ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி இந்திய குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு தரப்பட்ட பகுதிகளில் இந்த நாள் விமர்சியாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட நமக்கு, குடியரசு தினத்தில் நினைவில் கொள்ள வேண்டிய சில காரியங்கள் உள்ளன.

ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ வேண்டிய சட்டத்திட்டங்களை வகுத்து, அதை நடைமுறைக்கு கொண்டு வந்த நாளை தான் குடியரசு தினம் என்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவிற்கான சட்டத்திட்டங்களை டாக்டர் அம்பேத்கார் தலைமையிலான குழுவினர் எழுதி அமைத்தனர். இந்திய அரசால் அது ஏற்றுக் கொள்ளப்பட்டு, நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்திய குடிமக்களில் உட்படும் நாமும், இந்தச் சட்டத்திற்கு உட்படுகிறோம்.

அதே நேரத்தில் இந்திய குடியரிமையை தவிர, இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு தேவ பிள்ளையும் பரலோகத்தின் குடியுரிமையும் (பிலிப்பியர்:3.20) அளிக்கப்படுகிறது. இந்த பரலோகம் செல்லும் குடிமக்களுக்கும் சில சட்டத்திட்டங்கள் இருக்கிறது. அதை முதலில் பெற்றவர் மோசே. சீனாய் மலையில் இஸ்ரவேல் மக்களுக்காக, தேவனிடத்தில் இருந்து பெற்றார்.

டாக்டர் அம்பேத்கார் காலத்தில் நடைமுறைக்கு வந்த பல சட்டங்களும், இந்த காலத்திற்கேற்ப சில மாற்றங்களைச் சந்தித்துள்ளன. ஏனெனில் அன்று இல்லாத பல புதுமைகளும் அறிவியல் வளர்ச்சியும் இன்று ஏற்பட்டுள்ளது. அதேபோல மோசேயிடம் அளிக்கப்பட்ட சட்டத்திட்டங்களை பூரணப்படுத்தும் வகையில், இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார்.

எந்தச் சட்டங்களை மக்கள் மிக கடினமானது என்று எண்ணினார்களோ, அந்த சட்டத்திட்டங்களை தன் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டினார். மோசேயின் சட்டத்திட்டங்களில் திருத்தம் செய்வதற்கு பதிலாக, அதன் உண்மையான பொருளை மக்களுக்கு வெளிப்படுத்தி கொடுத்தார். இதன்மூலம் அவற்றை இன்னும் எளிமைப்படுத்தி கொடுத்தார்.

இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தினால், இன்று நாம் யாரும் பாவங்களுக்காக ஆடு, மாடு, புறா ஆகியவற்றை பலியிடாமல், அவரது இரத்தத்தினால் சுத்திகரிக்கப்படுகிறோம். இது ஒரு எளிமையான மார்க்கம் அல்லவா?

இந்நிலையில் இந்தியாவில் பிறந்து வளர்ந்த நமக்கு இரண்டு நாட்டின் குடியுரிமை உண்டு. இந்தியாவில் வாழ, இந்திய சட்டத்திட்டங்கள் இருக்கிறது. பரலோகத்தில் வாழ, அந்நாட்டு சட்டத்திட்டங்களைக் கொண்ட பரிசுத்த வேதாகமம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டில் ஒன்றை மட்டும் நான் பின்பற்றி கொண்டு வாழ்கிறேன் என்று யாரும் கூற முடியாது.

இந்தியாவில் பிறந்து வாழ்ந்து கொண்டிருப்பதால், இந்திய சட்டத்திட்டங்களுக்கு நாம் கீழ்படிய வேண்டும். ஆனால் பரலோகத்தில் வாழ போகிறவர்கள் என்பதால், பரிசுத்த வேதாகத்தின் சட்டத்திட்டங்களுக்கு கீழ்படிய வேண்டியுள்ளது. உலகில் வாழும் போதே நாம் பரலோக சட்டத்திற்கு கீழ்படிந்தால் மட்டுமே, அங்கு நிரந்தர குடிமக்களாக மாற தகுதி பெற முடியும். நம் வாழ்க்கையில் வேதத்திற்கு கீழ்படிய ஒப்புக் கொடுக்கும் நாள், பரலோகத்தை பொறுத்த வரை, குடியரசு நாளாக கணக்கிடப்படுகிறது.

இந்திய சட்டத்தை மீறினால் தண்டனை உண்டு. அதேபோல பரலோகவாசி என்ற பெயரில் இருந்து கொண்டு, அந்நாட்டு சட்டங்களை மீறினால், நமக்கு அளிக்கப்பட்ட குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, வெள்ளை சிங்காசனத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டு நியாயம் விசாரிக்கப்படுவோம். அங்கு நம்முடைய எல்லா காரியங்களும் வெளியாகும் என்பதால், தேவனிடமிருந்து தப்ப முடியாது.

எனவே இந்தியர்களான நாம் இன்று குடியரசு தினத்தை கொண்டாடும் போதே, நமக்கு இருக்கும் மற்றொரு நாட்டான பரலோகத்தின் குடியரிமையை குறித்தும் மறக்கக் கூடாது. இந்த உலகில் தற்காலிகமாக வசிக்க வந்த நாம், அந்த நாட்டிற்கு செல்ல தேவையான ஆயத்தப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். இந்தக் காரியத்தை நமது மரணம் வரை அல்லது இயேசு இரண்டாம் வருகையின் நாள் வரை மறக்கவே கூடாது. 

- கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்