உலகத்தில் பல பாவங்களுக்கும் அடிமைப்பட்டு இருந்த நம்மை, இயேசுவின் விலையேறப்பட்ட இரத்தம் விடுவித்தது. ஞானஸ்நானம் எடுத்த பிறகு, பழையவைகள் ஒழிந்து போய், எல்லாம் புதிதாகின என்று வேதம் கூறுகிறது. இருப்பினும் இந்த உலகில் நாம் உயிரோடு இருக்கும் காலம் வரை, பழைய பாவ வல்லமைகள் நம்மோடு போராடிக் கொண்டே இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இந்நிலையில் நவீன காலத்தில் வாழும் நம்மை, உலகில் உள்ள பல காரியங்கள் அடிமைப்படுத்தி உள்ளன என்பதை எவ்வளவு பேர் உணர்கிறோம் என்று தெரியவில்லை. நாம் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதோ, மற்றவர்களைக் கொலைச் செய்வதோ இல்லை என்பது உண்மைத் தான். ஆனால் மறைமுகமான பல காரியங்களில் நமக்கே தெரியாமல் அடிமைப்பட்டு இருக்கலாம்.

அனுபவித்தது:

இதைப் பற்றி கூறும் போது, சில நாட்களுக்கு முன் நான் அனுபவித்த ஒரு சம்பவத்தைக் கூற விரும்புகிறேன். கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையில், நான் பயன்படுத்தி வந்த மொபைல்போன் இரண்டு மூன்று முறை முழுமையாக நனைந்துவிட்டது.

இதில் பழுதடைந்த அதை மேற்கொண்டு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஏறக்குறைய ஒரு வாரத்திற்கு நான் மொபைல்போனைப் பயன்படுத்தவில்லை. அலுவலக நண்பர்கள், வெப்சைட் வாசகர்கள், இ-மெயில் தொடர்புகள், வெளியிடும் செய்திகள் என்று பல தொடர்புகள் தடைப்பட்டன.

மற்றொரு மொபைல்போனை வாங்குவதற்குள் ஏறக்குறைய 10 நாட்கள் கடந்துவிட்டன. இந்நிலையில் பலரும் என்னிடம் வேறு நம்பர்களில் தொடர்பு கொண்டு, உங்கள் மொபைல்போன் என்ன ஆனது? ஏன் வேறு ஃபோன் வாங்கவில்லை என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அப்போது பலரும் கூறிய ஒரு காரியம் என்னவென்றால், என்னால் உங்களை மாதிரி இப்படி மொபைல்ஃபோன் இல்லாமல் இருக்க முடியாது! என்றனர்.

அதிலிருந்து மொபைல்ஃபோன் எந்த அளவிற்கு, நவீன கால மனிதனின் வாழ்க்கையிலும் முக்கியத்துவம் வகிக்கிறது என்பது தெளிவாக தெரிந்தது. இதையடுத்து மொபைல்போனின் பயன்பாட்டைக் குறித்து பயணிக்கும் போது, கூர்ந்து கவனித்தேன்.

மக்கள் உறங்கும் நேரத்தைத் தவிர, மற்ற எல்லா பணிகளின் இடையிலும் மொபைல்போன் பயன்படுத்துவதைக் காண முடிகிறது. தேவாலயத்திற்கு வந்தால் கூட, இருக்கும் இடத்தை மறந்து மொபைல்போனே கதியென இருப்பவர்களும் உண்டு. வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக தளங்களிலும், பலர் அதிக ஈடுபாடு காட்டுவதைப் பார்த்திருக்கிறேன்.

மொபைல்போன் அல்லது மேற்கூறிய சமூக தளங்களைப் பயன்படுத்துவதைத் தவறு என்று கூறவில்லை. ஆனால் அதுவே கதியென இருந்துவிட்டு, ஒரு கட்டத்தில் அவற்றிற்கு பலரும் அடிமையாகி விடுகிறார்கள் என்பது அதிக வருத்தத்தை அளிக்கிறது.

சிலர் டிவி நிகழ்ச்சிகள் அல்லது இன்டர்நெட்டில் அதிக நேரம் செலவிடுகிறார்கள். சில டிவி சீரியல் அல்லது நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாமல் போனால், வருத்தப்படும் கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள். இன்டர்நெட்டில் தினமும் புத்தகங்களைப் படிக்காவிட்டால், தூக்கம் வராதவர்கள் கூட உண்டு. இன்னும் சிலர் வீடியோ கேம்கள் விளையாடுவதில் பல மணிநேரங்களைச் செலவிடுகிறார்கள்.

இப்படி நம்மை சுற்றிலுள்ள பல காரியங்களிலும் நமக்கே தெரியாமல் நாம் அடிமைப்பட்டு இருக்கலாம். ஆனால் இந்த அடிமைத்தனம் வெளிப்படையாக தெரிவதில்லை. அவை இல்லாமல் இருக்கும் போது தான், எந்த அளவிற்கு அவற்றிற்கு நாம் அடிமைப்பட்டு இருந்தோம் என்று தெரியவரும்.

இதில் என்ன தவறு இருக்கிறது? என்று நாம் நினைக்கக் கூடும். ஆனால் அவற்றின் இழப்பை நம்மால் பொறுக்க முடியாமல், அதை மீண்டும் பெற எந்த விலையானாலும் கொடுக்கத் தயார் என்ற நிலைக்கு நாம் செல்லக் கூடும். மேலும் தேவ சமூகத்தில் நமக்கு இருக்க வேண்டிய மனதைத் திசைத் திருப்ப, மேற்கண்ட அடிமைத்தனங்களை ஆயுதமாக பிசாசு பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது. இதனால் நமது ஆவிக்குரிய வளர்ச்சி பாதிக்கப்பட்டு, தேவனோடு உள்ள உறவில் விரிசல் உண்டாகலாம்.

எனவே நாம் பயன்படுத்தும் அல்லது நம்மைச் சுற்றிலும் உள்ள ஏதாவது பொருளில் நாம் அதிக ஈடுபாடு காட்டுகிறோமா? என்று இன்றே பரிசோதிப்போம். அப்படி ஏதாவது ஒன்றில் உங்களுக்கு விருப்பம் வந்தால், அது இல்லாமல் உங்களால் இருக்க முடியுமா? என்று பரிசோதித்து பாருங்கள். அதற்கு சாத்தியப்படவில்லை என்றால், அதற்கு நீங்கள் அடிமைப்பட்டு உள்ளோம் என்பது தெளிவாகிறது.

சிந்தித்தது:

எந்த அடிமைத்தனத்தையும் மாற்ற வல்ல ஒரே ஆயுதம் தேவனுடைய அன்பு மட்டுமே. எனவே தேவ சமூகத்தில் நமது இயலாமையைத் தேவனிடம் தெரிவிக்கும் போது, அவரது அன்பினால் நமது இருதயம் நிரம்பும். அப்போது எல்லா அடிமைத்தனமும் நீக்கப்படும். ஏனெனில் குமாரன் விடுதலையாக்கினால், மெய்யாகவே விடுதலையாவீர்கள் என்று யோவான்:8.36 இல் வாசிக்கிறோம்.

ஏனெனில் சில அடிமைத்தனங்களில் இருந்து விடுபட நாம் சொந்த முயற்சிகளில் ஈடுபடுவது உண்டு. ஆனால் மனித முயற்சியில் சில நாட்கள் மட்டுமே சாத்தியமாகிறது. குறிப்பிட்ட சூழ்நிலை வரும் போது, மீண்டும் அதே பாவத்தில் முன்பைக் காட்டிலும் அதிகளவில் மூழ்கி போக வாய்ப்புள்ளது. ஆனால் தேவனிடம் இருந்து கிடைக்கும் விடுதலை மெய்யானது என்பதால், அது நிலையானதாக உள்ளது.

- கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்