக்கு இந்த உலகில் பிறக்க இடம் கிடைக்கவில்லை. இதன்மூலம் இயேசு கூறியது போல, “மனுஷகுமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை” என்ற வார்த்தைகள் (லூக்கா:9.58) உண்மையாகின்றன. அவர் பிறப்பிலும், இறப்பிலும் தலை சாய்க்க இடம் கிடைக்கவில்லை.

எனவே நமக்கு வரும் கஷ்டங்கள், போராட்டங்களைக் கண்டு நான் ஏன் பிறந்தேன் என்ற கேள்வியோடு வாழாமல், எனக்கென தேவன் வைத்துள்ள மார்க்கத்தில் தொடருவேன் என்ற தைரியத்தையும் விசுவாசத்தையும் வளர்த்து கொள்வோம். இயேசு கிறிஸ்துவிற்கே இந்த உலகில் பிறப்பதற்கு இடம் கிடைக்காமல், சாலையில் பிறந்துள்ளார். அப்படியிருக்க நமக்கு மட்டும் அவ்வளவு எளிதாக இந்த உலக ஆசீர்வாதங்கள் கிடைக்குமா என்ன? ஆனால் சகல எதிர்ப்புகளையும் ஜெயித்து, முடிவில் சிலுவையில் சாத்தானையும் ஜெயித்தார் இயேசு. நாமும் அவரை போல ஜெயிப்போம்!

- கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்