இன்றைய கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோருக்கு இந்த ஆசை இருக்கிறது. தேவ சமூகத்தில் அதிக நேரம் ஜெபத்தில் செலவிட்டதாக மற்றவர்கள் கூறும் போது, கேட்க என்னமோ இனிமையாகத் தான் இருக்கிறது. ஆனால் அதை செயலில் கொண்டு வருவது எட்டக் கனியாகவே உள்ளது.

 

இதற்காக எவ்வளவோ முறை தீர்மானங்கள் எடுத்து பார்த்தாலும், பலருக்கும் தோல்வி மட்டுமே உண்டாகிறது. எனவே நீண்டநேரம் ஜெபிக்க வேண்டும் என்ற உங்கள் ஆசையை நிறைவேற்ற என்னென்ன செய்யலாம் என்பதை குறித்து இந்தச் செய்தியில் காண்போம்.

அனுபவித்தது:

ஒரு ஆண்டின் துவக்கத்தில் இருக்கும் நாம் இப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் எடுக்கும் பட்டியலில், நீண்டநேரம் ஜெபிக்க வேண்டும் என்பதும் இடம்பெறுகிறது. இதேபோல நானும் பல முறை தீர்மானங்கள் எடுத்தும், அதை நிறைவேற்ற முடியாமல் போனது தான் மிச்சம்.

இதனால் மிகவும் சோர்வடைந்த நான், அதை எப்படி அடைவது என்று ஆராய ஆரம்பித்தேன். இதற்காக அதிக நேரம் ஜெபிப்பதாக கூறும் நபர்களிடம் பேசினேன். அதிலிருந்து அந்த அனுபவம் ஒரே நாளில் வந்தது அல்ல என்பதை தெரிந்து கொண்டேன்.

எனவே ஒருநாள் எந்தப் பணியும் இல்லாமல் இருந்த போது, 10 நிமிடங்கள் ஜெபிக்கலாம் என்று அமர்ந்தேன். ஆனால் ஒரு நிமிடம் கூட என்னால் முழுமையாக ஜெபிக்க முடியவில்லை. ஏனெனில் அதற்குள் அன்று முடிக்க வேண்டிய மற்றும் நான் செய்ய மறந்த சில காரியங்கள் நினைவிற்கு வந்தது. உடனே அதைச் செய்ய சென்றுவிட்டேன்.

அடுத்த நாளும் அதேபோல 10 நிமிடங்கள் ஜெபிக்க அமர்ந்தேன். முந்தைய நாளைப் போலவே ஒரு நிமிடத்திற்குள் எல்லா பணிகளும் நினைவிற்கு வந்தது. யோசித்த போது, அவை அவ்வளவு முக்கியமானவை அல்ல என்று தோன்றியது. 5 நிமிடங்கள் ஜெபித்திருப்பேன், அதற்குள் ஒரு ஃபோன் அழைப்பு வந்தது. அதில் நான் ஜெபிக்க அமர்ந்த காரியத்தையே மறந்துவிட்டேன்.

மூன்றாம் நாளும் அதே 10 நிமிடம் ஜெபிக்க அமர்ந்தேன். முந்தைய நாளைப் போல 2 நிமிடங்களில் ஒரு ஃபோன் அழைப்பு வந்தது. நான் அதை பொருட்படுத்தவில்லை. சரியாக 10 நிமிடங்கள் ஜெபித்தேன். அன்று மனதில் பெரிய ஒரு சந்தோஷமும் சமாதானமும் உண்டானது. ஏதோ ஒரு பெரிய காரியத்தை சாதித்தது போல உணர்ந்தேன்.

4வது நாள் 10 நிமிடங்கள் ஜெபிக்க அமர்ந்தேன். கடந்த 3 நாட்களில் வந்த தடைகளையும் மீறி, வேறு பல காரியங்கள் குறுக்கிட்டன. ஆனால் அவற்றை கண்டுகொள்ளவில்லை. ஜெபத்தின் முடிவில் நான் 15 நிமிடங்களை செலவிட்டது தெரியவந்தது.

ஒரு வாரத்தில் எனது ஜெப நேரம் இனிமையாக மாறியது. இதனால் 30 நிமிடங்கள் வரை ஜெபத்தில் செலவிட ஆரம்பித்தேன். வெறும் ஜெபக் குறிப்புகளை மட்டும் சொல்வதை தவிர்த்து, இடையே இடையே பாடல்களையும், தேவன் செய்த நன்மைகளுக்காக துதிக்கவும் செய்ய துவங்கினேன்.

இதனால் 1 மணிநேரத்திற்கு மேலாக தினமும் ஜெபிக்க முடிகிறது. சில நாட்களில் அதையும் கடந்து விடுகிறது. இப்போதெல்லாம் ஜெபிக்காமல் என்னால் இருக்க முடியவில்லை என்ற நிலை உருவாகிவிட்டது. ஜெபிக்காவிட்டால் எதையோ தொலைத்து போல உணர்கிறேன்.

ஜெபிக்க தடை வருவது ஏன்?

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு காரியம் என்னவென்றால், நாம் ஜெபிக்க ஆரம்பிக்கும் போது, நமக்கு ஜெயம் உறுதியாகி விடுகிறது. எனவே பிசாசு அதை தடுத்து நிறுத்த எல்லா முயற்சிகளையும் செய்வான். இதனால் ஜெபிக்கும் போது, குறுக்கிடும் எந்தக் காரியத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க கூடாது. அல்லது தொந்தரவு இல்லாத இடத்தில் அமர்ந்து ஜெபிக்கலாம்.

மனஉறுதி தேவை:

ஜெபிக்க ஆசைப்படுவதோடு, அதற்கு நிலையான மனதோடு முயற்சிக்க வேண்டும். ஒரு நாள் நம்மால் ஜெபிக்க முடியாமல் போனது என்பதற்காக, அடுத்த நாள் சோர்ந்து போகக் கூடாது. நான் கூட பல நாட்கள் தோல்வி அடைந்தேன். ஆனால் அந்தத் தோல்விக்கான காரணத்தை கண்டறிந்த போது, ஜெபத்தில் ஜெயிக்க முடிந்தது. எனவே நாம் ஜெபிக்க வேண்டும் என்ற மனஉறுதியோடு செயல்பட வேண்டும்.

தினமும் 10 நிமிடங்கள் ஜெபிக்கலாம் என்று நான் துவங்கிய போது, முதல் நாளிலேயே எனது மனதை ஒருமுகப்படுத்த முடியவில்லை. அங்குமிங்குமாக அலைப் பாய்ந்தது. அந்தக் காரியத்தையும் தேவ சமூகத்தில் கொண்டு வந்த போது, பெரிய விடுதலை கிடைத்தது.

என்ன ஜெபிப்பது?

நமக்காக மட்டும் ஜெபிப்பதை தவிர்த்து, நம்மை சுற்றியுள்ள நண்பர்கள், உறவினர்கள், பழகியவர்கள், நம் நாட்டிற்காக, ஊர் மக்களுக்காக என்று ஜெபிக்கலாம். முதலில் நமக்கு தேவன் தந்த காரியங்களுக்காக நன்றி சொல்லும் போது, நாம் ஜெபிக்க வேண்டிய காரியங்களை, தேவனே நினைப்பூட்டுவார்.

உங்களுக்கும் சாத்தியமே

ஒரு கட்டத்தில் 5 நிமிடங்கள் தொடர்ந்து ஜெபிப்பதே கஷ்டமாக நினைத்த எனக்கு, இன்று 1 மணிநேரம் வரை ஜெபிக்க முடிவது வியப்பளிக்கிறது. என்னைப் போல இந்தச் செய்தியைப் படித்து கொண்டிருக்கும் பலருக்கும் நீண்டநேரம் ஜெபிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கலாம். ஆனால் அதற்கான முயற்சிகளில் தோல்வியும் கிடைத்திருக்கலாம்.

எனவே முதலில் 5 அல்லது 10 நிமிடங்கள் ஜெபிக்க ஆரம்பியுங்கள். அந்த நேரத்தை தேவனுக்கு என்று ஒதுக்கி வையுங்கள். அதற்கு தடையாக வரும் எந்தக் காரியத்தையும் பிறகு பார்த்து கொள்ளலாம் என்று நினையுங்கள். நம் மனது ஜெபத்தில் உறுதியாகிவிட்டால், 1 மணிநேரம் அல்லது ஒரு நாள் முழுவதும் ஜெபிப்பது கூட எளிதாக சாத்தியமாகும்.

- கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்