தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரன் கூறுகிறார்...

என் வாழ்க்கையில் தேவன் எண்ணற்ற நன்மைகளைச் செய்துள்ளார். ஆனால் பல சந்தர்ப்பங்களிலும் நான் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டுள்ளேன். இதனால் தேவனுக்கு எவ்வளவு துக்கம் ஏற்பட்டிருக்கும் என்று இப்போது நினைத்தாலும், அழுகை வருகிறது. தேவன் செய்த நன்மைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டதால், என் வாழ்க்கையில் ஏற்பட்ட சில பின்னடைவுகளைச் சாட்சியாக கூற விரும்புகிறேன்.

நான் படித்த துறையிலேயே வேலை கிடைக்க வேண்டும் என்ற எனது ஜெபத்திற்கு தேவன் பதில் அளித்தார். அதன் பயனாக, எனது ஊரிலேயே குறைந்த சம்பளமாக இருந்தாலும், வேலை கிடைக்க தேவன் உதவி செய்தார். ஆனால் அதை நான் தேவாலயத்திலோ அல்லது தனிப்பட்ட முறையில் எனக்கு அறிமுகமான நபர்களுக்கோ, சாட்சியாக அறிவிக்கவில்லை.

எனது ஜெபம் கேட்கப்பட்டது என்ற திருப்தியோடு, பணியைத் தொடர்ந்தேன். சில மாதங்களுக்கு பிறகு, குறைந்த சம்பளம் என்பதால் பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிட்டது. நான் திரும்பவும் தேவனிடம் முறையிட ஆரம்பித்தேன். அப்போது வேத வசனம் மூலம் தேவன் என்னிடம் பேசினார்.

இரட்டிப்பான நன்மையைத் தருவேன் என்ற வாக்குத்தத்தத்தை (சகரியா:9.12) அளித்தார். அதேபோல ஒரு வருடத்திற்கு பிறகு, எனது சம்பளம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது. அதில் நான் சந்தோஷப்பட்டாலும், தேவாலயத்தில் சாட்சியாக அறிவிக்க வெட்கப்பட்டேன்.

நான் பணியாற்றிய நிறுவனத்தில் எனது சம்பளம் உயர்த்தப்பட்டதோடு, பல பொறுப்புகளும் அளிக்கப்பட்டன. இதனால் பல சோதனைகளின் வழியாக கடந்த செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் அவற்றில் எல்லாவற்றிலும் தோல்வி அடைந்தவனாக, தேவனுடைய நாமத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் ஒருவனாக மாறினேன்.

ஒரு கட்டத்தில் எனது நடவடிக்கைகளைக் கண்டறிந்த நிறுவனம், என்னை பணியில் இருந்து வெளியேற்றியது. நான் எந்த மாதிரியான தவறுகளைச் செய்தேன் என்பதை நன்கு உணர்ந்திருந்தேன். இதனால் அதற்கு எந்தச் சாக்குப் போக்குகளையும் கூற முடியவில்லை. மனதளவில் சோர்ந்து போன நிலையில், எதுவும் கூறாமல் வீடு திரும்பினேன்.

எந்த நிலையிலும் கைவிடாத தேவன், என்னை சந்தித்தார். தேவன் செய்த நன்மைகளை நான் நினைத்து பார்க்கவில்லை. ஆனால் அவர் எனது கஷ்ட நேரத்தில் என்னை நினைத்தருளினார். வேலை இழந்து வீட்டில் இருந்த போது, தேவனை நோக்கி கண்ணீரோடு ஜெபிக்க ஆரம்பித்தேன்.

அப்போது தேவனையும் அவர் செய்த நன்மைகளையும் நான் மறந்து செயல்பட்டதை, தேவன் உணர்த்தினார். எனது குறைகள், குற்றங்களை தேவ சமூகத்தில் அறிக்கையிட்டேன். தேவன் செய்த நன்மைகளுக்கு ஏற்ப, அவரை மகிமைப்படுத்தாமல் இருந்த தவறை, இனி செய்யமாட்டேன் என்று தேவ சமூகத்தில் தீர்மானம் எடுத்தேன்.

அப்போது தேவன் மீண்டும் அதே சகரியா:9.12 வசனத்தில் இருந்து பேசினார். இரட்டிப்பான நன்மையைத் தருவேன், என்பதோடு அதை இன்றைக்கே தருவேன் என்று சேர்த்து கூறினார். அதேபோல அன்றே எனக்கு புதிய பணிக்கான இன்டர்வியூ அழைப்பு கிடைத்தது.

அந்த இன்டர்வியூவில் எல்லாரையும் விட மோசமாக இருந்த எனக்கு, வேலை அளிக்கப்பட்டது. தேவன் வாக்களித்தது போலவே, நான் வாங்கி கொண்டிருந்த சம்பளத்தைக் காட்டிலும் இரட்டிப்பான சம்பளமும் கிடைத்தது. தேவ சமூகத்தில் எடுத்த தீர்மானத்தைப் போல, இதை தேவாலயத்தில் சாட்சியாக கூறினேன். இதிலிருந்து தேவன் எப்போதும் உண்மையுள்ளவராக இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

இந்தச் சாட்சியைப் படித்துக் கொண்டிருக்கும் அன்பான சகோதர, சகோதரி, உங்கள் வாழ்க்கையில் தேவன் செய்த நன்மைகளை மற்றவர்களுக்கு தெரிவிக்க வெட்கப்படாதீர்கள். சாட்சியாக கூற தயங்காதீர்கள். ஏனெனில் அது தேவனுடைய பார்வையில், மோசமான நடவடிக்கையாக மாறும்.

எனக்கு கிடைத்த முதல் வேலையைக் குறித்து நான் நன்றியுள்ள இருதயத்தோடு சாட்சியாக கூறியிருந்தால், மேற்கூறிய தேவையில்லாத பிரச்சனைகளில் அகப்பட்டிருக்கமாட்டேன். மேலும் தேவனை விட்டு விலகி போக வேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்காது. எனவே தேவன் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நன்றியுள்ள இருதயத்தோடு துதியுங்கள். சாட்சியாக மற்றவர்களுக்கு கூறுங்கள். இது நமக்கு மட்டுமின்றி, மற்றவர்களுக்கும் ஆசீர்வாதமாக அமையும்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்