2. பயத்தின் அளவு:

நீதிமானை தேவன் சோதிப்பது ஏன்? என்ற கேள்விக்கு, அவர் மீதான அன்பின் அளவை அறியவே என்று கடந்த பகுதியில் பார்த்தோம். அதே நேரத்தில்  அந்த அன்பு அதிகரிக்கும் போது, அன்புக்குரியவர் மீதான மரியாதையும் அதிகரிக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

ஒருவர் மீதான அன்பிற்கு ஏற்ப, அவர் மீதான பயத்தோடு கூடிய மரியாதை நமக்குள் அதிகரிக்கிறது. அதேபோல தேவனை எந்த அளவிற்கு நாம் நேசிக்கிறோமோ, அதற்கு ஏற்ப அவருக்கு பயத்தோடு கூடிய மரியாதையைச் செலுத்து வேண்டும். இந்நிலையில் ஒரு நீதிமானுக்குள் காணப்பட வேண்டிய, தேவ பயத்தின் அளவை தேவன் அவ்வப்போது சோதித்து பார்க்கிறார்.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக, விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாமை எடுத்து கொள்ளலாம். அவரது வாழ்க்கையில் முதிர்வயதில் கிடைத்த ஒரு மகனை பலியாக அளிக்குமாறு தேவன் கேட்கிறார். அதைப் பற்றி அதிகம் யோசிக்காத ஆபிரகாம், தான் 25 ஆண்டுகளாக காத்திருந்த பெற்ற ஈசாக்கை, தேவனுக்கு கொடுக்க முன்வருகிறார்.

ஆதியாகமம்:22.12 வசனத்தில், ஈசாக்கை வெட்டுவதற்கு கத்தியை ஓங்கும் வரை, தேவன் எதுவும் பேசவில்லை. இனி விட்டால், ஆபிரகாம் அதையும் செய்து விடுவார் என்ற நிலை வந்தபோது, ஆபிரகாமை தடுத்து நிறுத்தும் தேவன், “நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்பதை இப்போது அறிந்திருக்கிறேன்” என்று கூறுவதைக் காணலாம்.

நம் வாழ்க்கையில் இதுபோன்ற சோதனைகளைத் தேவன் அளித்து, அவர் மீது நமக்கு இருக்கும் அன்பின் அளவை தேவன் பரிசோதிக்கிறார். இதன் ஒரு பகுதியாக, பல காலமாக நாம் காத்திருந்து பெற்ற பல ஆசீர்வாதங்களும் நம் கைவிட்டு போனது போன்ற சூழ்நிலை உண்டாகலாம். இந்தச் சந்தர்ப்பங்களில், தேவனை நோக்கி எதிர்த்து பேசுவதோ அல்லது மறுதலிப்பதோ கூடாது. மாறாக, தேவன் கூறும் காரியங்களை அப்படியே கீழ்படிந்தால் போதும்.

தேவன் கேட்ட காரியத்தில் சில திருத்தங்களைச் செய்ய ஆபிரகாம் முயற்சி செய்யவில்லை. எடுத்துக்காட்டாக, மகனை தருமாறு தானே தேவன் கேட்டார்? ஆகார் மூலமாக பெற்ற இஸ்மவேலை அளிக்கிறேன் என்று ஆபிரகாம் கூறவில்லை. அதாவது தேவனுக்கு செய்யும் காரியத்தை முழு மனதோடு செய்தார்.

அதன் விளைவாக, உன் ஏக மகன் என்றும் பாராமல் அவனை எனக்காக ஒப்புக் கொடுத்தாய் என்று பாராட்டும் கர்த்தர், ஆபிரகாமை மட்டுமின்றி அவர் தலைமுறை முழுவதையும் ஆசீர்வதிக்கிறார். இது போன்ற ஒரு பூரணமான அன்பில் உருவாகும் தேவ பயத்தைத் தான் தேவன் நம்மிடமும் எதிர்பார்க்கிறார்.

தேவன் மீதான அன்பில் பூர்ணமாக இருந்த ஆபிரகாமிற்கு, அவனைச் சுற்றிலும் இருந்தவர்கள் பயப்பட்டார்கள். தேவன் மீதான அன்பு நமக்குள் இல்லாவிட்டால், அவருக்கு பயப்படுகிற பயமும், அதனால் வரும் அவர் மீதான மரியாதையும் இருக்காது. தேவ அன்பு இல்லாத இடத்தில், மனிதரின் அன்பும் உலகப் பொருட்களின் மீதான இச்சையும் நுழைந்து விடுகிறது. இதனால் உலக காரியங்களை எண்ணி வருத்தமும் சஞ்சலமும் நம் மனதில் குடியேறுகிறது. அதை லோத்தின் வாழ்க்கையில் காணலாம்.

எனவே தேவன் மீதான அன்பை அல்லது பயத்தை, நாம் நிரூபிக்கும் ஒரு வாய்ப்பாக சில சோதனைகளை நம் வாழ்க்கையில் அனுமதிக்கிறார். அந்த வாய்ப்பைச் சரியாக பயன்படுத்திக் கொண்ட ஆபிரகாமின் தலைமுறையே ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டது. அதேபோல நாமும் இந்த சோதனைகளில் சோர்ந்து போகாமல், தைரியமாக எதிர்கொண்டு ஜெயமெடுப்போம். தேவன் மீது முழு மனதோடு அன்பு கூர்ந்து, தேவ பயத்தில் வாழ்ந்து நமக்கு இருக்கும் ஜெயமான ஆசீர்வாதங்களைப் பெற்றுகொள்வோம்.

(பாகம் -3 தொடரும்)

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்